கர்நாடகா பயணம் - 3

       ஒவ்வொரு விடியலும் ஒரு புது உலகை நோக்கியே நம்மை பயணிக்க வைக்கிறது. உவகை மிகுந்த இந்த விடியலில் நான் தலைக் காவிரியின் நிலத்தில் கால் பதித்த போது வெண்மையான அடர் பனி மூட்டம் என்னை வரவேற்றது. தலைக் காவேரி தோற்றம் இருக்குமிடத்தில் ஒரு கோவில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக் கோயிலுக்குச் செல்லப் படிகள் வழியாக நாங்கள் பனிமூட்டத்தினூடே மெல்லிய குளிர் காற்றின் சிலிர்ப்போடு ஏறிய போது சொர்க்கலோகத்தில் நடப்பது போன்ற ஒரு உணர்வு.. பிரம்மகிரி மலை உச்சியில் நின்று மலைக் காட்சியைப் பார்க்க  பனி மூட்டம் விலக ஆரம்பிக்க வெண் திரைச் சீலை விலகி  பச்சை நுரைத்து நுரைத்து பசுங் குமிழ்களாக எங்கும் மலைக் காடுகள் பரவி இருந்தன. காலை இளவெயிலில் பசுந்தழைகள் மின்னிக் கொண்டிருந்தன. இயற்கை அன்னையின் அழகினை கண்களிலும், மனதிலும் நிறுத்திக் கொண்டாலும் இந்நாளின் நினைவுகளை பின் வரும் நாட்களில் மீட்டெடுத்துக் கொள்ள ஏதுவாக பல புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டோம்.


       இத்தனை அழகிற்கு மத்தியில் காவேரி ஆற்றின் ஊற்றினை பார்க்கவே அற்புதமாக இருந்தது. இந்த இடம் மடிகேரியில் இருந்து 48 கி.மீ தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 1276 கி.மீ உயரத்தில் பிரம்மகிரி மலையில் அமைந்துள்ளது. இது கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தின் எல்லைக்கு அருகிலும் அமைந்துள்ளது.

காவேரி ஆற்றின் ஊற்று அமைந்திருக்கும் இடத்தில் ஒரு சிறு தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பின் மக்களின் வழிபாட்டுக்காக காவேரி அம்மனுக்கு ஒரு கோயிலும் இருந்தது. மக்கள் நாணயங்களை அங்கிருக்கும் தொட்டியில் போட்டு அம்மனிடம் வேண்டிக் கொள்கின்றனர். சிறு ஊற்றாக ஆரம்பிக்கும் காவேரி நிலத்தடியில் ஓடி காவேரி நதியாக உருவெடுக்கிறது.


            நாங்கள் கோவில் வளாகத்தினில் நடந்து வந்து கொண்டிருந்த போது பக்கவாட்டில் படிகள் வழியாக மலையேறும் பாதை ஒன்று இருந்தது.அப்பாதை கம்பி வேலிகளால் .அடைக்கப்பட்டு அதில்  கேரள எல்லைக்கான குறிப்புகள் கொண்ட அறிவிப்பு பலகையும் இருந்தது. நாங்கள் வேலியை கடந்து சென்று உள்நுழைவதற்கான பாதையை தேடி விரைந்தோம். ஆனால் அப்பாதை அடைத்திருப்பதை கண்டு திகைத்து நின்றோம்.ஆரிஷ் அங்கிருக்கும் கோவில் பணியாளர்களிடம் விசாரித்ததில் பொதுமக்களுக்கு அவ்விடத்திற்கு செல்ல அனுமதி இல்லை என்று கூறி விட்டார்கள். மிகுந்த ஏமாற்றத்தோடு கீழிறங்கத் தொடங்கினோம். கீழிறங்கும் வழியில் ஆரிஷ் ஷீலா மதினியிடம்


" ஷீலா ம்மா இங்கு தண்ணி ரொம்ப கம்மியா இருக்கு…. போற பாதையும் தெரியல பின்ன நாம வர்ற வழில அவ்வளவு தண்ணீ ஒடுற ஆத்தப் பார்த்தோம்…. எப்படி மா?" என்றான்.


"இங்கிருந்து தண்ணி நிலத்துக்குள்ள ஆறா ஓடி அப்புறம் குறிப்பிட்ட இடத்தில வெளி வந்து ஆறா ஓடும்" என்றார்.


ஆரிஷ் குழப்பமான முகபாவனையில்


" அது எப்படி மா…"என்று தலையைச் சொறிந்தான்.


