கர்நாடகா பயணம் - 5
பயணங்கள் சில நேரங்களில் நம் இனிய கடந்த கால நினைவுகளை மீட்டெடுத்து பயணங்களை மேலும் இனிமையாக்குகின்றன. வரலாற்று நினைவுச் சின்னங்கள் அந்தக் காலத்து மனிதர்களை , நிகழ்வுகளை நேரடியாக நினைவு கூர்ந்து பார்க்கச் செய்கிறது.
மடிகேரியிலிருந்து ஷக்லேஷ்புர் கோட்டைக்கு 2.30 மணி நேரம் பயணிக்க வேண்டி இருந்தது. நாங்கள் பார்க்க வேண்டிய இடங்களை பார்ப்பதற்கு முன் அதனைப் பற்றிய தகவல்களை அருணா மதினிதான் கூகுளில் பார்த்து சொல்லிக் கொண்டே வருவார். மதினியுடன் உரையாடியதில் அவருக்கு வரலாற்றின் மீதான ஈடுபாட்டினை உணர முடிந்தது. ஷக்லேஷ்புர் கோட்டை திப்பு சுல்தானால் 1792 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதைப் பற்றி மதினி கூறும் பொழுது திப்பு சுல்தான் பற்றி பள்ளி நாட்களில் படித்த அத்தனை தகவல்களையும் எங்களிடம் விவரித்து கொண்டே வந்தார்.
ஷக்லேஷ்புர் கோட்டை கர்நாடகா மாநிலத்தில் ஹசன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோட்டையானது கடல் மட்டத்திலிருந்து 3241 அடி உயரத்தில் 988 மீட்டர் உயரத்தில் மலையின் மீது நட்சத்திர வடிவில் ஐரோப்பிய பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட கோட்டையை திப்புசுல்தான் பார்வையிட வந்த பொழுது கோட்டை முழுவதும் மூடுபனியால் மூடப்பட்டிருப்பதைக் கண்டு இதற்கு மஞ்சராபாத் கோட்டை என பெயர் சூட்டினார் .
நாங்கள் கோட்டைக்கு வந்து சேர்ந்த பொழுது காலை 10.30 மணியாகி இருந்தது. கோடை காலம் என்பதால் நல்ல வெயில் ஏறி வந்திருந்தது. மடிகேரியின் இனிய பருவநிலையில் இருந்த நாங்கள் இங்கு கொளுத்தும் வெயிலை எதிர் கொண்டோம். கோட்டைக்கு செல்ல 300 படிகள் ஏற வேண்டியதை நினைத்து மதினி இருவரும் திகைத்தனர் என்றாலும் பார்க்க வேண்டிய ஆவலில் ஏற ஆரம்பித்தார்கள். மலை மீது ஏறும் படிகள் என்பதால் மிகவும் செங்குத்தாக அமைக்கப்பட்டிருந்தது அவர்களுக்கு அதில் ஏறுவது சிறிது கடினமாகவே இருந்தது. எனக்கு வெயிலின் காரணமாக அவர்களுடன் மெதுவாக வருவது கடினமாக இருக்கவே விரைந்து படியேறத் தொடங்கினேன். மதினி இருவரும் , அருண்சியும் 20 , 30 படிகள் ஏறிய உடனே சிறிது ஓய்வெடுத்து ஏறுவார்கள். நான் விரைந்து மேலேறிச் சென்று நிழலாக உள்ள ஒரு இடத்தில் நின்று கொண்டேன். சில மணித் துளிகளில் ஆரிஷும் வந்து சேர்ந்தான்.கீர்த்தி ஓடி ஓடி படியேற அவளை துரத்திக் கொண்டே அருண்சியும் வந்து சேர்ந்தாள். பின்னர் மெதுவாக மதினி இருவரும் வந்து சேர்ந்தனர். அனைவரும் வந்து சேரவும் கோட்டைக்குள் நுழைந்தோம்.
