"அப்பா"- சிறுகதை

அலாரம் அடித்துக் கொண்டிருந்த கடிகாரத்தை கண்ணைத் திறக்காமலே முகச் சுளிப்போடு அணைத்தாள் ராணி. தன்னை அணைத்துப் படுத்திருக்கும் இரண்டு வயது மகனை மெதுவாக விடுவித்து எழுந்தாள். மூன்று மாத கருவின் சுகவீனம் காரணமாக எழுந்த உடனே அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. கழிவறைக்கு சென்று வந்த பிறகு ஓரளவிற்கு ஆசுவாசமாக இருந்தாலும் தலைசுற்றல் லேசாக இருந்தது. சிறிது நேர ஓய்வை வேண்டிக் கெஞ்சியது அவளது உடல். படுக்கை அறையிலேயே உள்ள நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்த போது இன்று வரவிருக்கும் தனது பெற்றோரை எண்ணி அவளது எண்ணங்கள் எங்கெங்கோ சென்றது.


இரண்டு வருடத்திற்கு முன்னால் கிராமத்தில் சிறிய வீட்டில் வசதி குறைவாக இருந்த போதும் ஒரு இனிமையான வாழ்வாக இருந்தது. ஏனோ அப்பாவிற்குத்தான் தன் மகள் மாதச் சம்பளத்தில் சிக்கனமாக குடும்பம நடத்துவது அவர் கெளரவத்திற்கு இழுக்கு என்பது போல் உணர்ந்து வீட்டிற்கு வரும் நாட்களில் என்னிடமும், என் அத்தானிடத்திலும் குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்க பிரச்சினை பெரிதாக வெடிக்க ஆரம்பித்தது. பிரச்சினைகளோடு மல்லுக்கட்ட முடியாமல் போகவே அத்தான் விஷம் அருந்தி விட்டார். இப்படியான எண்ணங்கள் மனதில் மோதிக் கொண்டிருக்க ராணியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிய கண்களை மூடி தன்னை அறியாமல் அயரத் தொடங்கிய போது 


‘“ராணி! ராணி! ‘“ என்று அத்தை கூவிக் கொண்டிருந்த சத்தம் கேட்டு திடுக்கென எழுந்து வேகமாக அறையின் கதவை திறந்து அடுப்பங்கரைக்குச் சென்றாள்.அவளைப் பார்த்த அத்தை


‘“என்ன…. இன்னும் குளிக்கல””


“ இல்லை அத்தை …. கொஞ்சம் தலைசுத்துச்சு… அதான் …”


“ சரி சரி… இப்ப எப்படி இருக்கு”


“ இப்ப பரவால்ல அத்தை… குளிச்சிட்டு வந்துடுறேன்”


“ இல்லை இங்க  ராஜமா தனியா வேலை பார்க்கிறாளேனு கூப்பிட்டேன்… போ… போய்… குளிச்சிட்டு வா…”


ராணி குளித்து முடித்து வெளிவந்த போது அத்தான் நாகராஜ் எழுந்திருந்தார். ராணி அவசரமாக தன்னை தயார்படுத்திக் கொண்டு வீட்டு வேலைகளை செய்யத் தொடங்கினாள். நாகராஜ் எழுந்து வீட்டின் பொது அறைக்கு வந்த போது அண்ணன் கேகரன் கணக்கு நோட்டுகளை வைத்து உட்கார்ந்திருந்தார். நாகராஜும் சேகரனுடன் இணைந்து முந்தின நாள் கணக்கு வழக்குகளை பார்த்து விட்டு 

கடைக்கு கிளம்ப ஆயத்தமானார்கள்.


