இலக்கில்லா இணையர்கள்
பகலவனின் அனலடங்கி அந்தி சாயும் நேரத்தில் திருச்சி குடியிருப்பு பகுதி ஒன்றில் இருக்கும் வணிக வளாகத்திற்கு முன் நின்று அங்கு விளையாடிக் கொண்டிருக்கும குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தோம்… நான் பொன்ராஜிடம் ஏதாச்சும் ஏடாகூடமாக பண்ணிட்டு அப்புறம் பயந்துட்டே இருக்க வேண்டியது எனச் சொல்லி சிரித்துக் கொண்டே இருந்தேன்.எனைப் பார்த்து அவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்…. அன்றும் இப்படித்தான் என் அப்பாவிற்கு தெரியாமல் பைக்கில் கொடைக்கானல் கூட்டிக் கொண்டு போய் விட்டு வந்து வீட்டில் அப்பாவிடம் கன்னா பின்னா வென்று வசவு வாங்கிட்டு இப்படித்தான் சிரிச்சிட்டு நின்றோம்… இன்று போலீஸில் மாட்டியிருந்தா…. இப்படி இங்க நின்று சிரிச்சிட்டு இருக்க மாட்டோம்…. இந்த மாதிரியான அனுபவங்கள் நம் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது இல்லையா!
நானும் என் கணவரும் சேர்ந்து பயணம் செய்தல் என்பது திட்டமிடப் பட்ட ஒன்றாக எப்போதும் இருந்ததில்லை. திடீரென்று பொன்ராஜ் இரவு 12 மணி போல் சொல்வார் "நாளைக்கு நீ காலைல 4 மணிக்கு எந்திருச்சா ஒரு எடத்துக்கு கூட்டிட்டு போவேன் நான் அதுக்கு "எங்க "னு கேட்டா"தெரியாது ! வர்ரியா, வரலயா அதை மட்டும் சொல்லு" என்பார். நான் கொஞ்சம் யோசித்தால் கூட விட்டுவிட்டு போய் விடுவார். இந்த மாதிரியும் சில பயணங்களை நான் தவற விட்டது உண்டு.அந்த மாதிரி ஒரு நாள் காலை 5 மணி அளவில் "இப்போ நான் ஒரு வேலையா சிறுமலை வரை போறேன் வர்ரியானு" கேட்டார். நானும் பழைய நினைவுகளை மனதில் கொண்டு மறுபேச்சின்றி சரி என பதில் சொன்னேன். உடனே இருவரும் குளித்து முடித்து தயாரானோம்.பொன்ராஜ் பைக் ஸ்டார்ட் பண்ண நான் அவர் பின்னே அமர வண்டி கிளம்பியது. மணி காலை 6.30 ஜனவரி மாத இளம் குளிர் காற்று முகத்தில் அறைய வண்டி வேகமெடுத்தது. மனமும் உற்சாகத்தில் வண்டியின் வேகத்தோடு. பயணித்தது..வண்டி பேருந்து நிலையம் வழிச் செல்லாமல் வேறு பாதையில் பயணிப்பதை கவனித்து "எங்க போறீங்க" னு கேட்டேன். சிறுமலைக்கு போறதுக்கு முன் நத்தத்தில் ஒரு பார்ட்டியிடம் பணம் வசூல் பண்ண வேண்டியுள்ளது. பின் அங்கிருந்து நாம் சிறுமலைக்கு போகலாம் என்றார். எனக்கு புரிந்து விட்டது தலைவர் பைக்கிலேயே பயணிக்க முடிவெடுத்துட்டார்..
