கர்நாடகா பயணம் - 1


       கடற்கரையில் நின்று கொண்டு கடலை பார்க்கும் தோறும் தொடுவானம் தாண்டி பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் …. மலையடிவாரத்தில் இருந்து மலைச்சிகரத்தினை நோக்கும் தோறும் சிகரத்தின் மறுபுரம்  சென்று காண வேண்டும் என்ற உந்துதலும் தீராப் பயணியாக வாழ வேண்டும் என்ற ஆசையும் என் ஆழுள்ளத்தில் உறைந்து கொண்டிருந்தது.. ஆதலால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பயணங்களை மேற்கொள்வதை தவற விடுவதில்லை.நான் ஜெ வை சமீபத்தில் அமெரிக்கன் கல்லூரியில் சந்தித்த போது எனது டில்லி, ஆக்ரா, மதுரா பயணத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். 13 பெண்கள் மட்டுமே இணைந்து பயணம் செய்தோம் என்றவுடன் அவரிடம் உற்சாகம் பற்றிக் கொண்டது. உடனே என்னிடம் இந்தியாவிற்குள் எங்கு பயணம் மேற்கொண்டாலும் தன்னிடம் தெரிவிக்குமாறும் எங்களுக்கு தேவையான தங்கும் விடுதி மற்றும், இதர உதவிகளும் செய்து தருவதாகவும் கூறினார். இதைக் கேட்டவுடன் நான் அப்படியே புளகாங்கிதம் அடைந்து விட்டேன். ஆனால் நான் தொடர்ந்து பயணம் செய்வேன் என்ற திட்டமெல்லாம் எதுவும் இல்லாமல் தான் இருந்தேன்.

                 

             கொற்றவை நாவல் வாசித்த பிறகு  எனக்கு  கன்னியாகுமரி போக வேண்டும்  என்ற உந்துதல் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. திடீரென ஒரு நாள்  ஷீலா  மதினி கன்னியாகுமரிக்கு  போகலாமா? என்று என்னை கேட்க நானும் சம்மதித்தேன்.. சிறு வயதிலிருந்து பழகி இருந்தாலும் கூட மதினியை மிக அணுக்கமான உறவாக உணர்ந்தது இந்தப் பயணத்தில் தான். பயணத்தின் போது  இருவரும் நிறைய இலக்கியங்கள் பற்றியும் பயணத் திட்டங்கள் பற்றியும் உரையாடிக்  கொண்டே  இருந்தோம். மதினியிடம் நிறைய பயணத் திட்டங்கள் இருந்தன. ஆனால்  என்னால் அனைத்துப் பயணங்களிலும் மதினியுடன் பங்கு கொள்ள முடியுமா? என்பது ஐயமாக இருந்தது.பொன்ராஜிற்கு ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் வருகிறேன் என்று மட்டும் கூறி இருந்தேன்.


                 கன்னியாகுமரி பயணத்திற்கு பிறகு விஷ்ணுபுரம் கூட்டு வாசிப்பில் நானும் மதினியும் இணைந்திருந்தோம். நானும் மதினியும் விஷ்ணுபுரத்தை பற்றி தினமும் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் கோவில்களுக்கு பயணம் செல்ல  வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தோம். அதன் படி  மதினி 4 நாள் பயணமாக மைசூர், கூர்க், பேளூர், ஹளபீடு என்று திட்டமிட்டு  என்னிடம் கூறினார்.. நானும் அவர்களுடன் வருவது உறுதியானதும் தேதி முடிவு செய்து தங்குமிடங்கள் பதிவு செய்ய ஆரம்பித்தோம். மே மாதம் 12 ஆம் தேதி அதிகாலை 2. மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பலாம் என முடிவு செய்தோம். இந்த முறை ஷீலா மதினியின் அக்கா அருணா மதினியின் காரில் தான் எங்களது பயணம். அருணா மதினியின் மருமகள் அருண்சியும்,பேத்தி கீர்த்தியும் எங்களுடன் வந்தார்கள். காருக்கு டிரைவர் மட்டும் ஏற்பாடு செய்து கொண்டோம்.


