கர்நாடகா பயணம் - 2

        நாங்கள் மதுரையிலிருந்து புறப்பட்டு 13 மணி நேரம் ஆகியிருந்தது. முந்தைய இரவு போதிய அளவு தூக்கமில்லாத காரணத்தினால் சிறிது களைப்புற்றிருந்தோம். நாங்கள் பயணத் திட்டமிடலின் போதே  இரவு தூங்குவதற்கு மட்டுமே தங்குமிடம் செல்ல வேண்டும், முடிந்த வரை பயணிக்கும் வழியில் உள்ள சுற்றுலாத் தளங்கள் அனைத்தையும் பார்த்து விட வேண்டும் என்று நினைத்திருந்தோம். நாங்கள்  மடிகேரி என்ற ஊரில் தங்குமிடத்தை பதிவு செய்திருந்தோம். மதிய உணவை முடித்ததும் அடுத்து வழியில் வேறு ஏதாவது இடம் இருக்கிறாதா என்று கூகுளில் தேடிய பொழுது காவேரி நிஷாகர்தாமா என்ற இடத்தை காட்டியது.


           நிஷாகர்தாமா உள்ளூர் மக்களால் தீவு என்றே கூறப்படுகிறது. குஷால் நகரிலிருந்து 3 கிமீ தொலைவில் இருந்தது. 64 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த இடம் முழுவதையும் சுற்றி வருவதற்கான நேரமும் எங்களுக்கு இருந்ததால் அந்த இடத்திற்கு பயணித்தோம். 15 நிமிடங்களில்  நிஷாகர்தாமாவை வந்தடைந்தோம். ஆரிஷ் எங்களை நுழைவாயிலில் இறக்கிவிட்டு காரை பார்க் செய்ய விரைந்தான். நாங்கள் எங்களனைவருக்குமான நுழைவுச்சீட்டை பெற்று விட்டு ஆரிஷ்க்காக காத்திருந்தோம்,  அவன் 5 நிமிடங்களில் வந்து சேர்ந்தான். விடுமுறை நாட்கள் என்பதினால் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. தொங்குபாலம் போன்ற அமைப்பினால் நுழைவாயில் அமைக்கப்பட்டிருக்க நாங்கள்  வரிசையாக உள்நுழைந்தோம்.


          களைப்போடு உள் நுழைந்த எங்களை அடர் மூங்கில் காடுகளும் , பறவைகளின் ஒலிகளும், வண்டுகளின் ரீங்காரமும் களைப்பை மறக்கடிக்கச் செய்தன. . ஆங்காங்கே மூங்கில் குடிகள் அமைக்கப்பட்டு அங்கு ஏதோதோ விற்றுக் கொண்டிருந்தனர்.அருண்சியும், கீர்த்தியும் அதனைப் பார்க்கச் சென்றிருந்தார்கள். தீவு முழுவதும் பசுமையின் மணம் பரவியிருக்க அடர்ந்த மூங்கிலினூடாக சூரிய ஒளி ஒரு கீற்று போலவே விழுந்து கொண்டிருந்தது. அந்த அரை ஒளியில் நான் ஒரு சிறுமியின் மனநிலையில் மூங்கில் காடுகளினூடே சிதறிக் கிடந்த சருகுகள் மெத்தென்று பரவியிருக்க அதன் மேல் என் காலைப் பதித்து பதித்து நடந்து  சுற்றி அலைந்து கொண்டிருந்தேன். கூட்டம் கூட்டமாக மூங்கில் அடர் பச்சை நிற கம்புகளாக ஒங்கி வளர்ந்திருக்க அதன் கிளைகள் மலர் போல விரிந்து வளைந்திருக்கும் அழகில் லயித்துக்  கொண்டிருந்த என்னிடம் அருணா மதினி காவேரி ஆற்றிற்கு செல்லும் வழிகாட்ட அனைவரும் அங்கு சென்றோம். நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு 4 அடி கீழே ஆறு பாய்ந்தோடிக் கொண்டிருந்தது…. ஆற்றின் குறுக்கே பராமரிக்கப்படாத நிலையில் ஒரு தொங்கு  பாலம் இருந்தது. நீரோடை அளவிற்கே ஆற்றில் நீரோடிக் கொண்டிருந்தது. கரைகளில் மரங்களின்  வேர்கள் புடைத்திருக்க அரவங்கள் ஆங்காங்கே நெளிந்து கொண்டிருப்பது போல் காட்சியளித்தன. அங்கிருந்து மீண்டு தீவிற்குள் உள்ள மற்ற இடங்களை பார்வையிட முன்னகர்ந்து சென்றோம்.