கோட்டையானது அடர்காட்டிற்கு நடுவே மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. கோட்டையின் சாய்வான சுவர்களில் ஆங்காங்கே பாசி படர்ந்து பசும் மணத்தை பரப்பிக் கொண்டிருந்தது.கோட்டையின் உட்புறம் நிறைய அறைகளும், பதுங்குமிடங்களும், ஆயுத கிடங்குகளும், போர் வீரர்கள் தங்குமிடங்களும் இருந்தன. வெளிப்புறம் வெப்பமாக இருந்த பொழுதும் உட்புறம் மிகவும் குளிர்ச்சியாக இருக்குமாறு அமைக்கப்பட்டிருந்தது. நாங்கள் ஒவ்வொரு அறைக்குள்ளும் சென்று பார்த்தோம். சில இடங்கள் மிகவும் சேதமாகியும் வெளவாலின் எச்ச மணத்துடனும் இருந்தன. அந்த கால கட்டத்தில் இருந்த கழிவறைகளும் சில இருண்ட ஒடுக்கமான பாதாள அறைகளும் காணக் கிடைத்தன. இந்தக் கோட்டையை வலம் வந்த போது வெண்முரசு வாசிக்கையில் எனது கற்பனையில் உருவாக்கிய போர்க்கள காட்சிகள் நினைவில் எழுந்து வந்தன.
நாங்கள் கோட்டையின் மேல் தளத்திற்கு வந்த போது நட்சத்திர வடிவில் இருந்ததை பார்க்க முடிந்தது . மேல் தளம் முழுவதும் புல்வெளிகளால் சூழப்பட்டிருந்தது. கோட்டையின் நடுவே படிகளுடன் கூடிய ஆழ்கிணறு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் படிகளின் வழியாக நாங்கள் இறங்க முயற்சித்தோம். படிகள் மிகவும் குறுகலாக இருப்பதால் இறங்குவதில் உள்ள அபாயம் அறிந்து மேலேறி விட்டோம். ஆழ்கிணற்றிற்கு அடுத்தாற் போல் அமைந்திருந்த 2 பாதாள அறைகளை பார்வையிட்டோம்.நட்சத்திர வடிவ கோட்டையின் ஒவ்வொரு முனையிலும் காவல் மாடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. காவல் மாடங்களில் உள்ள சாளரம் வழியாக பார்த்த போது அக்காலகட்டத்தில் எதிரி நாட்டுப் படைகளை கோட்டையிலிருந்து எவ்வாறு கண்காணித்து தாக்கியிருப்பார்கள் என யூகிக்க முடிந்தது. கோட்டையின் மேல் தளத்தில் இருந்து பார்த்த பொழுது சுற்றி அமைந்துள்ள அடர் கானகத்தின் முழுமையான அழகு காணக் கிடைத்தது. ஆரிஷ் காவல் மாடத்தின் மீது ஏறி ஓட கீர்த்தி
"அண்ணா கீழ இறங்கி வாங்க" என கத்திக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட நாங்கள் அனைவரும் பதற ஆரிஷ்
" இப்படியே என்னை ஒரு ஃபோட்டோ எடுங்க கீழ எறங்குறேன் " என்றான்.
ஆரிஷ் கீழிறங்கி வந்தவுடன் கோட்டையை விட்டு வெளியேறினோம். மிகவும் உற்சாகத்தோடு இருந்த கீர்த்தியுடன் நானும் சேர்ந்து படிகளில் நிற்காமல் விறுவிறுவென இறங்கி வந்தேன். கீர்த்தியுடன் வேகமாக இறங்கி வந்த நான் அவளோடு சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தேன். அனைவரும் வந்து சேர அடுத்ததாக நாங்கள் பேலூரில் பதிவு செய்திருந்த தங்குமிடத்திற்கு பயணித்தோம்.
காரில் ஏறியவுடன் நான் எனது ப்ளேலிஸ்ட் பாடல்களை ஒலிக்கவிட்டேன். ஆரிஷ் என்னிடம்
" மதும்மா வேறு ஏதாவது பாடல் போடுங்க " என்றான். நான்
" ஹிந்தி பாட்டு போடவா? " என்றேன்.
" வேணாம்மா வேறு ஏதாச்சும்"
" சூஃபி பாடல்கள் போடவா?"
" ம்ம்.. போடுங்கம்மா" என்றான்.
நான் சூஃபி பாடலை ஒலிக்கவிட்டேன், உடனே அருண்சி பாடலை நிறுத்தி விட்டு என்னோட ப்ளூடூத்தை ஆஃப் செய்து அவளோட பிளேலிஸ்ட் பாடல்களை ஒலிக்க விட்டாள். நானும் மதினியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டு அமைதியாக வந்தோம். 1 மணி நேர பயணத்திற்கு பிறகு பேலூர் தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம்.