                 அருணா மதினி வீடு மதுரை என்பதால் ஷீலா மதினி விருதுநகரிலிருந்து 11 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கெல்லாம் புறப்பட்டு இரவு 7 மணி போல்  வந்து சேர்ந்தார்கள். எனது வீட்டிலிருந்து அருணா மதினி வீடு கால் மணி நேர பயண தூரம் தான். நான் 10.30 க்கு மதினி வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியிருந்தேன். 9மணி போல் திடீரென மழை பிடித்தது … 1 மணி நேரம் பேய் மழை.பின்பு தூறிக் கொண்டே இருந்தது. மழை நின்றவுடன் நானும் அருணா மதினி வீட்டிற்கு சென்றேன். வழியெல்லாம் வெள்ளக் காடாக தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. பிரதான சாலையில் வாகன நெரிசலால் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. ஒரு வழியாக மதினி வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். நான் வந்து சேர்ந்த நேரத்தில்  மதினியின் ப்ளூ பலேனோ கார் சர்வீஸ் செய்யப்பட்டு வந்து சேர்ந்தது. நாங்கள் அனைவரும் சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கச் சென்றோம். ஒரு மணி நேரத்தில் எழுந்து குளித்து முடித்து பயணத்திற்கு தயாரானோம். டிரைவர் சரியாக 2 மணிக்கு வந்து சேர்ந்தான். எங்களது பயணப்பைகளை ஒவ்வொன்றாக டிக்கியில் அடுக்கி வைத்தோம்.. எங்கள் பயணம் மதுரையில் தொடங்கி குஷால் நகர், கூர்க், பேளூர், ஹலபீடு பின்பு மைசூர் என திட்டமிடப்பட்டிருந்தது.. சரியாக 2.10 க்கு கார் புறப்பட்டது.

    .

              முன்னிருக்கையில் அருண்சியும் பின்னிருக்கையில் 2 மதினிகளுடன் நானும் அமர்ந்து கொண்டேன்.. பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பே கீர்த்தி என்னிடம் " மது ஆச்சி நான் உங்க மடில தான் உட்கார்ந்துட்டு வருவேன்…. அம்மாட்ட போகவே மாட்டேன்…" என்று கூறியிருந்தாள்.நானும் "ஓகே  டா செல்லம் " என்றேன். மழை ஓய்ந்திருந்த அந்த இதமான இரவில் காரின் ஹெட் லைட் ஒளியைச் சிதறடிக்க எங்கள் மனதிலும் புத்துணர்வும் கொப்பளிக்க பயணம் தொடங்கியது. கார் புறப்பட்ட சில மணித்துளிகளிலே கீர்த்தி நன்றாக தூங்கி விட்டிருந்தாள். ஆரிஷ் மதினியிடம் பாட்டு போட்டுக்கலாமா? என்றான். அருண்சி  அவளது ஃபோனில் உள்ள ப்ளே லிஸ்ட் பாடல்களை ஒலிக்க விட்டாள்.ஆரிஷ் தூக்கம் வராமலிருக்க நன்கு காரமான மிளகுச் சேவினை அவ்வப் போது வாயிலிட்டுக் கொண்டான். நாங்கள் நால்வரும் நன்றாக அரட்டை அடித்துக் கொண்டே வந்தோம்.

சிறிது நேரத்திலேயே எங்கள் அரட்டை கச்சேரியில்  ஆரிஷும் இணைந்து கொண்டான். 