பொன்ராஜ் சாக்கு வியாபாரம் செய்து வருகிறார் . ரேஷன் கடைகளிலும் மற்றும் கொள்முதல் கூடங்களிலும் உள்ள சாக்குப்பைகளை டென்டர் மூலம் ஏலத்தில் எடுத்து அதனை பின்பு எங்கள் குடோனுக்கு கொண்டு வந்து ரகம் பிரித்து , உதறி தூசு. குப்பைகள், தவிடுகள் நீக்கி கிழிசல்களை தையலிட்டு ரகம் வாரியாக 50 சாக்குகளாக கட்டு போட்டு விற்பனைக்கு தயார் படுத்தனும். 10 வருடம் முன்பு வரை எப்பொழுதும் சாக்கு தைப்பதற்கு குடோனில் வேலைக்கு ஆள் வைத்திருந்தோம். இப்பொழுது வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் தட்டுப்பாடாகவே இருக்கிறது. அந்த மாதிரி சமயங்களில் நானும் என் கணவரும் சேர்ந்தே சாக்கு கட்டுக்களை போட்டு வைப்பதும் உண்டு. சிறிது கடுமையான பணிதான் ஆனாலும் குறித்த நேரத்தில் வியாபரிகளுக்கு சரக்கை கொடுத்தால்தான் வியாபாரத்தை தொடர்ந்து நடத்த முடியும். அதனால் வேலை ஆட்களை எதிர்பார்ப்பதில்லை. எனக்கு ஆஸ்துமா இருப்பதால் ஆரம்பத்தில் இந்தப் பணி பெரும் சவாலாக இருந்தது …தொடர்ந்து சாக்குப் பைகளை உதறியதில் தூசியோடு ஆஸ்துமாவும் பறந்தது…
இப்பொழுது விற்ற சரக்குகளுக்கு பணம் வசூல் பண்ணுவதற்காகத்தான் இந்தப் பயணம். வண்டியிலேயே சிறுமலை வரைப் பயணம் என்ற உடனே மனதிற்குள் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கியது. எங்களுக்கு திருமணமான புதிதில் எனது ஊர் பட்டிவீரன்பட்டியிலிருந்து கொடைக்கானலுக்கு பொன்ராஜ் பைக்கில் அழைத்துச் சென்றார். மறக்க முடியாத பயணம் அது. 3 மணி நேர பயணமாக கொடைக்கானல் சென்றோம். அப்பொழுதெல்லாம் செல்போன்கள் கிடையாது. நாங்கள் வீட்டிற்கு வரும் வரை பைக்கிலேயே கொடைக்கானல் சென்றது யாருக்கும் தெரியாது. வீட்டுக்கு வந்தவுடன் வீட்டிலுள்ள அனைவருக்கும் தெரிய வந்தது… கன்னாபின்னா வென்று வசவுகள் ஆனால் நாங்களோ சிரித்துக் கொண்டே இருந்தாம். தேன்நிலவு நாட்களில் இதெல்லாம் ஒருவித சிலிர்ப்பான அனுபவம்தான். அப்பொழுது எங்கள் குடும்பத்தில் நிறைய புதுமணத் தம்பதிகள் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த விஷயம் தெரிய வந்த பொழுது என்னிடம் வந்து "செமயா என்ஜாய் பண்ணிருக்கீங்கபோல" என்று கூறி வெட்கப்பட வைத்தார்கள்.(நாமெல்லாம் என்னைக்கு வெட்கப்பட்டோம் சும்மா சொல்லி வைப்போம் ) .
பொதுவாகவே பொன்ராஜ் 3 மணி நேரம் பயணத் தூரம் வரை பைக்கில் பயணிப்பது என்பது அவர் வழக்கம். திருமணத்திற்கு பின்பு என்னையும் அவ்வாறே அழைத்துச் சென்றார். ஆனால் ஹிமாஸ்ரீ பிறந்த பிறகு பைக் பயணம் செய்வதை தவிர்த்து விட்டோம். ஹிமா தஞ்சாவூர் கல்லூரியில் சேர்ந்த பிறகு மீண்டும் இந்த பைக் பயணம்.