 

             தீவில் ஆங்காங்கே கன்னட பழங்குடியினரின் வாழ்வியல் முறைகளையும், கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளையும் விவரிக்கும் வகையிலும் மாதிரிகள் வடிவமைக்கப்ட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்ததது. தீவின் அழகை உயரத்திலிருந்து பார்க்கும் விதத்தில் இரு மர வீடுகள் அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு தளங்களாக அமைக்கப்பட்டிருந்த வீட்டின் ஏணியில் ஏறிய பொழுது முதல் தளம் வரை ஏறுவதற்கு எளிதாக இருந்தது. இரண்டாம் தளத்திற்கு ஏறும் பொழுது எனக்கும் மதினிகளுக்கும் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. உயரம் காரணமா? இல்லை மரப்படிகள் என்றா? என காரணம் புரியவில்லை, ஆனாலும் விடாப்பிடியாக ஏறி அங்கு சில மணித்துளிகள் அமர்ந்திருந்து விட்டு கீழிறங்கினோம்,பின்பு தாவரவியல் பூங்கா அமைந்திருக்கும் இடத்திற்கு சென்றோம். அங்கு முயல்கள், மான்கள், மயில், காட்டுக் கோழிகள், மற்றும் கிளிகள் பராமரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அங்கிருக்கும் பெரிய மைதானத்தில் கொழு கொழுவென இருக்கும் காட்டுக் கோழிகள் தத்தி தத்தி நடக்கும் அழகினைக் கண்டு அதன் பின்னாலே நான் நடந்து சென்றேன்.


 ஷீலா மதினி என்னைப் பார்த்து" ஓய் பார்த்து டீ….ரொம்ப பக்கத்துல போகாத கொத்திடப் போகுது " என்றார் ….


நான் " அதெல்லாம் கொத்தாது நீங்க சத்தம் போடாதீங்க ஓடிடப் போகுது" என்று கூறிவிட்டு அதன் பின்னே தொடர்ந்தேன்…

 

சிறிது நேரம் நானும் கீர்த்தியும் கோழிகளை வேடிக்கை பார்த்து விட்டு கூண்டுக்குள் இருக்கும் கிளிகளை பார்க்கச் சென்றோம். கிளிகள் வசிக்கும் ஒரு பெரிய கூண்டுக்குள் நாங்கள் அனைவரும் செல்ல ஒரு பெண் ஊழியர்  என்னிடமும், ஷீலா மதினியிடமும் கிளிக்கான உணவினை கையில் கொடுத்து கைகளை நீட்டிப் பிடிக்கச் சொன்னார். அங்கிருந்த அத்தனை கிளிகளும் பறந்து வந்து எங்கள் தலையிலும், கைகளிலும் அமர்ந்து உணவினை கொத்தி தின்ன ஆரம்பித்தன…படபடவென விரைந்து வந்து அமர்ந்த  கிளிகளை கண்டு கீர்த்தி பயத்தில் அலற…. அந்தக் கிளிகளும் பட படத்துக் கொண்டே இருந்தது…. கீர்த்தி பயந்ததில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை… கூடவே அருண்சியும் பயந்ததுதான் சிறிது வேடிக்கையாக இருந்தது. அந்த கூண்டிவிருந்து வெளியில் வந்த பொழுது அருகில் உள்ள மற்றொரு கூண்டில் கீச் கீச் என கிளிகளின் பதட்டமான கிறீச்சிடல்களை கேட்டு   நிமிர்ந்து பார்த்தோம். அங்கு நீல நிறக் கிளி ஒன்றின் அலகு  கூண்டில் வலையில் சிக்கிக் கொண்டு பட படத்துக் கொண்டிருக்க கூண்டில் உள்ள மற்ற கிளிகள் அனைத்தும் வசமாக மாட்டியிருக்கும் எதிரியினை தாக்குவது போல் கொத்திக் கொண்டிருந்தன. இந்த களேபரத்தின் சத்தம் கேட்டு வந்த ஊழியர் ஒருவர்  விரைந்து வந்து கிளியை விடுவித்தார். இந்தக் காட்சியைக் கண்ட நானும் ஷீலா மதினியும் ஒரே நேரத்தில்


" இந்த குட்டிகளுக்கு என்னா சேட்டை பாருங்க!" என்றோம்

   

நானும் மதினியும் ஒன்று போல கூறியதை கண்டு சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகன்றோம்.


