கர்நாடகா பயணம் - 6
கலைகளின் மூலமாகவே நூற்றாண்டுகள் தாண்டியும் நம்மை நம் தலைமுறைகளோடும், நம் பண்பாட்டு கலாச்சாரங்களோடும் இணைத்து பயணிக்கச் செய்கிறது. எங்கள் பயணமும் பல்வேறு கலாச்சார பண்பாட்டு தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே ஆரம்பித்திருந்தோம்.. சிற்பங்களை காணும் போது நம்மை அக்காலகட்டத்திற்கே கடத்திச் சென்று விடுகிறது.
நேரமின்மை காரணத்தினால் சில கோவில்களை விரைந்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். ஹளேபீடுவிலிருந்து நாங்கள் 15 நிமிட பயணத்திற்கு பிறகு பேளூர் வந்து சேர்ந்தோம். மாலை 6 மணியை நெருங்கியிருந்தது, 7 மணி வரையும் தான் கோயில் திறந்திருக்கும் நேரம். என் தோழி ஒருவர் இக்கோயிலை விடியலிலும், அந்தியிலும் காணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
விஜயநாராயணர் கோயில் என முன்னர் அழைக்கப்பட்ட சென்னகேசவர் கோயில், ஹோய்சாலப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய பேளூரில், யாகாச்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சென்னகேசவர் என்பது அழகிய கேசவர் எனப் பொருள்படும். போசாளர் கட்டிடக் கலை பாணியில் அமைக்கப்பட்ட இக்கோயில் வைணவர்களின் யாத்திரைக்குரிய இடமாகவும் விளங்குகிறது.இக் கோயில் கி.பி 1117 ஆம் ஆண்டில் ஹோய்சால மன்னனான விஷ்ணுவர்த்தனனால் கட்டுவிக்கப்பட்டது.
கோவிலின் நுழைவு வாயில் பிரதான சாலையிலிருந்து 7 படிகள் ஏறினால் நீண்ட மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் அமைந்திருந்த இராஜகோபுரம் விஜயநகரப் பேரரசு காலத்தில் அமைக்கப்பட்டிருந்ததாக இருந்தது. அதனைக் கடந்து உள் நுழைந்தால் பரந்த வளாகத்தின் மையப் பகுதியில் சென்னகேசவர் கோயில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருந்தது. இதன் வலது பக்கத்தில் காப்பே சன்னி கிராயர் கோவிலும் ஒரு சிறிய இலக்குமி கோவிலும் இடது பக்கத்தில் பின்புறத்தில் ஆண்டாள் கோவிலும் அமைந்துள்ளது. வெயில் சூட்டில் நடப்பதற்கு ஏதுவாக ராஜ கோபுரத்திலிருந்து கோவில் வரை சிகப்பு நிற கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.கோவில் அமைக்கப்பட்டிருந்த பீடத்தை சுற்றிலும் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. வளாகத்தின் வலது புறம் பெரிய கிணறு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. வளாகத்தின் வலது புறம் இரண்டு மண்டபங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மண்டபங்களில் சிதிலமடைந்த சில சிற்பங்கள் காணக் கிடைத்தன. இக்கோயிலுக்கு மூன்று கதவுகள் இருந்தன, அக்கதவுகள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய சிற்பங்களால் செதுக்கப்பட்டிருந்தது.கோவிலுக்கு முன்புறம் பீடத்தின் மேல் அமைக்கப்பட்ட 40 அடி உயர கற்கம்பம் பீடத்தோடு ஒட்டாமல் இருப்பது வியப்பாக இருந்தது.