தங்குமிடத்தின் மேலாளரிடம் பெலவாடி, ஹளேபீடு கோயில் நேரம், செல்வதற்கான தூரம் விபரங்களையும் கேட்டறிந்து கொண்டோம். அறைக்குச் சென்று ரெஃபிரஸ் செய்து கொண்டு மதிய உணவிற்காக தங்குமிடத்தில் உள்ள உணவகத்திற்கு வந்தோம். காலையில் வெகு விரைவில் சாப்பிட்டதால் நல்ல பசி …. மெனு கார்டை பார்த்தேன்…. எல்லா வகை உணவுகளும் மிகவும் விலை உயர்வாக இருந்தன.. மதினி
"ரொம்ப பசிக்குது மது யோசிக்காம எதாவது ஆர்டர் பண்ணு" என்றார்.
நான் அனைவருக்கும் வெஜ் மீல்ஸ் ஆர்டர் செய்தேன். ஆர்டர் செய்து அரை மணி நேரம் கழித்து சாதமும், சாம்பாரும், அப்பளம் மட்டுமே வந்தது. ஆரிஷ் சர்வரிடம்
" வெஜிடபிள்ஸ், ரசம், தயிர்…லாம் எங்க…?" என்றான்.
"ஒன்லி சாம்பார்" என்று சொல்லி விட்டு போய் விட்டார். நாங்களும் சாப்பிட ஆரம்பித்தோம். தயிர் மட்டும் மீண்டும் ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டோம். கீர்த்தி சாதத்தை கீழே சிதறி சிதறி சாப்பிட்டு கொண்டிருந்தாள். ஆரிஷ் கீர்த்தியிடம்
" பாப்பா சாப்பாடை வேஸ்ட் பண்ணாத ஹராம்…. சாமிக்கு பிடிக்காது… சிதறாம சாப்பிடு"
என்று கண்டிக்கும் குரலில் கூறிக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்து வெளியேறிய போது ஆரிஷ் எங்களிடம்
"இவ்ளோ காசா… இந்த சாப்பாட்டுக்கு பேசாம சாதமும் ஊறுகாயும் மட்டும் வாங்கிருக்கலாம்…. அது மட்டும் தான் நல்லா இருந்துச்சு " என்றான். நாங்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே காரில் ஏறினோம்.
40 நிமிட பயணத்திற்கு பிறகு பெலவாடி வீரநாராயணர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். இக்கோயில் போசாளப் பேரரசர் இரண்டாம் வீரவல்லாளன் அவர்களால் கி.பி.1200 ல் போசாளர் கட்டிட முறையில் கட்டப்பட்டது. வைணவக் கோயிலான வீரநாராயணர் கோயிலில் விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான 8 அடி உயர நாராயணனின் முக்கிய சன்னதி, 7 அடி உயர புல்லாங்குழல் இசைக்கும் வேணு கோபலன் சன்னதி மற்றும் யோக நரசிம்மர் சன்னதிகள் அமைந்துள்ளது.