நானும் மதினியும் எவ்வளவோ விளக்கம் கொடுத்தும் அவனால் அதை நம்ப முடியவில்லை. குழப்பத்திலேயே கீழிறங்கி காரை ஸ்டார்ட் செய்தான். ஆரிஷ் அருணா மதினியிடம்  


 " அடுத்து எங்கம்மா போகனும்… போற இடத்துக்கு அப்டியே கூகுள் மேப் ஆன் செய்து ஃபோனை எங்கிட்ட கொடுங்க" என்றான்.


" அடுத்து பாகமண்டலா போனும்" என்று சொல்லி  ஃபோனையும் கொடுத்தார்கள்.


மலைப்பாதை ஓரங்களில் காப்பி எஸ்டேட்டுகளையும் ,நெடிதுயர்ந்த மரங்களில் படர விட்ட மிளகு கொடிகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்கையில் ஷீலா மதினி 


" இந்த எஸ்டேட்டுகளுக்குள் நம்மள விட்டா நல்லா இருக்கும்" என்றார்.


" தெரிஞ்சவங்க யாராவது இருந்தால் போலாம்" என்றேன்.


இப்படி பேசிக் கொண்டே இருக்கும் போதே மலைக் காட்டிற்குள் செல்லும் படி ஒரு சிறு வழியை கண்டோம். உடனே ஷீலா மதினி 


" காட்டுக்குள்ள போவோமா"  என்றார். ஆரிஷிடம்


"அடுத்து இந்த மாதிரி பாதையை பார்த்தா வண்டியை ஓரங்கட்டு " என்றார்.


"சரி " என்று சொல்லிய 2வது நிமிடத்திலேயே அது போன்ற ஒரு பாதையை கவனித்து காரை ஆரிஷ் நிறுத்தினான். 


         காட்டிற்குள் செல்லப் போகும் உற்சாகத்துடன் நானும் ஷீலா மதினியும் முன் செல்ல சிறிது பதட்டத்துடன் அருணா மதினியும் அருண்சியும் பின் வந்தார்கள். ஆரிஷ் எங்களின் பாதுகாப்பிற்காக எங்களை நிறுத்தி விட்டு சிறிது தூரம் அவன் முன்னால் சென்று பாதையை நோட்டம் விட்டு பின்பு எங்களை வரும் படி சைகை செய்தான். நாங்கள் அவன் பின்னே மெதுவாக அடர் காட்டுக்குள் நுழைந்தோம். அடர்காட்டின் அமைதியும், பூச்சிகளின்  "ங்ஙீ…." என்ற ரீங்காராமும் பசுந் தழைகளின் ஈர வாசமும்  பரவசப்படுத்தின. செம்மண் இறுகி சிறு சிறு கற்கள் புடைத்து நிற்க கரடு முரடான பாதையில் காட்டுச் செடிகளின் கிளைகளை விலக்கி விலக்கி நடந்து சென்றோம். சிறிது தூரம் நடந்தவுடன் வெட்ட வெளியான ஒரு இடம் தெரிந்தது. அந்த இடத்தை நோக்கி நடந்தோம். ஆரிஷ் எங்கள் அனைவரையும் கண்காணித்தபடியே முன் சென்று கொண்டிருந்தான்.அந்த வெட்ட வெளிப் பகுதிக்கு சென்றதும் அங்கிருந்து சில அடி  தூரத்தில் ஒரு கைவிடப்பட்ட பாழடைந்த வீடு ஒன்று இருந்ததை பார்த்ததும் ஆரிஷ் அப்படியே நின்று விட்டான்.


" அம்மா போதும் போய் விடலாம் " என்றான். எனக்கோ அந்த வீட்டுக்குள்ள போய் எட்டிப் பார்த்து விடனும் என்கிற ஆசை… அருணா மதினி


" வேணாம் மது உள்ள பாம்பு, வேற எதாச்சும் பதுங்கி இருக்க வாய்ப்பு இருக்கு போய்டலாம்" என்றார். ஆரிஷ்


"  பேய் வீடு மாதிரி இருக்கு பயமா இருக்கு" என்றான்.நான்


" அதெல்லாம் ஒன்னும் இல்லை பயப்படாம  வா ! நானும் வர்றேன்…. மெதுவா போய் பார்ப்போம்" என்றேன். அருணா மதினி


 " மது அவ்ளோ ரிஸ்க் எடுக்க வேணாம் போய்டலாம்" என்றார். நானும்


" சரி " என்றேன்.


" அந்த வீட்டுக்குள் போ வேண்டாம் இந்த இடத்திலேயே சிறிது நேரம் இருந்து விட்டு போலாம் " என்றேன்.


பிறகு அங்கு நின்று சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஆரிஷ் மட்டும் அந்த வீட்டை அவ்வப் பொழுது பார்த்து பயந்து கொண்டே இருந்தான். புகைப்படங்கள் எடுத்து முடித்து காருக்கு திரும்பினோம்.