                 ஈரோட்டை நெருங்கிய போது விடியத் தொடங்கியது. தேநீர் அருந்துவதற்காக காரை ஓரங்கட்டினான் ஆரிஷ். எனக்கு காபியோ , தேநீரோ அருந்தும் வழக்கம் இல்லை. நான் கீர்த்தி குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். டிரைவர் ஆரிஷ் 2 மதினிகளுக்கும் ஏற்கனவே அறிமுகம் உண்டு. அவனைப் பற்றி சில விபரங்களும் ஏற்கனவே சொல்லி இருந்தார்கள்.எனக்குமே ஆரிஷ் கூட பழகிய போது ஒரு சுவாரசியமான ஆளாகத்தான் தெரிந்தான். நன்றாகப் பேசினான்…. உறவினரைப் போலவே பழகினான்… என்னையும், மதினிகளையும் அம்மா என்றுதான் அழைப்பான்… அருண்சியை அக்கா என்று அழைப்பான். கீர்த்தி குட்டியை வம்பிழுத்து கொண்டே வந்தான். அதற்காக அருண்சி அவனை "இம்சை இம்சை" என்று வசைபாடுவாள். மொத்தப் பயணத்திலும் இவர்களே எங்களுக்கு களித் தோழர்களாக இருந்தார்கள்.

          

                தேநீர் அருந்திய பின்னர் ஆரிஷ் காரை இயக்கினான். ஆரிஷ் கூகுள் வழிகாட்டியின் உதவி  கொண்டுதான் போய்க கொண்டிருந்தான். ஆரிஷ் அடுத்து நாங்கள் போக வேண்டிய வழியை கூகுள் வழிகாட்டியில் பார்த்த போது  2 வழி காண்பிப்பதாக சொன்னான்.அதில் ஒரு வழி சத்தியமங்கலம் வழியாக காண்பிப்பதாகவும் 25 கி.மீ அதிகமாக பயணப்பட வேண்டியது இருக்கும் எனக் கூறினான்.நாங்கள் சாலைகளை கடக்கும் யானைகளை பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் சத்தியமங்கலம் வழியாகவே போகச் சொன்னோம். அவனும் அந்த வழிப்பாதையிலேயே காரைச் செலுத்தினான். நன்றாக

விடிந்திருந்தது.சிறிது நேரத்திலேயே நாங்கள் சத்தியமங்கலம் காட்டு வழிச் சாலையை நெருங்கினோம். சாலையின் இருமருங்கிலும் பச்சை நுரைத்தது போல் இருந்த அடர்த்தியான புல்வெளிகளும் அதன் பின்னே நெடிதுயர்ந்த மரங்களும் கடந்து சென்றன. அந்தப் பசுமைகாட்டின் அழகில் லயித்து போன ஆரிஷ் காரின் வேகத்தை குறைத்து ரசித்து கொண்டே காரை ஓட்டினான். ஓரிடத்தில் புல்வெளிகளுக்குள் மான் கூட்டம் நின்று கொண்டிருந்தது. யானையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு மான்களின தரிசனம் கிளர்ச்சியூட்டியது. கீர்த்தி குட்டி" ஐ மான் மான்" என்று கூவி கைதட்டி மகிழ்ந்தாள்.


               எங்கள் பயணத் திட்டத்தின் முதல் ஊர் கூர்க்கை நோக்கி கார் பயணித்து கொண்டிருந்தது.அழகிய மலைப் பாதையை ரசித்த வண்ணம் நாங்கள் அமர்ந்திருக்க எனது மடியில் படுத்திருந்த கீர்த்தி குட்டி ஷீலா மதினியை பார்த்து " அயமா! தலைக்கு மேல மலையை தூக்கிட்டு வர்றீங்க" என்றாள். ஷீலா மதினி இதைக் கேட்டதும் சிரித்துக் கொண்டே அவளை அணைத்துக் கொண்டார். நானும் அருணா மதினியும் அவள் பேச்சை கேட்டு வியந்து சிரித்து கொண்டிருந்தோம்.ஷீலா மதினி சன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்க அவள் என் மடியில் படுத்தபடி பார்க்கும் போது அவளுக்கு அப்படி காட்சியாயிருக்கு. . தமிழ் நாட்டின் எல்லையைக் கடந்து கர்நாடகா எல்லைக்குள் செல்ல ஒரு மலைக்கிராமம் வந்தது. அங்கே நாங்கள் காலை உணவிற்காக காரை நிறுத்தினோம். வட இந்தியர்களால் நடத்தப்பட்ட ஒரு தென்னிந்திய உணவகம்  அது. பொங்கலும், தோசையும், வடையும் மட்டுமே இருந்தது. ஆளுக்கு ஒன்றாக ஆர்டர் செய்தோம். பொங்கலையும் , தோசையையும் , பார்த்ததுமே வயிறு நிறைந்து விட்டது. சட்டி நிறைய பொங்கலும், சாப்பாடு  தட்டினை விட பெரிய தோசையும் பரிமாறினார்கள். ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். நாங்கள் திட்டமிட்டபடி முதலில் புத்தர் கோவில் இருக்குமிடமான குஷால் நகர் வந்தடைந்தோம்.