நாங்கள் உள்நுழைந்த போது கோவிலில் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே இருந்தது. மிகவும் அமைதியான சூழலில் ஒரு கிராமத்திற்குள் இப்படி ஒரு அழகிய கோவிலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அர்ச்சகர் இல்லாததால் நாங்கள் கோவில் வெளிப்புறமுள்ள சிற்பங்களை பார்வையிடத் தொடங்கினோம். முகப்பில் இருந்த அணிகலன்களுடன் கூடிய யானை சிற்பத்தையே நான் வெகுநேரம் கண்டு கொண்டிருந்தேன். விஷ்ணுபுர நாவலில் வரும் அத்தனை அணிகலன்களின் பெயரையும் நினைவில் மீட்டிக் கொண்டேன். சிற்பங்கள் அனைத்தும் போசாளர் கட்டிட பாணியில் பச்சை நிற சோப்புக்கல்லினால் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டிருந்துது. சிற்பங்களும், தூண்களும் உலோகத்தில் செதுக்கப்பட்டது போல் அவ்வளவு வளவளப்பாக இருந்தது. கிருஷ்ணரின் காளிங்க நர்த்தனம், கோபியர்களுடன் நடனம், பிருந்தாவன காட்சிகள் என சிற்பங்கள் எங்களை மெய் மறந்து நிற்கச் செய்தன. கோயிலின் உட்கூரையில் அமைக்கப்பட்டிருந்த நுண்ணிய சிற்பங்களை பார்த்து ரசிக்க நாம் அப்படியே தளத்தில் படுத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. சிற்பங்களின் உலகில் கரைந்து கொண்டிருந்த எங்களை அர்ச்சகரின் குரல் நிகழ் உலகத்திற்கு மீட்டெடுத்து வந்தது. அர்ச்சகர் எங்களுக்கு கோயிலின் சிறப்பினை கன்னடத்தில் விளக்கிக் கொண்டிருந்தார், எங்களால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. வீரநாரயணருக்கு அர்ச்சனை முடித்து வேணுகோபாலன் சன்னதிக்கு வந்த பொழுது அர்ச்சகர் தீப ஆராதனை காட்ட திரையை விளக்கிய போது கிருஷ்ணனின் அழகை கண்டு என் கண்களில் நீர் வழியத் தொடங்கியது…அந்த இருண்ட கருவறையில் சிறிய விளக்கொளியில் 7 அடி உயரத்தில் கரிய நிற கிருஷ்ணரின் சிற்பம் உயிர்த்தெழுந்து நின்றது போல் ஒரு உணர்வைக் கொடுத்தது.அர்ச்சகர் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட இந்த சிலை இந்தியாவின் அழகிய கிருஷ்ணர் இவரே என்று கூறினார். எங்களுக்கு 5 நிமிடங்களே கிருஷ்ணரின் தரிசனம் கிடைக்க மீண்டும் திரை மூடப்பட்டது. அர்ச்சனை முடிந்ததும் கோவிலின் வெளிப்புறம வந்து கோபுரங்களையும், அதிலுள்ள சிற்பங்களையும் பார்வையிட்டு நாங்கள் ஹளேபீடுவிற்கு பயணித்தோம்.
.15 நிமிட பயணத்திற்கு பிறகு ஹளேபீடுவிற்கு வந்து சேர்ந்தோம். இங்கு ஹொய்சலேஷ்வரா மற்றும் கேதாரேஷ்வரா எனும் 2 கோயில்கள் அமைந்துள்ளன. இதே வளாகத்தினுள் தொல்பொருள் அருங்காட்சியகமும் இருந்தது. அங்கும் நிறைய சிற்பங்களும், கல்வெட்டுக்களும் இருந்தன. ஆனால் அங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஹொய்சலேஷ்வரர் கோவிலின் சுவர்ப் பகுதிகளில் இந்து சமய புராணங்களின் சிற்பங்கள், விலங்கினைகள் ,போர் காட்சிகள், வாழ்வியல் முறைகள், கலைஞர்கள், போன்றவைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சிற்பங்களும் தனித்துவமாகவும், ஆபரணங்களின் ஒவ்வொரு மணியும் தனித்து தெரியும் அளவிற்கு நேர்த்தியாகவும் செதுக்கப்பட்டிருந்தது இதன் சிறப்பாக இருந்தது. கோவில் வளாகம் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான சிலைகளின் மூக்கு சேதப்படுத்தப்பட்டிருந்தன. மாலிக் கபூர் படையெடுப்பில் இந்த சேதாரங்கள் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கோவிலின் இரு புறமும் சிவபெருமானின் வாகனமான 2 ஒற்றைக் கல் நந்திகள் நிறுவப்பட்டிருந்தன. இந்தக் கோயிலைச் சுற்றிலும் பசும் புல்வெளிகளால் பராமரிக்கப்பட்டிருந்தது. இக்கோயில்கள் யுனெஸ்கோ நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டும், மக்கள் வழிபாட்டிற்கும் வழி செய்யப்பட்டுள்ளது.