கடைக்கு கிளம்பிய நாகராஜ் வெகு நேரமாக பீரோவில் வைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை தேடிக் கொண்டே இருந்தார். கிடைத்த பாடில்லை…. துணிகளுக்கு இடையில் இருக்குமா என்று தேடியவாரே 


“ராணி! ராணி! ‘“ என்று கூவினார்…


பாத்திரம் கழுவி கொண்டிருந்த ராணி ஈரக்கையை தனது சேலைத் தலைப்பால் துடைத்தபடி வந்து நின்றாள்.” என்னங்க… என்ன ஆச்சு… என்ன வேணும்’” என்றாள்.


‘“ நேத்து நைட் இங்க வைச்ச பணத்தை யாராச்சும் எடுத்தாங்களா?”....பாத்தியா…”


“ நா பாக்கலயே… எங்க…. அடுப்பாங்கரைலயே  எனக்கும், அக்காவுக்கும் ஆவி போகுது….இதுல இங்க யார் வர்ரா… போறா னு நான் எங்க பாக்க…. அத்தைட்ட கேட்டுப் பாருங்க… அவங்களுக்குதான் வீட்டில் எனக்கு என்ன வேலை கொடுக்கலாம் னு வீட்டையே சுத்தி சுத்தி வர்றாங்க….”


“"போடி… போ… நான் என்ன கேட்டா… இவ என்ன சொல்றா… பாரு… போய் எனக்கு சாப்பாடு எடுத்து வை… 


நாகராஜ் மீண்டும் ஒரு முறை எல்லா இடத்திலும் தேடினார் பணத்தை அப்பா எடுத்திருப்பாரோ என்ற ஐயத்தில் அவரிடம் கேட்கலாம் என முடிவு பண்ணி அப்பாவின்  அறைக்கு செல்ல அங்கு விஜயின் அழுகுரல் கேட்க  அறைவாசலில் நின்று பார்த்த காட்சி நாகராஜை திடுக்கிடச் செய்தது. அப்பா விஜய் விளையாடிக் கொண்டிருந்த கார் பொம்மையை பிய்த்துக் கொண்டிருந்தார். அந்நேரம் ராணியின் அழைப்புக் குரல் கேட்டு நாகராஜ் சாப்பிடச் சென்றார்.



ராணி நாகராஜிற்கு இட்லியை பரிமாறிய படி…


‘“ என்னங்க  நேத்து தீபாவும், விஜயும் விளையாண்டுட்டு இருக்கிறப்ப சண்ட போட்டு விஜய் தீபாவை கிள்ளி வைச்சு ரத்தம் வந்துடுச்சுங்க…”


“அப்புறம்””... 


‘. அப்றம் என்ன ரெண்டடியைப் போட்டு நம்ம ரூமுக்கு இழுத்துட்டு போய்ட்டேன்… இன்னிக்கு காலைல நான் குளிக்க போனப்ப அக்காட்ட விஜய பார்த்துக்க சொல்லி விட்டுட்டு போனேன்…”


“"ம்ம்…”


“ அக்கா விஜயை கதற கதற நகத்தை ஒட்ட வெட்டி விட்றுந்தாங்க…. ரத்தமே வந்துடுச்சு…. ரெண்டு வயசு பய னு கூட இரக்கமே இல்லயாங்க… அவங்களுக்கு…”


“ சரி சரி விடு…. இதெல்லாம் பெருசு படுத்தாத…. பெரியவங்க கிட்ட கொஞ்சம் அனுசரிச்சுத்தான் போனும்”.


“ இப்டியே சொல்லுங்க…எங்கப்பா  எடுத்து கொடுத்த சாட்டின் சேலையை உடுத்திட்டு நின்னா…அக்கா இன்னும் கணக்கு வாத்தியார் பொண்டாட்டி னு நெனப்புல மினுக்கிட்டு நிக்கிற…னு குத்தி காமிச்சு பேசுறாங்க… இப்படியெல்லாம் பேசினா எரிச்சலா வருது…”


“ சரி விடும்மா…. எல்லாம் சரி ஆகும்… சாப்டறப்ப இப்படி பஞ்சாயத்தை இழுந்துட்டு வந்தா…. நான் சாப்டறதா வேணாமா… எனக்குந்தான் ஆயிரத்தெட்டு டென்ஷன்… என்ன பண்ணச் சொல்ற…போய் என் மாத்திரையை எடுத்துட்டு வா…போ…”


“ நான் ஒன்னுஞ் சொல்லல… நீங்க சாப்பிடுங்க…”. கண்களில் பெருகி வந்த கண்ணீரை துடைத்தபடி எழுந்து சென்றாள் ராணி.