வண்டி கிளம்பி அரை மணி நேரத்திலேயே வெயிலேறி வர ஆரம்பித்தது. வணிகம் செய்பவர்களுக்கு பெரும்பாலும் குடும்ப உறவுகளுடன் நேரம் செலவிடுவது என்பது மிகக் குறைவாகவே இருக்கும். என் கணவரும் அடிக்கடி வணிகரீதியான பயணங்களில் இருப்பதால் எங்களுடனான உரையாடல் மிகக் குறைவுதான். இது போல் இருவரும் சேர்ந்து பயணிக்கும் போதே நிறைய பேசுவோம். ஆனால் பைக் பயணத்தில் ஹெல்மெட் அணிந்திருப்பதால் பேச இயலாது. அதனால் சாலையோரக் காட்சிகளை பார்த்த வண்ணம் பயணித்துக் கொண்டிருந்தோம்.சாலைகளின் இருபுறமும் மாந்தோப்புக்களை கண்டவுடன் வண்டி நத்தத்தை நெருங்கி விட்டது என அறிந்தேன். மார்கழி மாத ஈரப்பதத்தில் மாமரங்கள் அனைத்தும் பூத்திருந்து மா வின் இளநெடியை காற்றில் பரப்பியிருந்தது …இந்த காட்சியை கண்டவுடன் 'முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு" என்ற குறள் என் நினைவில் தோன்ற மறுகணம் என் முகத்தில் புன்சிரிப்பும் மலர்ந்தது. அச்சமயம் அங்கு ஒரு இளநீர் கடையைக் காண வண்டியை நிறுத்தினார் பொன்ராஜ். ஆளுக்கொரு இளநீரை பருகி விட்டு அடுத்து நத்தத்தில் பார்க்க வேண்டிய நபரின் கடைக்குச் சென்றோம். பொன்ராஜ் என்னிடம் வண்டியின் அருகே நிற்கச் சொல்லிவிட்டு 5 நிமிடத்தில் வருகிறேன் என்று கூறி கடைக்குள் சென்றார். கணக்கை முடித்து விட்டு பணத்தையும் வசூல் செய்து விட்டு வந்தார். இப்போ சிறுமலைக்கு கிளம்பலாம் என்று வண்டியை ஸ்டார்ட் செய்தார்.
சில நிமிட பயணத்திற்கு பிறகு சிறுமலை அடிவாரம் வந்து சேர்ந்தோம். அங்கு ஒரு ஐஸ்கிரீம் கடை இருப்பதைக் கண்டு வண்டியை நிறுத்தச் செய்தேன். இருவரும் கடைக்குள் சென்று ஃப்ரூட் சாலட் ஆர்டர் செய்தோம்.பொன்ராஜ் அந்த கடைப் பையனிடம் பேச்சுக் கொடுத்தார். சிறுமலையில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி கேட்டார். அந்தப் பையனோ " பெருசா எதுவும் இல்லை சார் ! கிளைமேட் சில்லுனு இருக்கும் கோவில் ஒன்னு இருக்கும் அந்த இடம் பார்க்க கொஞ்சம் நல்லா இருக்கும் அவ்ளோதான்." என்றான்.பின் நானும் அவரும் ஃப்ரூட் சாலட்டை சாப்பிட்டு கொண்டே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கடையிலிருந்து வெளியேறி அவர் வண்டியை சிறுமலை நோக்கி இயக்கினார்.
மலையின் மேல் ஏற ஏற சாலையின் இருபுறமும் அடர்ந்த மரங்களும், செடி கொடிகளுமாக பசுமையை அள்ளித் தெளிக்க பனிகாற்றின் ஸ்பரிசமும் கிடைத்தது…. மதுரை போல வறண்ட நிலத்தினை வாழ்விடமாக கொண்ட எங்களுக்கு குளிர் மனதிற்கு இனிமையான அனுபவத்தை கொடுக்க கூடியது. ஆனால் எஸ்.ராவின் எழுத்துக்களில் ஆழ்ந்திருந்த போது வெயிலையும் இரசிக்க கற்றுக் கொண்டிருந்தேன். என் சித்தப்பா ஒருவர் மருத்துவர் கவிதைகளும் நிறைய எழுதுவார். அவர் காலையில் 9 மணிக்கு மேல் நடைப் பயிற்சிக்கு செல்வார். ஏன் சித்தப்பா இந்த வெயிலில் போறீங்க என கேட்டால் தனக்கு வெயில் பிடிக்கும்… என்பார்.