கோவில் வெளிப்புற வளாகத்தில் சிலைகளே இல்லாமல் சிறு சன்னதிகள் இருந்தன. சுற்றுலாவாசிகள் சிலர் அதில் தங்கள் குழந்தைகளை வைத்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். கோவிலைச் சுற்றியுள்ள மண்டபங்களிலும் ஹொய்சாளர் கட்டிட முறையில் அமைக்கப்பட்ட தூண்கள் இருந்தன. அடுக்கடுக்கான தட்டுகளும் இடையிடையே கலசங்களையும் கல்லில் செதுக்கி அடுக்கி வைத்தது போல் உள்ள இத்தூண்கள் கட்டிடக் கலையின் உச்சமாக இருந்தது. சிற்பங்களை எவ்வளவு நேரம் பார்த்தும் தீர்ந்திராத ஒரு ஏக்க மனநிலையிலேயே வெளிவந்தோம்.
ஹொய்சலேஷ்வரர் கோயிலில் இருந்து வெளிவந்து 5 நிமிட பயண தூரத்தில் உள்ள ஒரு சமணர் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். சமணர் கோவிலில் அர்ச்சகரோ, வேறு பக்தர்களோ இல்லை, மிகவும் அமைதியான சூழலில் பிரம்மாண்டமாக இருந்தது. ஒவ்வொரு சன்னதியிலும் ஒரே ஒரு மலர் மட்டும் வைக்கப்பட்டு இருந்தது. இக்கோயிலும் யுனெஸ்கோ நிறுவனத்தினால் பராமரிக்கப்பட்டு வந்தாலும் சுற்றுலாப் பயணிகள் ஓரிருவர் கூட இல்லை. கோவில் உட்புறம் முழுவதும் வெளவாலின் எச்ச நெடி மிகுந்திருந்தது. இந்த கோவிலில் அர்த்தமண்டபம் மற்றும் ஒரு மகாமண்டபமும் உள்ளது, கயோத்சர்கா தோரணையில் உள்ள பார்ஷ்வநாதரின் ஒற்றைக்கல் 18 அடி (5.5 மீ) சிலை உள்ளது . கோவிலின் மகாமண்டபத்தில் யக்ஷ தரணேந்திரன் மற்றும் யக்ஷி பத்மாவதியின் சிற்பங்கள் உள்ளன .முகமண்டபத்தில் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கைக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது . பத்மாவதியின் தலைக்கு மேல் மூன்று நாகப்பாம்பும், மூன்று கைகளில் பழங்களும், நான்காவதாக ஆயுதமும் கொண்ட பத்மாவதியின் உருவம் உள்ளது. கோயிலில் 24 தீர்த்தங்கரர்களின் சிலைகளும் அமைக்கப்ட்டிருந்தன. இக்கோயிலும் ஹொய்சாளர் கட்டிட முறையிலேயே கட்டப்பட்டிருந்தது. உட்புற கோபுரங்களில் குமிழ்களும், கூம்புகளும் கொண்ட அழகிய சிற்பங்கள் மலர்ந்திருந்த மலரின் மென்மையை அக்கல்லிலும் உணரச் செய்தது. மொத்தச் சிற்பங்களும் ஏதோ அணிகலன் கூடங்களுக்குள் நாம் வீற்றிருப்பது போல் உணரச் செய்தன.
இக்கோயிலில் இருந்து வெளிவந்த போது அருணா மதினி கூகுளில் பார்த்து இன்னுமொரு கோயில் அருகில் இருப்பதாக கூறி ஆரிஷை அங்கு போகச் சொன்னார். 5 நிமிட பயணத்தில் அந்தக் கோயிலை வந்தடைந்தோம். நாங்கள் அக்கோயிலுக்குள் நுழையும் போது அர்ச்சகர் கோவில் நடையை சாத்திக் கொண்டிருந்தார். அவர் எங்களிடம்
" தமிழா…. டைம் முடிஞ்சது…. இப்ப வர்றீங்க… சரி வாங்க 5 நிமிடத்தில் உள்ள பார்த்துட்டு வரனும்" என்று கூறி திறந்து விட்டார்.
இந்தக் கோயிலிலும் அதே கலைநயத்துடன் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அர்ச்சகர் கோயிலின் சிறப்பம்சமான தூண்களை காண்பித்து அதனை உற்று நோக்கச் சொன்னார். நாங்கள் அதனைப் பார்த்த போது தூணில் எங்கள் உருவம் தலைகீழாக தெரிவதை கண்டு வியந்தோம். 5 நிமிட விரைவு நடையில் கோவிலை வலம் வந்து வெளியேறினோம். அடுத்து பேளூருக்கு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக