கர்நாடகா பயணம் - 4

         மதுரை, விருதுநகர் போன்ற வறட்சியான இடங்களிலிருந்து வந்த எங்களுக்கு குளுமையான பருவநிலையும், காவேரி ஆற்றின் தண்ணீரும் எங்களை உற்சாகமாக பயணிக்க வைத்தது. 15 நிமிட பயணத்திற்கு பிறகு டுபாரே யானைகள் காப்பகத்திற்கு வந்து சேர்ந்தோம்.


          காவேரி ஆற்றங்கரையில் டுபாரே  யானைகள் காப்பகம் அமைத்திருந்தது. மற்ற இடங்களைப் போல் அல்லாமல் இங்கு ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பெரியதும் , சிறியதுமான பாறைகளில் நீர்ப் பெருக்கு மோதி நுரைத்து வெண்ணிறமாக காவேரி வழிந்தோடிக் கொண்டிருந்தாள். நதியின் ஆழத்தில் நீரில் தோய்ந்து உருண்டு சிறுத்த கூழாங்கற்கள் சிரித்துக் கொண்டிருந்தன. மக்கள் வெள்ளத்தோடு  நதியின் பேரோசையும் எங்களை அன்போடு வரவேற்கும் உணர்வை அடைந்தேன். இங்கு படகு சவாரியும் இருந்தது. ஆனால் யானைகள் காப்பகத்திற்குச் செல்ல காவேரி ஆற்றினை நடந்து கடக்க வேண்டியிருந்தது. படகு சவாரிக்கு டிக்கெட் எடுக்க கூட்டம் அதிகமாக இருந்ததால், நாங்கள் அதை தவிர்த்து விட்டு காவேரியை கடக்க ஆற்றிற்குள் இறங்கினோம்.


           காவேரி ஆற்றினை சுற்றுலாவாசிகள் கடந்து செல்ல ஏதுவாக மணற் மூட்டைகள் ஆற்றிற்குள் போடப்பட்டிருந்தன. ஆயினும் மக்கள் கூட்டத்தில் மணற் மூட்டைகள் பெரும்பாலும் சேதமாகி இருந்தன. 2 அடி ஆழம் தண்ணீர் விசையுடன் பாய்ந்தோட வழியெங்கும் நிரம்பியுள்ள கற்களும், ஆங்காங்கே உள்ள பெரும் பாறைகளும் இருந்தது எங்களுக்கு ஆற்றினை கடப்பது பெரும் சவாலாக இருந்தது. ஒவ்வொரு அடியும் மிக கவனமாக எடுத்து வைத்து நதியினுள் நடந்து கொண்டிருந்தோம். இக்கரையிலிருந்து அக்கரை வரை மக்கள் கூட்டம் நீண்டு சென்று கொண்டிருக்க முன்னால் செல்பவர்கள் எங்கு, எப்படி கால் வைத்து முன் நகர்வது என்பதை அறியாமல் ஆங்காங்கே உறைந்து நிற்க பின்னிருக்கும் மக்கள் முண்டியடித்து செல்லும் போது எங்களை தள்ளி விட வாய்ப்பும் இருந்தது. நானும் ஷீலாமதினியும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு வழுக்கும் பாறைகளில் கவனமாக கால் வைத்து மெதுவாக நடக்க அருணா மதினியோ எதிர் வரும் ஆட்களின் கைகளைப் பிடித்து கொண்டே முன்னேறி சென்று கொண்டிருந்தார். நாங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே ஆற்று நீரினில் விளையாட ஆசைப்பட்டு ஒரு பெரிய கல்லின் மேல் நானும் மதினியும், இன்னொரு கல்லில் அருண்சியும், கீர்த்தியும் உட்கார்ந்து விளையாட ஆரம்பித்தோம். ஆரிஷும், அருணா மதினியும் விறு விறு வென ஆற்றின் பாதி தூரத்தினை கடந்து சென்றதை பார்த்து நாங்களும் நடக்கத் தொடங்கினோம். ஒரு கிலோ மீட்டர் அகலமுள்ள அந்த ஆற்றுப் பாதையை ஒரு வழியாக கடந்து வந்தோம்.யானை முகாமிற்கு நுழைவுச் சீட்டினை எடுக்க வரிசையில் நின்றோம்.