            குழந்தைகள் விளையாடுவதற்காக இருந்த பார்க்கிற்கு கீர்த்தியை அழைத்துக் கொண்டு அருண்சி சென்றாள்.நான் மதினிகளுடன் தீவினுள் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தோம். ஆரிஷ் ஷீலா மதினியிடம் வந்து

      

 "அம்மா என்னை கொஞ்சம் ஃபோட்டோ எடுங்களேன் " என்று ஆரம்பித்தான்


    மதினியும் சில ஃபோட்டோக்கள் எடுத்துக் கொடுத்தார். நான் கவனித்த வரை நாங்கள் எடுத்துக் கொடுக்கும் ஃபோட்டோக்களில் திருப்தி அடைவதில்லை. இப்பொழுது என்னிடம் வந்து கேட்க  நானும் சில ஃபோட்டோ க்கள் எடுத்தேன். ஃபோட்டோக்களை பார்த்து விட்டு ஆரிஷ்


" உங்க யாருக்குமே ஃபோட்டோ எடுக்கத் தெரியல மா " என்றான். அதற்கு நான்


" எடுக்கத் தெரியாத போதே இத்தனை எடுக்கச் சொல்ற…. இதில எடுக்க வேற தெரிஞ்சா…. " என்றேன்.

         

    அருண்சியும், கீர்த்தியும் ஜிப்லைன் என்கிற சாகச விளையாட்டினை முடித்து விட்டு வர நாங்கள் அனைவரும் தீவினை விட்டு வெளியேறினோம். ஆரிஷ் பார்க் செய்த காரினை எடுத்து வர எங்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்துள்ள மடிகேரிக்கு பயணத்தை தொடர்ந்தோம். மடிகேரிக்கு 45 நிமிட நேரம் பயணிக்க வேண்டி இருந்தது.அருண்சி ஃபோனில் சார்ஜ் குறைந்திருந்ததால் எனது ஃபோனில் உள்ள ப்ளே லிஸ்ட் பாடல்களை ஒலிக்க விட்டோம். சாலை ஓரங்களில் அமைந்துள்ள காஃபி எஸ்டேட்டுகளை பார்த்துக் கொண்டே எனக்குப் பிடித்த பாடல்களை கேட்டுக் கொண்டே சென்றது பயண களைப்பினை மறக்கடித்தது.


         45 நிமிட பயணத்திற்கு பின் தங்குமிடம் வந்து சேர்ந்தோம். தொடர்ந்து 15 மணி நேரம் காரோட்டி வந்த ஆரிஷை தூங்கச் சொல்லி விட்டு நாங்களும் எங்கள் அறைக்குச் சென்றோம். 1 மணி நேர ஓய்விற்கு பிறகு எழுந்து அருகில் ஏதாவது ஒரு இடத்திற்கு செல்லலாம் என தங்குமிடம் மேலாளரிடம் கேட்க அவர் ஓம்காரேஷ்வரர் கோவில் இருப்பதாகச் சொன்னர். நாங்களும் உள்ளூர் மக்களிடம் வழி கேட்டு குறுக்குச் சந்துகள் நிறைந்த புதிய ஊரில் பாதை தவறி ஒரு வழியாக கோவிலை வந்தடைந்தோம். ஒம்காரேஷ்வரர் கோவில் கேரள கோதிக் பாணியில் சிவப்பு ஓடுகள் வேயப்பட்டு இஸ்லாமிய கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்டிருந்தது. கோவிலின் நான்கு புறங்களிலும் மினரட்டுகள் அமைக்கப்பட்டு மத்தியில் பெரிய குவி மாடத்துடன் அழகாக இருந்தது. சிவனின் தரிசனம் ஒரு பள்ளிவாசலுக்குள் கிடைத்தது போன்ற தொரு உணர்வு. கீர்த்தியும் அருண்சியும் மிகவும் சோர்ந்திருந்தார்கள். கோவில் வளாகத்தின் ஒரு இடத்தில் அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு நாங்கள் பரந்து விரிந்த  ஒரு எளிய அமைதியான சூழலை கொண்டுள்ள கோவில் வளாகத்தினை சுற்றி வந்தோம். கோவில் வளாகத்தில் ஒரு பெரிய தொட்டி அமைக்கப்பட்டிருக்க. அதில் மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த காட்சி பத்தர்களை வெகுவாக ஈர்த்தது. தொட்டியின் நடுவே ஒரு சிறிய மண்டபமும் அதற்குள் செல்ல சிறிய பாதையும் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்தையும் பார்வையிட்டு கோயிலை விட்டு வெளிவரும் போது எங்களுக்கு பசிக்கத் தொடங்கியிருந்தது. அங்கிருது ஒரு ஆட்டோ பிடித்து இரவுணவிற்காக உணவகத்திற்கு சென்று எங்கள் இரவுணவை முடித்து விட்டு ஆரிஷிற்கும் 2 சப்பாத்தி மற்றும் கடலைக் கறியும் வாங்கிச் சென்றோம்.