அந்தி சாயும் பொன்னிறத்தில் கோவிலின் கரிய சிற்பங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. இடைவெளியே இல்லாமல் செதுக்கப்பட்டிருந்த சிற்பக் கூட்டங்களுக்குள் மனமும், உடலும் ஓரிடத்தில் உறைந்து நிற்கக் செய்தன. சிற்பங்களின் கைவிரல் அபிநயங்களும், முகபாவனைகளும், ஏதோ சொல்லெடுக்க வந்தது போலிருக்கும் குமிழ் இதழ்களும், வஸ்திரங்களின் மடிப்புகளும், நெகிழ்ந்து கொண்டிருக்கும் அணிகளும் ,புராண காலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்க அச்சிற்பங்களுக்கு இடையே சின்ன சின்னதாய் செதுக்கி வைத்திருந்த்த உப்பரிகையை கண்ட போது என்னை ஒரு இளவரசி போல் பாவித்து உப்பரிகையில் நின்று அனைத்தையும் காண அக்காலவெளிக்குள் பயணித்து கொண்டிருப்பது போல் உணர்ந்தேன். வண்டுகள் தேனைத் தேடி மலர் தொகையினுள் சென்று ஒவ்வொரு மலரையும் தொட்டுச் செல்வது போல் ஒவ்வொரு சிற்பத்தையும் பார்த்து பிரமித்து , அதிசயித்து உவகையிலாடினோம். எனக்கு புராணக் கதைகளில் பெரிதாக அறிமுகம் இல்லாததால் ஷீலா மதினியிடம் சில சிற்பங்களை காண்பித்து விளக்கம் கேட்டுக் கொண்டிருக்க அருண்சி உள்ளே சுவாமி தரிசனத்திற்கு வருமாறு அழைத்தாள்.அவள் அழைத்த வேளையில் இருள் கவியத் தொடங்கியிருந்தது.அந்த அரை இருளில் சிற்பங்கள் மேலும் இறுகி பெரும் மோனத்தை தன்னுள் நிகழ்த்திக் கொண்டிருக்க அரை மனதுடன் நானும் மதினியும் கோவிலிக்குள் சென்றோம். அங்கே வழிகாட்டி ஒருவர் கோவிலிக்குள் உள்ள சிற்பங்களின் மீது டார்ச்லைட் அடித்து காண்பித்து வெளிநாட்டு பயணிகளுக்கு விளக்கி கொண்டிருந்தார். பிரகாரத்தில் மூலவருக்கு தீபாராதனை தொடங்க நாங்கள் வழிபாட்டுக்கு சென்றோம்.கேசவ நாராயணர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க தீப ஒளியில் கரிய கன்னம் மினுங்கும் நாராயணனை கண்டு விழி இமைக்க மறந்த சிலையாக நான் நின்று கொண்டிருந்தேன்.
வழிபாட்டினை முடித்து விட்டு கோவில் வளாகத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். கீர்த்தி விளையாட நானும் , ஆரிஷும் ஷீலா மதினியிடம் சில விளக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டோம். மீண்டும் கோவிலுக்கு நாளை காலை 6 மணிக்கு பார்வையிட வரலாம் என்று பேசிக் கொண்டே வெளியேறினோம். கோவில் நுழைவாயில் அருகே உள்ள புத்தகடையில் உள்ள ஒரு புத்தகம் வாங்கித் தர கேட்டு கீர்த்தி அடம்பிடிக்க ஆரம்பித்தாள். ஷீலா மதினி அவளை சமாதானப்படுத்த
" கீர்த்தி அது வேற லேங்குவேஜ் டா…. உனக்கு புரியாது"
" என்ன லேங்குவேஜ்…. ம்ம்…. அதெல்லாம் நான் எல்லாம் வாசிப்பேன்…… வேணும்…." மதினி அங்கிருக்கும் கன்னடத்தில் எழுதிய பலகையை காண்பித்து
" எங்க இதை வாசி…. பார்ப்போம்"
" பி…. ஓ…. ஓ… கே…. புக்….".... கீர்த்தி வாசிக்க நாங்கள் அனைவரும் சிரிக்க ஷீலா மதினி
" தப்பு…. வா…. போலாம்" என்று கூறி அவளை அழைத்து வர…. அவள் அழத் தொடங்கினாள்… மாற்றி மாற்றி நாங்கள் அனைவரும் அவளை சமாதானப்படுத்தி காரில் ஏறினோம்.
இரவுணவுக்காக உணவகம் தேடிக் கொண்டிருக்க சைவ உணவகம் மட்டுமே தென்பட்டது. ஆரிஷ் புலம்ப ஆரம்பித்தான்.