         ஒரு நபருக்கு 100 ரூபாய் என நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொண்டு முகமிற்குள் நுழைந்தோம். இந்த யானை முகாமும் காவேரி கரையோரம் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. நெடிதுயர்ந்த மரங்களால் ஆன அடர் காட்டுப் பகுதி யானை முகாமிற்காக மரங்கள் வெட்டப்பட்டு மைதானங்களாக உருவாக்கியிருந்தனர். யானைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு மக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு யானைக்கும் தனித்தனி யானைப் பாகன்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இங்கு யானைகளை குளிப்பாட்டுவதற்கும், உணவு கொடுப்பதற்கும் யானைப் பாகர்களின் கண்காணிப்போடு சுற்றுலாப் பயணிகளும் பங்குகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. 


காலை நேரம் மட்டுமே அந்நிகழ்வுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.யானையை குளிப்பாட்ட முடியாமல் போனதை நினைத்து ஏமாற்றத்தோடு அருண்சி புலம்பிக் கொண்டே வந்தாள்.நாங்களும் ஏமாற்றத்தோடு அங்கிருந்த மற்ற யானைகளை பார்த்துக் கொண்டே காட்டினை வலம் வந்தோம்.     யானை முகாமில் ஓரிடத்தில் பெரிய மைதானம் ஒன்று உருவாக்கப்பட்டு அதனைச் சுற்றி 2 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு அதில் குட்டி யானைகளை சங்கிலியால் பிணைக்கப்பட்டு பராமரித்து வைத்திருந்தனர். குட்டி யானைகளின் சேஷ்டைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு களிப்பதற்கு மைதானத்தின் ஒரு பக்கம் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் 2 யானைக்குட்டிகள் அதனதன் யானைப் பாகன்களோடு விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். பணியாள் ஒருவர் யானைக் குட்டிக்கு உணவூட்ட முயல அது தனது தும்பிக்கையை சுழற்றி அவர் தலையையும் , தோள்களையும் பற்றி இழுத்துக் கொண்டிருந்தது. அது ஓயாமல் தனது உடம்பை இசையை கேட்டு ஆடுவது போல் ஆட்டிக் கொண்டிருந்தது. மற்றொரு யானை மண்ணை இறைத்து அதன் தலையில் போட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு யானை சுற்றுச் சுவரில் விடாமல் உரசவும், மோதவுமாக விளையாடிக் கொண்டிருந்தது. கால்களைத் தூக்கி முன்னும் பின்னும் மாற்றி மாற்றி வைத்து நிலையில்லாமல் நிற்க அவ்வப்பொழுது தலையினை பலமாக ஆட்டிக் கொண்டிருந்தது.  சிறிது நேரத்தில் அங்கிருந்து விலகி மற்ற யானைகளை பார்வையிடச் சென்றோம். எங்கள் அனைவருக்கும் காட்டிற்குள் உலாவும் யானைகளை பார்க்கவே விருப்பமாயிருந்தது. சங்கிலியால் பிணைக்கப்பட்ட யானைகளை பார்த்ததில் அவ்வளவாக உவகை அளிக்காவிட்டாலும் அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் காவேரியை கடக்க இறங்கி வந்தோம். 


         ஷீலா மதினி மிகவும் களைத்திருந்தார். மதினி என்னிடம்


" இவ்ளோ கஷ்டப்பட்டு ஆத்தை கடந்து வந்தா கட்டிப் போட்ட ஆனையை காமிக்கிறாங்க…. இதுல திரும்பி வேற இதைக் கடக்கனுமே" என்றார். நான்


" எனக்கு இது தான் பிடிச்சிருக்கு மதினி விஜய் கூடவோ பொன்ராஜ் கூடவோ வந்தால் தண்ணிக்குள்ள எறங்க விட மாட்டாங்க…மேன் வெர்ஸல் ஒய்ல்ட் ல வர்ற பேர் கிரில்ஸ் பண்ற அளவுக்கு சாகசம் இல்லாட்டி கூட ஏதோ நம்மால முடிஞ்சது இது… இந்த காவேரியை கடக்கிறது தான் எனக்கு ரொம்ப பிடிச்சது." என்று கூறி ஆற்றுக்குள் 

இறங்கினோம்.