 

        அறைக்குள் நுழைந்ததும் கை, கால் முகம் கழுவி படுக்கையில் விழுந்தேன். நாளை மறுநாள் பேலூரில் ஜெ வழக்கமாக தங்குமிடத்தையே எங்களுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்த தோழிக்கு நன்றி கூறி மெசேஜ் அனுப்பி விட்டு உறங்கச் சென்றேன். ஆழ்ந்த உறகத்திற்கு பின்பு காலை 5 மணிக்கு முழிப்பு தட்டியது. ஆனால் மற்றவர்கள் அனவைரும் நன்றாக  தூங்கிக் கொண்டிருந்ததால் நான் படுக்கையை விட்டு எழுந்திராமல் ஃபோனில் சிறிது நேரம் வாசித்துக் கொண்டிருந்தேன். 5.30 மணி ஆனதும் ஒவ்வொருவராக எழுந்திருக்க குளித்து முடித்து தலைக் காவேரிக்கு பயணிக்க தயாரானோம்.நானும் மதினியும் கஃபிக்கு ஆர்டர் செய்து விட்டு தங்குமிடத்தின் பால்கனிக்கு சென்று மடிகேரியின் விடியலை ரசித்துக் கொண்டிருந்தோம். இதமான பனி காற்றில் கசிய ஆவி பறக்கும் காஃபியுடன்  எமிலி டிக்கன்ஸின் கவிதை வரிகள் நினைவில் எழ        

 மாறாத் தொல்லிருக்கையில் அமர்ந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கும் மலைச் சிகரங்களை கண்ணில் நீர் வழிய இதழில் புன்னகை பூக்க தரிசித்து கொண்டிருந்தேன்.அந்த இனிய விடியலில் இருந்து மீண்டு வர மனமின்றி பயணிக்க நேரம் ஆனதால் அங்கிருந்து புறப்பட்டு காரில் ஏறினேன்.


          மடிகேரியிலேயே காலை உணவிற்காக ஒரு கேரள உணவகத்தில் ஆரிஷ் காரை நிறுத்தினான். ஆரிஷ் தனது பால்ய காலம் முழுவதும் திருவனந்தபுரத்தில் வசித்திருக்கிறான். அதனால் அவனுக்கு கேரள உணவின் மீது அலாதிப் பிரியம் உண்டு எனக் கூறி எங்கள் அனைவருக்கும் அவனே ஆர்டர் செய்தான். ஆப்பம், இடியாப்பம், அப்பம்.புட்டு, முட்டைக் கறி, கடலைக்கறி எனப் பலவும் எங்கள்  சாப்பாட்டு மேஜைக்கு வர அனைவரும் கடோத்கஜனாக மாறி சாப்பிட ஆரம்பித்தோம். காலை உணவினை முடித்து விட்டு காரில் ஏற தலைக்காவேரிக்கு பயணத்தை தொடர்ந்தோம். எனது ப்ளே லிஸ்ட் பாடல்களை ஒலிக்க விட கீர்த்தி அவளுக்கு பிடித்த " அண்ணாத்த" படப் பாடலை போடச் சொல்லி அடம் பிடித்தாள்.அருண்சியும் அந்தப் பாடலை ஒலிக்க விட்டாள். ஆனால் கீர்த்தி மீண்டும் மீண்டும். அதே பாடலை போடச் சொல்ல ஆரிஷ் கீர்த்தியுடன் சண்டை பிடித்தான். பிறகு அருண்சி கீர்த்தியை சமாதானப்படுத்தி ஆரிஷ்க்கு பிடித்த பாடலை ஒலிக்க விட்டாள். பிறகு அருண்சி ஆரிஷை யும் வழக்கம் போல 


"இம்சை… இம்சை…. சின்னப் புள்ள கூட சண்டை பிடிக்கிற" என்றாள்.


" அக்கா அதுக்காக எவ்வளவு நேரம் ஒரே பாட்டைக் கேட்கறது…. போங்கக்கா" என்றான்.


ஷீலா மதினி சிரித்துக் கொண்டே….



" உனக்கு என்ன வயசாகுது தம்பி? " என்றார்கள்.


" 30 வயசாச்சு மா" என்றான்.


" சரியாப் போச்சு போ…. நான் கூட ஒரு 22… 23 வயசுல நினைச்சேன்.. 30 வயசுல எங்களை அம்மா னு கூப்பிடுற ok… மதுவுக்கு 40 தான் ஆகுது… அவளையும் அம்மா னு கூப்பிடுறது கொஞ்சம் ஓவர் தான்.. இப்படி கீர்த்தி கூட சண்டை பிடிக்கிறதுக்கு அடி தான் வாங்கப் போற…' என்றார்கள்.


" மதினி எனக்கு 45 ஆச்சு…. விடுங்க அவன் எப்படியும் கூப்பிட்டு போறான்"... என்றேன் …


இப்படியாக பாட்டும், சிரிப்பும், அரட்டையுமாக எங்கள் பயணம் தொடர்ந்தது. ஒரு மணி நேர பயணத்திற்கு பின் தலைக் காவேரி வந்து சேர்ந்தோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பென்சாம்- வாசிப்பனுபவம்

கர்நாடகா பயணம் - 4

மார்க்கெட் நாட்கள்