நாகராஜ் கையை கழுவிட்டு எழுந்து கடைக்குச் செல்ல ஆயத்தமானார் மீண்டும் ஒரு முறை அறையில் இருந்த அலமாரியில் பணத்தை தேடிப் பரர்த்தார்.அங்கும் கிடைக்காத போது மனம் வெதும்பி சைக்கிள் சாவியை எடுத்துவிட்டு அறையில் இருந்து வெளியேறிய போது எதிரில் வந்த ராணி


“ என்னங்க…” என இழுத்தாள்…


“என்ன விருட்டுனு சொல்லு…. கடைக்கு நேரமாச்சு..”


“ இன்னிக்கு அப்பா என்னைய ஊருக்கு கூப்ட்டு போக வர்றாரு …… கொஞ்சம் கறி எடுத்து கொழம்பு வைக்கட்டுமா…”


“ அதை எதுக்கு என்கிட்ட கேக்குற… போய் அண்ணிட்ட கேளு…”


“ கறி எடுக்க காசு”


“ என்கிட்டலாம்  பைசா இல்ல …அப்டியே இருந்தாலும் அண்ணன்கிட்ட கேக்காம  கொடுக்க முடியாது… இதெல்லாம் அம்மாட்ட கேளு…. கொடுத்தா வாங்கி வை… இல்லாட்டி உள்ளத சாப்பிட்டு போச் சொல்லு””.... என்று கூறிவிட்டு விறு விறுவென வெளியேறினார்.


மதுரைக்கு வந்ததிலிருந்தே  பணத்தை வைத்து ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது. தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்வி அவரை வாட்டி வதைத்தது. பணத்தை பற்றிய யோசனையும்,குழப்பமும் சோர்வடையச் செய்ய நாகராஜ் வீட்டு வாசலில் நின்ற  சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.  அவர் வரவுக்காகவே காத்திருந்த மாதிரி பழுப்பு நிற தெருநாய் ஒன்று வாலை ஆட்டிக் கொண்டு அவர் பின்னே சென்றது. குழம்பிப் போயிருந்த நாகராஜிற்கு நாய் தொடர்ந்து வருவது எரிச்சலை உண்டாக்க… “ சீ …. போ” என்றார். அது ஒரு நிமிடம் அவரை உற்றுப் பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தது. தெரு முக்கில் உள்ள பெட்டிக் கடையைப் பார்த்ததும் நாகராஜின் மனம் இளகியது பிஸ்கட் பாக்கெட் வாங்கி அதனைப் பிரித்து நாயின் முன் இட்டார். நாய் அவசர அவசரமாக உண்பதை நாகராஜ் ஒரு புன்முறுவலோடு பார்த்து விட்டு சைக்கிளை வேகமாக அழுத்தி கடையை நோக்கிச் சென்றார். பழக்கடை மார்க்கெட் தெருவின் மக்கிய வாசனையும், மதுரைக்கே உரிய வறண்ட தூசி மிகுந்த வெக்கை காற்றும் நாதராஜிற்கு ஏனோ இன்று ஆசுவாசமாக இருந்தது. கடை வாசலில் சைக்கிளை நிறுத்தி விட்டு படிக்கட்டில் பரப்பி வைத்திருந்த வாழைத்தார்களை தாண்டி தாண்டி வந்து கடைக்குள்ளே நுழைய எத்தனித்த போது அப்பா


‘“ வா! நாகா   இப்பதான் வர்றியா….”