    நாங்கள் ஆற்றுக்குள் இறங்கும் பொழுது ஆரிஷ் பாதி தூரத்தை கடந்து சென்று கொண்டிருந்தான்.நாங்களும் தட்டுத் தடுமாறி கரை வந்து சேர்ந்தோம். ஆரிஷிடம் மதினி

  

" என்னடா எங்களை அம்போனு விட்டுட்டு வந்துட்ட" என்றார்.


" போங்கம்மா நீங்க தண்ணில ஊர்ந்துட்டே வர்ரீங்க என்னைக்கு வந்து சேர்றது… பார்த்தேன்… அதேன் … நான் பாட்டுக்கு வந்துட்டேன். " என்றான் .


அருண்சி கீர்த்தியை இழுத்துக் கொண்டு கடைசியாக கரை சேர்ந்தாள். கரை கடந்து சோர்த்திருந்த அனைவரும் தேநீர் அருந்தலாம் என அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றோம். தேநீரும், சமோசாவும் ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு வெளியேறினோம். ஆரிஷ் பார்க்கிங் ஏரியாவிலிருந்து காரை எடுத்து வர நாங்கள் அனைவரும் காரில் ஏறினோம். அடுத்து எங்களது தங்குமிடத்திற்கு அருகிலுள்ள ராஜா சீட் பூங்காவிற்கு செல்ல பயணித்தோம்.



         ஒரு மணி நேர பயணத்திற்கு பின்பு ராஜா சீட் பூங்காவிற்கு வந்தோம். ஆரிஷ் கார் பார்க் செய்ய நாங்கள் நுழைவு சீட்டு வாங்குவதற்கான வரிசையில் நின்றோம். நபருக்கு 10 ரூபாய் மதிப்புள்ள நுழைவுச் சீட்டினைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றோம். பூங்காவிற்கு அருகிலேயே சிறுவர்கள் விளையாட்டுப் பூங்கா ஒன்றும் இருந்தது. அதற்கு தனியாக நுழைவுக் கட்டணம் இருந்தது. கீர்த்தி அங்கு போக வேண்டி அடம்பிடித்து கொண்டிருந்தாள். அருண்சி கீர்த்தியிடம்


" கீர்த்தி…. முதல்ல இந்த பார்க் பார்ப்போம்… அப்புறம் அம்மா உன்னை அங்க கூட்டிப் போறேன்" எனக் கூறி சமாதனம் செய்தாள்.


பூங்காவிற்குள் நுழைந்த சில மணித் துளிகளிலே நன்கு இருட்டத் தொடங்கியது மலைப் பிரதேசத்தின் இனிய குளிரும் ஏறி வரத் தொடங்கியிருந்தது. பூங்கா மலர்களின் மணத்தை மெல்லிய குளிர் காற்று ஏந்தி வர பச்சைப் பசும் புல்வெளியில் வண்ண விளக்குகள் ஒளிர பூங்காவினைச் சுற்றி வலம் வந்தோம். பூங்காவில் இன்னிசை நீருற்று ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்தது. காவேரி பற்றிய கன்னடப் பாடல் ஒன்று S.P.B. குரலில் ஒலிக்க  வண்ண விளக்குகள் ஒளிர   நீருற்று நடனம் ஆடுவது போன்ற ஒரு உணர்வை பார்வையாளர் களுக்கு அளித்தது. குளிரில் நடுங்கி கொண்டிருந்த என்னிடம் ஷீலா மதினி  



"இந்த குளிருக்கு S.P.B. வாய்ஸ் தாய்க் கோழியின் சிறகு போர்த்திய கோழிக் குஞ்சின் கதகதப்பை உணர்கிறேன் மது" என்றார்.


 " மதினி பின்றீங்க…. கவிதையா?" என்றேன்…


 " இல்லடி இந்த குளிர், இருட்டு, S.P.B. வாய்ஸ் அப்படியே புல்லரிக்க வச்சிருச்சு…. அதான்…" என்றார்.