அவருடைய கவிதைகளில் வெயில், தூசிகளை எல்லாம் சிலாகித்து எழுதியிருப்பார். இப்படியாக எண்ணங்கள் மலைப்பாதையின் போக்கில் வளைந்து நெளிந்து போக வண்டியும் மேலேறிப் போகப் போக நல்ல குளிரை உணரத் தொடங்கினோம்…. இப்பொழுது என் மனம் முழுக்க ஹிமாவை நினைத்துக் கொண்டிருந்தது. அவள் இல்லாமல் இந்தக் குளிரும் கசந்தது…. அவளுக்கு தெரிந்தால் அவளும் கோபிப்பாள்… ஏன் என்னை விட்டுட்டு போனீங்கனு … கேட்பா?....பின்பு மனதை தேற்றிக் கொண்டு மலைப் பாதையின் அழகை ரசித்தபடி போய்க் கொண்டிருந்தோம்… சிறுமலை ஊருக்குள் நுழைந்தவுடன் அங்கிருக்கும் ரேஷன் கடைக்கு வழி கேட்டு சென்றோம். அவர் ரேஷன் கடை ஊழியரிடம் கணக்குகளை சமர்ப்பித்து பணம் கொடுப்பதற்காக எண்ண ஆரம்பித்தார். அப்பொழுது ரேஷன் கடை ஊழியர் வேறு ஒரு கணக்கை காண்பித்து அதில் கையொப்பம் கேட்டார். அதில் நாங்கள் வாங்கிய சரக்கினை விட அதிக எண்ணிக்கை இருந்தது…இவர் அதில் கையெழுத்திட மறுத்துக் கூற ஆரம்பித்தார். அந்த ஊழியர் கோபமாக பேசினார். வாக்குவாதம் வழுத்தது…. பின் ஊழியர் சாந்தமாகி இவரை சமாதானப் படுத்தி சம்மதிக்க வைக்க முயற்சித்துப் பார்த்தார்.இவரும் பிடிவாதமாக மறுத்து விட்டார்…மேலும் நான் சரக்கை மீண்டும் உங்களுக்கே திருப்பி அனுப்பி விடுகிறேன் என்று கூறி எழுந்து விட்டார். நான் சும்மா இருக்க மாட்டாமல்" நீங்க ப்ளாக்கில் விற்ற சரக்கிற்கு நாங்க ஏன் சார் துணை போகனும் னு கேட்டு விட்டேன்." அந்த ஊழியர் முகம் கோபத்தில் கடுகடுவென சிவந்தது…. "நீ யாருமா ஆம்பளைங்க பேசிட்டு இருக்கறப்போ நடுவுல" என்றார். இவர் " என்ன சார் இதுல ஆம்பள பொம்பள னு சொல்லிட்டு கரெக்டாத்தானே கேட்கிறா…" என்று கூறி இவர் என் கையைப் பிடித்து வா என சொல்லி அலுவல் அறையிலிருந்து வெளியே கூட்டி வந்து விட்டார். இவர் என்னிடம் சரக்கை திருப்பி அனுப்பினால் செலவு கணக்கு கூடிவிடும் நட்டம் வரும் என புலம்பிக் கொண்டிருந்தார். அச்சமயம் அந்த ஊழியர் வெளியே வந்து உங்க கணக்கை முடிச்சிட்டு பணத்தை கொடுத்துட்டு போங்க … எனக் கூறினார். இவரும் பணத்தை கொடுத்துவிட்டு கணக்கினை முடித்து இவர் கணக்குப்படி இருந்த ஆவணத்தில் கையெழுத்திட்டு வந்தார். வெளியே வந்து வண்டியை ஸ்டார்ட் செய்து கீழே இறங்க ஆரம்பித்தோம். ஐந்து நிமிடத்திலேயே வண்டியை ஓரமாக நிப்பாட்டுங்க எனக் கூறினேன். அவர் மிகவும் சோர்ந்திருந்தார்…. நான் என்ன என்று கேட்க…. அவர் இனி டென்டர் நம்ம கைக்கு வராது… என்றார். போகுது போங்க அதுக்காக அவன் சொல்றதெல்லாம் கேட்க முடியுமா ? என்றேன்… அவர் அமைதியாக இருந்தார். அவர் அங்கிருந்த பள்ளத்தாக்கில் தனித்து நின்று கொண்டிருந்த ஒரு பாறையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க திடீரென சில்லென்று காற்று எங்களை கடந்து செல்ல நான் அவரின் கைகளை இறுகப் பற்றினேன். அவர் என்னை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். அப்படியே சிறிது நேரம் பாறையின் மோனத்தோடு கரைந்து
அங்கேயே நின்றிருந்தோம்…தூரத்தில் பனி மூட்டம் நகர்ந்து செல்வதை பார்த்து கொண்டிருந்தோம் மனதும் தெளிந்து இலகுவாகியது…பொன்ராஜ் அடுத்து திண்டுக்கல் போலாமானு ? கேட்டார். "எதுக்கு ? "என்றேன் அங்கேயும் பண வசூல்தான் என்றார். சரி என்றேன்.
பொதுவாக பொன்ராஜ் மனதில் ஒரு திட்டம் வைத்திருப்பார். ஆனால் திடீர் திடீரென ஒவ்வொன்றாய் சொல்வார் …. இன்னும் எத்தனை ஊர் அவர் மனத்திட்டத்தில் உள்ளது என்ற கேள்வியுடன் பைக்கில் ஏறி அமர்ந்தேன்… பயணம் தொடர்ந்தது.
பொன்ராஜ் திண்டுகல்லில் ஒரு உணவகத்திற்கு வியாபாரியை வரச் சொன்னர். நாங்கள் மதிய உணவை அந்த வியாபரியுடன் உண்டு களித்தோம். கணக்குகள் பேசி முடித்து பணத்தை கொடுத்து விட்டுச் சென்றார். அடுத்ததாக திருச்சிக்கு போகனும் என்றார். நான் அதிர்ச்சியில் " என்ன சொல்றீங்க? உங்கள் உடம்பு என்னத்துக்காகும் …. விளையாடுறீங்களா?'" என்றேன். "இல்லைப்பா இவ்வளவு தூரம் வந்துட்டோம்…வேலையை முடிச்சிட்டு போயிடலாம்". என்று என்னை சமாதனப்படுத்தினார். நான் அரைமனதோடு தலை அசைக்க திருச்சியை நோக்கி பயணம் தொடர்ந்தது…
திண்டுக்கலிலிருந்து திருச்சிக்கு தேசிய நெடுஞ் சாலையில் பயணித்தோம். நானும் அவரும் பேசிக் கொண்டே போய்க் கொண்டிருந்தோம். (ஆமா நீங்க யோசிப்பது சரிதான் ஹெல்மெட் அணிந்து கொண்டால் எப்படி பேசுவது கேட்கும்.பொன்ராஜ் ஹெல்மெட் போட மறந்துவிட்டார். அதைச் சொல்ல நானும் மறந்து விட்டேன்). திருச்சி ஒன்றேகால் மணிநேர பயண நேரத்திற்குப் பின் திருச்சி மாநகருக்குள் நுழைய ஒரு செக்போஸ்ட்டில் காவலர் ஒருவர் வண்டியை மறித்து நிறுத்தினார். ஹெல்மெட் எங்கே எனக் கேட்டுக் கொண்டே வண்டியை ஓரங் கட்டச் சொல்ல அப்பொழுதுதான் ஹெல்மெட் அணியாததை உணர்ந்தரர். வண்டியை மெதுவாக ஓரங்கட்ட முயல இன்னொரு காவலர் வண்டியை ஓரங்கட்டும் இடத்தை நோக்கி சைகை செய்தார். அவர் போகச் சொல்லி விட்டார் என தவறாக புரிந்து கொண்டு அவருக்கு நன்றியும் தெரிவித்துவிட்டு ஹெல்மெட்டை யும் அணிந்து கொண்டு வண்டியை சாலையை நோக்கி திருப்பி வேகமெடுத்தார். அப்பொழுது திடீரென பெண் காவலர் ஒருவர் எங்களை நோக்கி கத்தினார். எங்களுக்கு அந்நேரத்தில் புரியாமல் போய்க் கொண்டே இருந்தோம்… சில நிமிடங்கள் கழித்தே புரிபட்டது. புரிந்ததும் அவருக்கு பயம் தொற்றிக் கொள்ள சாலையிலிருந்து பிரிந்து சென்ற ஒரு தெருவிற்குள் வண்டியை செலுத்தினார். வணிக வளாகத்தின் முன் வண்டியை நிறுத்த நான் அவரை ஆசுவாசப்படுத்தினேன். பிறகுதான் கேட்டேன் ஏன் வண்டியை இந்தப்பக்கம் திருப்பி கடையில் நிறுத்துனீர்கள் என்றேன்.