‘“ ஆமாப்பா” ... நேத்து அண்ணேன் கொடுத்த பணத்தை பீரோல வச்சிருந்தேன்… காணல …. தேடிட்டே இருந்தேன்….’’என இழுத்தார்.


‘“ அத நான் எடுத்துட்டு வந்துட்டேனே…. ஏன் காணலனா… நான் அப்ப வீட்லதான இருந்தேன்… வாத்தியாரு வந்து கேட்க மாட்டியோ…இப்டி இருந்தா எப்படி பொழைக்கறது…எல்லாத்துக்கும் தயக்கம்…. சரி அதை விடு உங்கிட்ட ஒன்னு சொல்லனும் உன்  மாமனாரு உன் பொண்டாட்டி பிள்ளைக்கு எதுனாச்சும் வாங்கிட்டு வரனும் னு நினைச்சா…. வீட்ல இருக்குற மத்த  ரெண்டு பிள்ளைங்களுக்கு சேத்து வாங்கியாரச் சொல்லு…. இல்லாட்டி சும்மா வந்துட்டு போச் சொல்லு புரியுதா… “ என்றார்


‘“சரிங்கப்பா”  என்றார் நாகராஜ் 


“ அது சரி கடைக்கு காலகாலத்துல வரப் பாரு நேரங் கழிச்சு வந்தா எப்புடி…. வியாபாரம் வெளங்கும்… வெரசப் போய் அண்ணனைப் பாரு “என்றார்.


கடை முழுவதும் பரந்து கிடந்த கொடை ஆரஞ்சு பழங்களை விலக்கி விட்டுக் கொண்டே அண்ணன் அறைக்குச் சென்றார்.

“ வா… நாகா… என்ன காலைலயே மூஞ்சு ஏன் இப்டி இருக்கு? எதுனாச்சும் பிரச்சினையா?...”


‘“இல்லண்ணே… அதலாம் ஒன்னும் இல்ல”


“ அப்பா  எதுனாச்சும் சொன்னாரா? அவர் நம்ம நல்லதுக்குத்தான் சொல்வார். ‘.... கலங்காத எல்லாம் சரியாயிடும்  இன்னும் கொஞ்ச நாள்ல …வியாபாரம் உனக்கு பழகிடும்… எதுனாலும் என்கிட்ட கேளு…மொதல்ல இந்த தயங்கி தயங்கி பேசுறத…. மாத்திக்க… தைரியமா பேசு… நம்ம அப்பா தான …”


“"சரிண்ணே “


“ சரி… வேலையைப் பார்ப்போம்… இந்த ஆரஞ்சுப் பழத்தை எல்லாம் கடை ஆளுங்கள பெட்டி போடச் சொல்லிட்டேன்… இதுல எந்தெந்த பார்ட்டிக்கு எத்தனைப் பெட்டி னு லிஸ்ட் இருக்கு… அதப் பார்த்து அனுப்பி விட்று… அப்றம் கூடைக்காரிகளுக்கு விக்கிற பெட்டியை தனியா எடுத்து வச்சிரு….”


“"ம்ம்…. சரிண்ணே “


“அப்புறம் பராகத் லாரி செட்டுக்குப் போய் சிறுமலை ல இருந்து சரக்கு வந்து எறங்கிடுச்சானு பார்த்துட்டு…. வந்துட்டா ட்ரை சைக்கிள்ல ஏத்தி கடைக்கு அனுப்பிவிட்று…. அப்புறமா மதியம் ஒரு மணிக்கு பேங்க் போய்ட்டு அந்த தாண்டிக்குடி பார்ட்டிக்கு இந்தப் பணத்தை போட்டுட்டு வந்துரு…” எனச் சொல்லி விட்டு பணத்தை எண்ணத் தொடங்கினார்.நாகராஜ் தயங்கியபடி