            15 நிமிட பயணத்திற்கு  பிறகு பாகமண்டலாவிலுள்ள பாகண்டேஷ்வரர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். ஆரிஷ் ஒரு இஸ்லாமியராக இருந்த போதும் எங்களுடன் எல்லா கோவில்களுக்கும் வந்து அதனைப் பற்றிய விவரங்களையும், கதைகளையும் கேட்டு அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தான். பிறகு இஸ்லாத் பற்றிய எங்களுடைய கேள்விகளுக்கும் விளக்கம் கொடுத்தான். பாகண்டேஷ்வரர் கோவில் கேரள கட்டிட கலை  முறையில் அமைக்கப்பட்டிருந்தது. நானும், ஷீலா மதினியும்  கோவில் வளாகத்தினுள் நடந்து கொண்டே விஷ்ணுபுர குழவில் பகிரப்பட்டிருந்த ஆலயக் கலை குறிப்புக்களை கொண்டு கோபுரத்தின் ஒவ்வெரு பாகத்தினையும் பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென அருண்சியின் அவறல் சத்தம் கேட்டு அவளிடம் விரைந்தோம். அவளது வலது காலைத் தாக்கிப் பிடித்துக் கொண்டு "அட்டைப்பூச்சி! அட்டைப்பூச்சி !" என்று அழுது  கொண்டிருந்தாள். நான் அவளை தாங்கிப் பிடித்துக் கொள்ள ஷீலா மதினி கைப்பையிலிருந்து ஒரு முகக்கவசத்தை எடுத்து விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருந்த அட்டைப்பூச்சியை பிய்த்து எடுத்து அருகில் உள்ள குப்பைக் கூடையில் போட்டார்.அருண்சியின் காலிருந்து இரத்தம் வழிந்து கொண்டே இருந்தது.அருணா மதினி அவரது கைப்பையிலிருந்து தீப்பெட்டி எடுத்து தீக்குச்சி முனையில் இருந்து மருந்தை மட்டும் நுணுக்கி எடுத்து இரத்தம் வழியும் இடத்தில் அழுத்தி வைத்தார்.சிறிது நேரத்தில் இரத்தம் வழிவது நின்றது ஆனாலும் அருண்சியை கோவில் வளாகத்தில் உட் வைத்து விட்டு நாங்கள் அனைவரும் கோவிலுக்குள் சென்றோம்.


              கேரள பாணியில் இருந்த கோவிலினுள் இருந்த  பெரிய திண்ணைகள்,தூண்கள், ஓடுகளால் வேயப்பட்ட கூரைகள்,சுவரோவியங்கள்மரச்சிற்பங்கள் கோவிலை அழகாய் அலங்கரித்திருந்தன.. சிவன், சுப்பிரமணியன், கணபதி என மூன்று புனித சிலைகளுக்கும் தனித் தனியே சந்நிதிகள் அமைக்கப்பட்டு வழியாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த இடத்தை பாகண்டேசுவரர் சேத்திரம் என்றும் அழைக்கிறார்கள். நாங்கள் வழிபாடுகளை முடித்து விட்டு கோவில் வளாகத்தில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு பிறகு அருகில் உள்ள திரிவேணி சங்கமத்தை பார்வையிட புறப்பட்டோம்


               .திரிவேணி சங்கமம் என்று  அறியப்படும் காவிரி, கன்னிகே மற்றும் துணை நிலப்பகுதியான சுஜ்யோதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமத்தின் கரையில் பாகமண்டலா உள்ளது. காவேரியின் பிறப்பிடமான தலைகாவேரிக்கு செல்லும் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதும், முன்னோர்களுக்கு வழிபாடு செய்வதும் வழக்கம். திரிவேணி சங்கமத்தில் அமைந்துள்ள படித்துறை வழியாக ஆற்றிற்குள் இறங்கினோம். இடுப்பளவிற்கு தண்ணீர் தெள்ளத் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது. சீரான வேகத்தில் அமைதியாக ஒழுகிச் சென்று கொண்டிருக்கும் நதியின் மோனத்தோடு எங்களது மனமும் கரைய கண்டு கொண்டிருந்தோம். அருண்சியின் கண்காணிப்புடன் கீர்த்தி மட்டும் ஆற்றிற்குள் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தாள். நாங்கள் திரிவேணி சங்கமத்தை சுற்றியுள்ள வளாகத்தினை சுற்றி வர கீர்த்தியும் கரையேறி வந்திருந்தாள்.நாங்கள் அடுத்து சிக்கி ஹோல் டேம் என்ற இடத்திற்குச் செல்லத் திட்டமிட்டோம்.