அவர் காவலர்கள் துரத்தி வந்துடுவாங்க பயந்து திருப்பிட்டேன்…. நான் அவரிடம் " மாப்ள அப்ப ஃபைன் கட்ட பயந்து வேணும்னே தப்பிச்சு வந்தீங்களா!" என்றேன். அவர் " நீ ஒரு ஆள் போதும் போய் என்னை போலீஸ்ட்ட பிடிச்சு கொடுத்துடுவ போல…. நானே உன் கிட்ட பேசிகிட்டே ஏதோ ஞாபகத்துல ஹெல்மெட்டும் போடாம மாட்டிகிட்டு பின் தெரியாம தப்பா வந்துட்டேன்னு பயந்துட்டு இருக்கேன்…நீ வேற…" என பதறினார்…. அதற்கு நான் " வாங்க திரும்பி போய் ஃபைன் கட்டி விட்டு வருவோம் ".என்றேன். உடனே அவர் என்னைப் பார்த்து முறைக்க நான் சிரிச்சிக்கிட்டே சரி சரி வாங்க எனச் சொல்லி விட்டு அந்த கடைக்குள் சென்று சில பொருட்கள் வாங்கிக் கொண்டேன். இப்ப போலாமா? என்றேன்… சரி என்று சொல்லி அவரும் வண்டியை ஸ்டார்ட் செய்தார்.நாங்கள் போக வேண்டிய இடம் திருச்சியின் புறநகர்ப் பகுதியில் உள்ளது. அங்கு போகும் வழியில் திருச்சி தொழில் நுட்பக் கல்லூரியை கண்டேன்.
ஹிமாவிற்கு திருச்சியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்து படிப்பது ஒரு கனவாக இருந்தது. அதற்கு தகுந்தாற் போல் அவள் நுழைவுத் தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாள்.. ஆனால் கலந்துரையாடலுக்கான விண்ணப்பத்தில் ஏற்பட்ட பிழையால் அவள் அங்கு சேரும் வாய்ப்பை இழந்தாள்.நாங்கள் தஞ்சாவூருக்கு பயணிக்கும் பொழுதெல்லாம் அக்கல்லூரியை கடக்க நேரிடும். அப்பொழுது ஹிமாவும் நானும் ஒரு ஏக்கத்தோடு கடந்து செல்வோம். அதே போல் இந்த முறையும் அக்கல்லூரியை நான் கடந்து சென்றேன். இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது ஹிமாவிடம் இருந்து ஒரு செய்தி கனடாவில் அவள் மேற்கொண்டிருக்கும் ப்ராஜக்ட் ஐ பார்வையிட திருப்பதி ஐ.ஐ.டி யிலிருந்து பேராசிரியர்கள் வருகிறார்கள் எனக் கூறினாள். மேலும் தான் தவற விட்ட கனவு அவளுடைய கடின உழைப்பினால் தன் கனவிற்கும் மேற்பட்ட நிலையை அடைந்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தாள். பயணக் கட்டுரை வழி தவறி பயணிக்கிறதோ…. மீண்டும் பயணத்துக்கு திரும்புவோம் ….