“அண்ணே பண வெவகாரம் மட்டும் நீயே பார்த்துக்க… எனக்கு ஏனோ சரிப்பட்டு வர மாட்டேன் கிது…கொஞ்சம் ஞாபக மறதியா போயிடுதுண்ணே”


“ அதெல்லாம் சரியாப் பண்ணுவ… எல்லாம் மாத்திரை மருந்து பண்ற வேல …கொஞ்சம் மறக்கத் தான் செய்யும். சரி நீ பேங்க் போறப்ப வாங்கிட்டு போ”


“ அண்ணே”


“ சரியாயிடுவ நாகா… தைரியமா போ” 

 

‘“அப்றம் பேங்ல இருந்து நேரா வீட்டுக்கு போய்டு “


“ இல்லண்ணே நான் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போல…”


“ ஏன்?”


“ இல்லண்ணே இன்னிக்கு என் மாமனாரு வர்றாரு… ராணி கிரக்கமா இருக்கால அதான் கூட்டிட்டு போக வர்றாரு …. அந்தாளைப் பார்க்கப் பிடிக்கல…”


“ அப்டி சொல்லாத நாகா … வீட்டுக்கு வர்றவங்க கிட்ட மரியாதை கொடுக்கனும்… அப்பாவும்… வா… னு சொல்ல மாட்டாரு… நீயும் போல னா … நல்லா இருக்காது…. ராணியும் எதிர்பாப்பாள…. போ நாகா…”


“ இல்லண்ணே அவரு கேள்வியா கேப்பாரு… அப்புறம் குடும்பத்துல ஏதாச்சும் பிரச்சினையை இழுத்து விட்டு போயிடுவாரு… அவர என்னால சமாளிக்க முடியல…”


“ இப்படி சொன்னா எப்படி … எப்ப இதெல்லாம் பழகுவ…எல்லாம் சமாளிக்கலாம் போ…”


“ சரிண்ணே…: அப்புறம் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்…. அப்பாகிட்டயும் கேட்கனும்…,” 


“ சொல்லு நாகா”


“ இல்லண்ணே இந்த வேலையை முடிச்சிட்டு வந்துடுறேன்… அப்பாவை மட்டும் கடையிலேயே  இருக்கச் சொல்லிடுங்க… நான் விஷயத்தை உறுதி பண்ணிட்டு வந்து சொல்றேன்.”


“ என்னடா புதிர்லாம் போடுற… என்ன விஷயம் சொல்லு’”



சகோதரர்களின் பேச்சுக்கு இடையே அப்பா அறைக்குள் நுழைந்தார். அப்பாவைப் பார்த்ததும் சேகரன் எழுந்து அப்பாவிற்கு நாற்காலியை எடுத்து போட்டார். 


“ என்னப்பா சங்கதி… ஏதோ பேசிட்டு இருந்தீங்க…” 


“ இல்லப்பா இன்னிக்கு ராணியை கூப்டுப் போக அவ அப்பா வர்றாங்களாம்.”


“ என்ன!    3 மாசத்துல எதுக்கு கூப்டுப் போறாங்க””என்று நாகனை ஏறெடுத்துப் பார்த்தார்.


“ அப்பா அவளுக்கு இப்ப கொஞ்சம் முடியலன்றா …அதான்…”என்றார்


“ சரி சரி போட்டும்” என்றார் அப்பா.


“ சேகரா இந்தப் பய வேலையெல்லாம். ஒழுங்கா பார்க்கிறானா? எப்படி?” என்றார் அப்பா..


“ நல்லா பார்க்கிறான் ஐயா” என்றார். அதற்குள் நாகராஜ் 


“ லாரி செட்டுக்கு போக நேரமாகுது போய்ட்டு வந்துடுறேன்… அப்புறம் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்  வந்து சொல்லவா… அப்பா” என்றார்.