         

           காவேரியின் தாயகமான கூர்கில் திபெத்திய கலாச்சாரத்தின் படி ஒரு ஊர் உருவாகியிருந்ததை பார்த்து ரசித்தபடி பயணித்து கொண்டிருந்தோம். நாம்ட்ரோலிங் மடாலயம் வந்ததும் காரைப் பார்க் செய்து விட்டு மடாலயத்திற்குள் நுழைந்தோம். வண்ணக் கொடிகள் காற்றில் படபடக்க மாடலயத்தின் நுழைவுப் பகுதியின் தரையில் டிராகன் படங்கள் அழகாக வரையப்பட்டிருந்தது. . எங்களுக்கெல்லாம் சீன நாட்டிற்குள் வந்தது போல் உணர்வு…. குங்ஃபூ படங்களில் வரும் பெரிய மைதானம் போன்று இருந்தது.அதனைச் சுற்றிலும் புத்த பிட்சுகள் தங்கும் குடியிருப்புகள்  திபெத்திய முறையில் கட்டப்பட்டிருந்தது. குடியிருப்புக்களை கடந்து மடாலயத்தின் நுழைவு வாயிலுக்குள் நுழைந்ததும் இருபுறமும் புல்வெளிகளுடன் கூடிய அழகிய தோட்டம்  அமைக்கப்பட்டிருந்தது. பின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பெரிய அலங்கரிக்கப்பட்ட மணி ஒன்றும் இருந்ததும். மடாலயம் மிகவும் பிரம்மாண்டமாகவும், வண்ண மயமாகவும் கட்டப்பட்டிருந்தது…  கோவிலின் நுழைவாயில் நுண்ணிய வேலைப்பாடுகளினால் செதுக்கப்பட்ட அழகிய வர்ணம் பூசப்பட்ட 3 கதவுகளைக் கொண்டிருந்தது.கோவிலுக்குள் கெளதம புத்தர்,பத்மசாம்பவா,அமிதாயுஸ் என்ற மூவரின் சிலைகள் இருந்தன. அவை தங்கமுலாம் பூசப்பட்டு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. கோவிலில் சுவர் முழுவதும் வண்ண மயமான ஓவியங்கள்… இந்து மத தொன்மக் கதைகளில் வரும் இந்துக் கடவுள்களுக்கு மாற்றாக புத்தரை வைத்து  விவரித்து   ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தது. எனக்கு இந்த ஓவியங்களையும், சிலைகளையும் பார்த்த போது மிகுந்த அதிர்ச்சியாகவே இருந்தது. நான் படித்த புத்தர் "ஆசை இல்லாமல் இருப்பதே இன்ப நிலை" என்று போதித்தவர். ஆனால் அவருக்கான கோவிலில் இப்படியான ஓவியங்களும் , சிலைகளும் ஆச்சரியங்களை அளித்தன. ஆனால் ஜெ மூலம் அறிந்த பெளத்தம் எவ்வாறு மற்ற மரபுகளிலிருந்து சடங்குகளையும், பண்பாட்டு கலாச்சாரங்களையும் உள்வாங்கிக் கொண்டதை இங்கு நேரில் கண்டு புரிந்து கொண்டேன்.


             நானும் மதினியும் சுவர் முழுவதும் உள்ள ஓவியங்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தோம்.சிறிது நேரத்தில் அதனுள் கரைந்து விட்டேன் என்று சொல்லுமளவிற்கு என் மனம் ஊழ்க நிலையை எட்டியிருந்தது. அப்படி நான் ஓவியங்களில் ஆழ்ந்திருந்த வேளையில்  ஆரிஷ் என் அருகே வந்து


       " அம்மா! இதென்ன இப்படி வரஞ்சு வைச்சிருக்காங்க, நீங்களும் அத பே …. னு பார்த்துட்டு இருக்கீங்க…" என்றான்.