         சிக்கி ஹோல் அணைக்கட்டிற்கு 1.30 மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது. அதனால் பயணிக்கும் வழியிலே மதிய உணவினை உண்டு விடலாம் என எண்ணி ஒரு உணவகத்தில் ஆரிஷ் காரை நிறுத்தினான். ஆரிஷ் நெய்ச் சோறும் பொறித்த மீனும், அருண்சி சிக்கன் பிரியாணியும் சிக்கன் கிரேவியும் நாங்கள் மூவரும் சைவச் சாப்பாடும் ஆர்டர் செய்தோம். சாப்பிட்டு முடித்து காரில் ஏறி அரை மணி நேர பயணத்திற்கு  பிறகு சிக்கி ஹோல் அணைக்கட்டிற்கு வந்து சேர்ந்தோம்.


         சிக்கி ஹோல் அணைக்கட்டு நஞ்சராயபட்டாணா என்ற ஊருக்கு அருகே அமைந்துள்ளது. இந்த அணையானது அருகில் உள்ள கிராமங்களின் நீர்ப்பாசன வசதிக்காக 1985 ல் கட்டப்பட்டது. 865 ஹெக்டேர் நிலப்பரப்பிற்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது. 464.8 மீட்டர் நீளமும் 25.3 மீட்டர் உயரமும் கொண்ட இந்த இடம்  பசும் புல்வெளிகளால் சூழ்ந்து அழகாய் அமைந்திருந்தது . கோடை காலம் என்பதால் நீரின் கொள்ளவு சொற்பமாகவே இருந்தது. அணைக்கட்டின் தளத்தில் இருந்து பார்க்கும் போது தொலைவில் காட்சியளித்த மலைத்தொடர்களும், அணைக்கட்டினை சுற்றியிருந்த அடர் காடுகளும் அதனுள் வளைந்து செல்லும் சாலைகளும் நீர்த் தேக்கத்தின் கரையருகே பரந்து விரிந்த பசும்புல் வெளிகளும் கண்கள் வழிச் சென்று மனதில் பசுமையை நிரப்பின. நீர்த் தேக்கம் உள்ள இடத்தில் மாடுகளை மேய விட்டு ஒரு மரத்தினடியில் ஒரு தாத்தா அமர்ந்திருந்தார். இந்தக் காட்சிகளை பார்த்தவாறே பல நினைவுகளை பேசிக் கொண்டே நானும் மதினியும் நடந்து வந்தோம். நீர்த்தேக்கும் இடத்தில் ஓர் மூலையில் இராட்சத கிண்ணம் போன்ற வடிவில் ஒரு தொட்டி இருந்தது. அதிலிருந்து பக்கவாட்டில் கால்வாய் வெட்டி ஒரு நீண்ட நீர் வழிப் பாதை அமைத்திருந்தார்கள். மழைக்காலங்களில் அத்தொட்டியில் நீர் நிறைந்து கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் எடுத்துச் செல்லப்படும். அணைக்கட்டின் மேல்தளம் முடிவுறும் இடத்தில் கீழிறங்கி அணைக்கட்டின் மறுபுரம் செல்வதற்கான படிக்கட்டுக்கள் இருந்தன. நாங்கள் அதன் வழியாக சென்று புதர்களாக மண்டியிருந்த பகுதிக்கு வந்தோம். புதர்களுக்கு நடுவே நாங்கள் அனைவரும் நின்று புகைப்படம் எடுத்து ஷீலா மதினி மகனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினேன் (வேண்டுமென்றே பதட்டமடையச் செய்ய). அவன் 


" கர்நாடகாவில் ராஜநாகம் அதிகம் பார்த்து  பத்ரம்" என மெசேஜ் செய்தான். நான்


"அடுத்து அது கூட ஒரு செல்ஃபி எடுக்கலாம் என ஐடியா இருக்கு தம்பி" 

என்றேன்.


 அதற்கு பிறகு தம்பியிடம் இருந்து பதில் வரவில்லை. 


" இதுகள திருத்த முடியாது " என நினைத்திருப்பான்.


நாங்கள் அனைவரும் சிரித்துத் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தோம். ஆரிஷ் மணி 3 ஐ நெருங்கி விட்டது டுபாரே யானைகள் காப்பகத்திற்கு செல்லும் நேரமாகி விட்டது என எங்களை விரைந்து வரச் சொன்னான்.நாங்களும் காரில் ஏறி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.





              


              

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பென்சாம்- வாசிப்பனுபவம்

கர்நாடகா பயணம் - 4

மார்க்கெட் நாட்கள்