" ம்ம்…. " 


மதினியின் சொற்களின் வழியாக அந்த கதகதப்பில் நானும் இணைந்து கொண்டேன்.அதனை சிறிது நேரம் பார்த்து விட்டு கீர்த்தி, அருண்சி, அருணா மதினி மூவரும் குழந்தைகள் விளையாட்டு அரங்கிற்குள் சென்று விட்டனர். நான் ஷீலா மதினி, ஆரிஷ் மூவரும் மலை உச்சியிலிருந்து நகரினைப் பார்க்கும் காட்சி முனைக்கு வந்து சேர்ந்தோம். இப்பொழுது காற்றில் குளிர் இன்னும் ஏறி வந்திருந்தது. கைகளை இறுகக் கட்டிக் கொண்டு மின் விளக்குகளின் வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த நகரின் அழகை கண்டு கொண்டிருந்தோம். ஓரிடத்திலேயே நின்று கொண்டிருந்த எனக்கு அங்கு நிலவிய குளிர் காற்றினால் நடுங்கத் தொடங்கினேன். அதனால் பூங்காவினைச் சுற்றி சிறிது வேகமாக நடைபயிற்சி மேற்கொண்டேன். உடம்பில் சிறிது வெப்பம் அதிகரிக்க நடுக்கம் குறைந்தது. கீர்த்தியும் விளையாடி முடித்து வந்தாள். நாங்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு இரவுணவிற்காக ஒரு உணவகத்திற்கு வந்தோம். 


      அந்த உணவகத்தில் அனைத்தும் காலியாகிருந்தன. தொடர்ந்து நிறைய உணவகங்களில் அதே நிலையே இருந்தன. மதுரையில் இரவு 1 மணிக்கு கூட உணவகங்ளில் உணவு கிடைக்கும். இங்கு 8.30 க்கே உணவில்லை என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வழியாக நாங்கள் முதல் நாள் சாப்பிட்ட  மெஸ்ஸில் சப்பாத்தி மட்டும் கிடைத்தது, அங்கு சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம் .


            நான் தினமும் 6 லிருந்து 8 கி.மீ நடை செல்லும் பழக்கம் இருப்பதால் எவ்வளவு நடந்தாலும் கால் வலி இருக்காது. ஆனால் இன்று காவேரியை கடந்தத்தில் கூழாங்கற்களின் அழுத்தத்தினால் பாதங்களில் நல்ல வழியை உணர்ந்தேன். நிறைய இடங்களில் கால் இடறியதில் சிறு சிறு காயங்களும் இருந்தன. ஷீலா மதினி கொடுத்த எண்ணெயை பாதங்களில் தேய்த்து விட்டுக் கொள்ள நல்ல உறக்கம் கண்களை அழுத்த படுக்கையில் விழுந்தேன்.


       வழக்கம் போல் காலை 5 மணிக்கு விழித்தேன். அனைவரும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார்கள். நான் அன்றைய ஜெ தளத்தின் பதிவுகளை வாசித்துக் கொண்டிருந்தேன். முதல் நாள் பால்கனியில் பார்த்த விடியலின் ஞாபகம் உந்த எழுந்து குளித்து முடித்து பால்கனிக்கு விரைந்தேன். மற்றவர்கள் ஒவ்வொருவராக எழுத்து தயாராகி கொண்டிருந்தார்கள்.நான் பால்கனிக்கு செல்ல அதே மெல்லிய பனிக் காற்று என்னை வருட, அந்த விடியல் வெளியில் ஒலித்த பறவைகளின் ஓசையும், காற்றின் சலசலப்பும் என் தனிமையும்



  " எத்தனை ஒலிகளால் ஆனது காலை! காலை ஒரு பெரும் வான்பொழிவு. குழவிமேல் மெல்ல வருடிச்செல்லும் அன்னையின் கை என தென்றல். காலையில் தனித்திருப்பவர் குறைவு. காலைத்தனிமை ஓர் இனியதவம்" 



என்று ஜெயின் வரிகள் நினைவில் ஓட விடியலில் கரைந்து கொண்டிருந்தேன்.சிறிது நேரத்தில் அருணா மதினியும் ஷீலா மதினியும் என்னுடன் இணைந்து தொண்டார்கள். நாங்கள் அனைவரும் காஃபி அருந்தி விட்டு அடுத்த புறப்பாட்டிற்கு தயாரானோம். பின் தங்குமிடத்தை காலி செய்து எங்களது பயணப் பைகளை   காரில் ஏற்றி விட்டு காலை உணவிற்காக உணவகம் சென்றோம். இரவு சாப்பிட்ட அதே மெஸ்ஸில், பூரி. வடை, இட்லி… என ஆளுக்கொன்று ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு  அடுத்து காண வேண்டிய இடமான ஷக்லேஷ்புர் கோட்டைக்கு பயணித்தோம்.


 



          

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பென்சாம்- வாசிப்பனுபவம்

மார்க்கெட் நாட்கள்