        நான் " உனக்கு பிடிக்கலனா பார்க்காத என்னை ஏண்டா தொல்லை பண்ற" என்றேன்.


    அதற்கு ஆரிஷ்" புத்தர் என்ன இப்படியா இருப்பார்… டான்ஸ் லா ஆடிட்டு…. போங்கம்மா… டுபாக்கூர் கோயிலா இருக்கு" என்றான்.


   என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் அவனிடம் " ஏன்டா இப்படி கத்துற…. வேற ஸ்டேட் ல இருக்கோம்… யார்கிட்டயாவது அடி வாங்கிக் கொடுத்துருவ போல…. இந்த ஓவியத்திற்கெல்லாம்  நிறைய காரணம் இருக்கு…. உனக்கு பிடிச்சா பாரு…. இல்லாட்டி ஆளை விடு சாமி …. அப்படிப் போய் உட்காரு " என்றேன்.


    அவனும் "சரிம்மா …. நீங்க பொறுமையா பாருங்க …. முடிச்சிட்டு என்னை போட்டோ மட்டும் பிடிச்சிக் கொடுத்திருங்க " என்றான்.

  

         நான் மீண்டும் ஒவியங்களை பார்க்கத் தொடங்கி விட்டேன். அந்த மடலாயம் புத்த பிட்சுகளுக்கான பள்ளியாகவும் இயங்கி வந்தது. துவராடை அணிந்த குட்டி குட்டி புத்த பிட்சுகள்  கோயிலுக்குள் சுவடிகள் போன்ற புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்ததை பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது. அவர்கள் சிரிக்கும் பொழுது ஒரு தீற்றல் போலத் தெரியும் அவர்களின் குட்டி கண்களும், அரும்பு அரும்பாக இருக்கும் பச்சரிசி பல்வரிசையும் கொழு கொழு கன்னங்களும் மனதை அள்ளிச் சென்றது..அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே ஓரக் கண்களினால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளைப் பார்த்து சிரிப்பதும் குருவிற்கு தெரியாமல் திண்பண்டங்களை ஒளித்து வைத்து தின்பதையும் பார்த்து இரசித்து கொண்டிருந்தேன்.அதை பார்த்ததும் எனக்கு என்னோட பள்ளி நாட்கள் ஞாபகம் வந்தது. ஜாமென்ட்ரி பாக்ஸில் முறுக்கு, கடலை மிட்டாய், பிறகு சீருடைப் பாக்கெட்டில் உப்பு மாங்காய்,, நெல்லிக்காய்  என ஒளித்து வைத்து ஆசிரியர் பாடம் எடுக்கும் போது  கள்ளத்தனமாக சாப்பிட்டதை நினைத்து எனக்குள் சிரித்து கொண்டேன்… 

  

          அப்படியே "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" பாட்டை மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டே மற்ற இடங்களை பார்வையிட வெளியில் வந்தேன். அங்கிருந்த மற்றொரு மண்டபத்தில் இசை வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன… பெரிய முரசு போன்ற வாத்தியங்களையும், கொம்பு போன்ற வாத்தியங்களையும் கொண்டு இசைத்துக் கொண்டிருந்தனர். அந்த இசையையும் சிறிது நேரம் ரசித்துக் கொண்டிருந்தோம். கீர்த்தி அங்கிருந்த மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.. புதுவிதமான கலாச்சார பண்பாட்டு தளம் இயங்கும் ஒரு இடத்தை முழுமையாக அனுபவித்த திருப்தியோடு மடலாயத்தை விட்டு வெளியேறினோம். அந்த ஊரின் அருகிலேயே மதிய உணவினை முடித்து விட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

           

          





             



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பென்சாம்- வாசிப்பனுபவம்

கர்நாடகா பயணம் - 4

மார்க்கெட் நாட்கள்