நாங்கள் வர வேண்டிய இடத்திற்கு வந்தோம்… இப்பொழுது நாங்கள் பார்க்க வந்திருக்கும் நபர் எனக்கும் மிகவும் பழக்கமானவர்… அவர் நாங்கள் இருவரும் வண்டியிலேயே பயணித்து வந்ததை குறித்து இவரிடம் கண்டித்து பேசிக் கொண்டிருந்தார்… என்னிடமும்…. அவர் தான் அப்படினா நீங்களாவது எடுத்துச் சொல்லக் கூடாதா? என்றார். அதற்கு நான் "எனக்கே இப்போதான் அண்ணா சொன்னார். நான் சொல்றதை அவர் எங்க கேட்கிறார்?"என்றேன்.பின்பு பொன்ராஜ் அவரிடம் பில் கொடுப்பதற்காக வந்திருப்பதாக சொல்லி அவரிடம் அந்த பில்லையும் ஒப்படைத்தார். இதுக்கா இவ்வளவு தூரம் வந்தீங்க என அந்த அண்ணா கேட்க இவரும் புன்னைகத்துக் கொண்டே தஞ்சாவூரில் பாப்பாவை பார்க்கப் போவதாகவும் அப்படியே அவரிடம் பில்லை கொடுக்க வந்ததாகவும் கூறினார். நான் அதிர்ந்து அவரைப் பார்க்க அந்த அண்ணன் " வாங்க வீட்டுக்கு போலாம் …ரெஸ்ட் எடுத்துட்டு நாளை காலை எழுந்து பாப்பாவை பார்க்கப் போலாம் " என கூறினார். இவர் பிடிவாதமாக மறுத்துவிட்டு வெளியேறினார். என்னிடம் அவர் இன்னும் 45 நிமிட பயணம் தான் பாப்பாவை பார்த்துட்டு திரும்பிடலாம் என்றார். நான் அதுக்குப் பிறகு 4 மணி நேரம் பயணிக்கனும் என்றேன்…. பார்த்துக்கலாம் வா என்று வண்டியை கிளப்பினார்.
இப்பொழுது இருள் கவிய ஆரம்பித்திருந்தது. வண்டி ஓடும் வேகத்தில் குளிர் உடலை ஊடுறுவ பயணக் களைப்பில் சோர்ந்திருத்த எனக்குள் மீண்டும் உற்சாகம் பிறந்தது…. ஹிமாவை பார்க்கப் போகிறோம் என்கிற எண்ணமும் என் உற்சாகத்திற்கு காரணமாயிருக்கலாம். அடுத்த 45 வது நிமிடத்தில் நாங்கள் ஹிமா கல்லூரிக்கு வந்து சேர்ந்தோம். திருச்சியிலேயே ஃபோன் பண்ணி ஹிமாவிடம் நாங்கள் வரும் தகவலை கூறியிருந்ததால் அவள் விடுதியின் வாசலில் அவள் தோழிகளுடன் காத்திருந்தாள்.அவர்கள் அனைவரும் நாங்கள் மதுரையிலிருந்து வண்டியில் வந்ததை குறித்து வியந்து பேசிக் கொண்டே இருந்தார்கள். ஹிமா மட்டும் எங்கள் இருவரையும் பார்த்து எரிமலை போல் பொங்கிக் கொண்டிருந்தாள்.நான் அதைப் பார்த்து சிரிக்க அவள் வெடுக்கென்று தலையை சிலுப்பிக் கொண்டு அவள் அப்பாவிடம் சென்று என்னையும் இதே மாதிரி ரைடு கூட்டிட்டு போகனும் என சத்தியம் வாங்கிக் கொண்டாள்.நானும் அவளை ஒருவாறு சமாதானப்படுத்திவிட்டு சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
இப்பொழுது குளிர் நன்றாகவே ஏறி இருந்தது. பகலில் வரும் போது நாங்கள் கண்ட காட்சிகளெல்லாம் இப்பொழுது இருளில் வெறும் சாயைகளாக காட்சி அளித்தன… இருளில் மரங்களும், கட்டிடங்களும் , நிலவும் பனியில் உறைந்து கொண்டிருந்தன. மனம் எதையும் சிந்திக்க முடியாத வண்ணம் பனியில் நடுங்கி கொண்டே பயணித்துக் கொண்டிருந்தோம். ஆங்காங்கே வரும் பெட்ரோல் பங்குகளில் வண்டியை நிறுத்தி சிறிது ஓய்வெடுத்து பயணத்தை தொடர்ந்தோம். இரவு 1.20 க்கு வீடு வந்து சேர்ந்தோம்.
ஓர் இலக்கினை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கிறோம். எல்லா பயணங்களும் இலக்கினை அடைகின்றனவா என்பது ஒரு கேள்விக்குறிதான்…சில பயணங்கள் இலக்கினை தவறவிடலாம்…. சில பயணங்கள் இலக்கையும் தாண்டிச் செல்ல வாய்ப்புண்டு…. நாம் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்போம்… அதுவே நம்மை அன்றாடச் சலிப்புகளிலிருந்து நம்மை மீட்டெடுத்து வாழ்வினை செம்மைப்படுத்தும்.
கருத்துகள்
கருத்துரையிடுக