“"சரி சரி போய்ட்டு வா… நான் இங்கேயே இருக்கேன்”.


நாகராஜ் லாரி செட்டிற்கு போய் ஏற்கனவே இறக்கி வைக்கப்பட்டுள்ள வாழைத் தார்களின் எண்ணிக்கையை சரிபார்த்து விட்டு ட்ரைசைக்கிள் பிடிப்பதற்காக வெளியே வர புகையும், தூசியும் நிரம்பி வழிந்த  வடக்கு ரத வீதியின் இருபுறமும் ட்ரைசைக்கிள் ஏதும் இருக்கிறதா என தேடி  வலது புற முக்கில் ஒரு சைக்கிள் நிற்பதை பார்த்து விரைந்து ஓடினார். வாயில் பீடியும் வியர்வையும் அழுக்கும் படிந்த பனியனும், கைலியும் கட்டியிருந்தவனிடம்  லாரி செட்டிலிருந்து சிம்மக்கல் பழ மார்க்கெட் வரை செல்ல கூலி பேசி அழைத்து வந்தார். சரக்குகளை ஏற்றி வண்டியை அனுப்பி விட்டு லாரி செட் மேனேஜரிடம் 


‘“ அண்ணே ஒரு  ‘ஃபோன் பேசிக்கவா” என்றார்.


“ பேசுப்பா”...


நாகராஜ் ஃபோன் பேசிவிட்டு சிரித்துக் கொண்டே 


‘“ ரொம்ப தேங்க்ஸ்ண்ணே” என்றார்


“ என்னப்பா ஃபோன்ல  பேசின உடனே சுவிட்ச் போட்ட லைட் மாதிரி பிரகாசமாயிடுச்சு முகம்…. என்ன விசேஷம்…” என கேட்க


‘“ எனக்கு ஊர்ல வேலை கிடைச்சிடுச்சுண்ணே…. அப்பாட்ட சொல்லனும்… வர்றேன்… தேங்க்ஸ்ண்ணே” என்று கூறிவிட்டு கடைக்கு விரைந்தார்.


கடைக்குள் வேகமாக நுழைந்த நாகராஜ் அப்பாவிடம்


“ அப்பா என்னை மறுபடி கணக்கு வாத்தியரர் வேலை ல சேரச் சொல்லி வரச் சொல்றாங்க… நான் திரும்பி வேலைக்கு போகட்டா…. அப்பா” என்றார். 


‘“.உனக்கு போகனும்னு தோணுதா நாகா” என சேகரன் கேட்டார்.


“ ஆமாண்ணே” என்றார். 


‘“ எனக்கொன்றும் பிரச்சினை இல்லை. ஆனா நல்லா யோசிச்சு முடிவு பண்ணு… அப்புறம் உன் மாமனார் கிட்டயும் தெளிவா பேசிடனும்…என்ன… புரியுதா?”என்றார் அப்பா.


“” ஆமாப்பா … பேசிடுறேன்… எனக்கு இந்த வியாபாரம் சரியா வரும்னு தோணல…நான் மறுபடியும் வேலைக்கே போறேன்…”என்றார். 


“ சரி அப்புறம் உன் இஷ்டம் “ என்றார் அப்பா.


“ சரிங்கப்பா” என்றார்.


நாகராஜ் அண்ணன் சொன்ன அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் பலகாரக் கடையில் 1/2 கிலோ இனிப்புகளை வாங்கிக் கொண்டு உற்சாகத்தோடு சைக்கிள் பெடலை மிதித்தார். வீட்டை நெருங்கியதும் சைக்கிளை விட்டு இறங்கி ஸ்டான்ட் போடும் போதே மாமனாரின் உரத்த குரல் கேட்டு தயங்கியவாரே வீட்டிற்குள் நுழைந்தார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பென்சாம்- வாசிப்பனுபவம்

கர்நாடகா பயணம் - 4

மார்க்கெட் நாட்கள்