" அய்யோ நான் இன்னிக்கு நான் வெஜ் சாப்பிடலாம்னு நினைச்சேனே…. ஒரு கடை கூட இல்லை…. ஒரு முட்டை கூட இல்லாம எப்படி நா சாப்டறது… " என்றான். மதினி
" சரி…. சரி… இப்போ இங்க வேணும்கிறத ஆர்டர் பண்ணு… நாளைக்கு நான் வெஜ் சாப்பிடலாம்"...என்றார்.
ஆனால் ஆரிஷ் விடாப்பிடியாக அசைவ உணவகம் தேடிப் போய்விட நாங்கள் தோசை, பூரி, வெஜ் நூடுல்ஸ், சில ஃபாஸ்ட் புட் ஐட்டங்கள் என ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு வெளியேற ஆரிஷும் சாப்பிட்டு விட்டு வந்து சேர்ந்தான். நாங்கள் தங்குமிடத்திற்கு செல்லலாம் என காரை எடுத்த போது அருண்சி கீர்த்திக்கு செருப்பு வாங்குவதற்கு கடைக்கு போகச் சொன்னாள். செருப்பு கடையைப் பார்த்து காரை நிறுத்திவிட்டு இறங்கினோம். நாங்கள் இறங்கிய இடத்தில் பழக்கடை ஒன்றும் இருப்பதைக் கண்டு வாழைப்பழம் வாங்கிக் கொண்டோம். நாங்கள் அங்கேயே நின்று கொள்ள அருண்சி, கீர்த்தி, அருணா மதினி மட்டும் செருப்பு வாங்கச் சென்றார்கள்.நான் ஆரிஷ் , மதினி பேசிக் கொண்டிருந்தோம்.ஆரிஷ் அவன் வாழ்வில் நடந்த சில கசப்பான அனுபவங்களை எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான். எப்பொழுதும் துறு துறு வென சிரித்துக் கொண்டே இருக்கும் அவன் வலியை, துன்பத்தை கேட்கையில் அதிர்ச்சியாக இருந்தது .இதைக் கேட்ட பின்பு எனக்கும் மதினிக்கும் அவன் மேல் அன்பும் மரியாதையும் அதிகரித்து கண் கலங்கி நின்றோம். அந்நேரத்தில் கடைக்கு சென்றவர்கள் வர நாங்கள் இயல்பு நிலைக்கு மீண்டு காரில் ஏறினோம். ஆரிஷும் சட்டென்று சிரித்து கீர்த்தி குட்டி என அவளை அள்ளியெடுத்துக் கொண்டு காரில் உட்கார வைத்தான்.
தங்குமிடம் சென்று அனைவரும் வீட்டிற்கும், நண்பர்களுக்கும் ஃபோன் செய்து பேசிக்கொண்டிருந்தோம். பிறகு நாங்களும் நீண்ட நேரம் உரையாடிவிட்டு உறங்கச் சென்றோம்.
காலை 5 மணிக்கு எழுந்து குளித்து முடித்து கோவிலுக்குச் செல்ல தயாரானோம். தங்குமிடத்திற்கு அருகிலேயே கோவில் இருந்ததால் நடந்து செல்ல முந்தைய நாளே திட்டமிட்டிருந்தோம். அதனால் ஆரிஷை நன்கு உறங்குமாறு கூறியிருந்தோம். ஆனால் நாங்கள் புறப்பட்டு வெளிவந்த போது எழுந்து வந்தான். ஆரிஷ்
" நீங்கள் முன்னால் கோவிலுக்கு போய் பார்த்துட்டு இருங்க … நான் ரெடியாகி காரை எடுத்துட்டு உங்களை கூப்பிட வர்றேன் மா … " என்றான்.
நாங்கள் மெதுவாக நடந்து கோவில் வளாகத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்குள்ள கிணற்றினை காணச் சென்றோம். அதில் 3 ஆமைகள் நீந்திக் கொண்டிருந்தன, அதனை கீர்த்த்திக்கு காண்பித்து கொண்டிருந்தோம். பிறகு கோவில் வெளிப்புறச் சுவரில் இருந்த சிற்பங்களை பார்வையிடத் தொடங்கினோம். நாங்கள் கண்ட அனைத்துக் கோயில்களிலும் நரசிம்ம அவதாரமும், வராக அவதாரமும், வாமன அவதாரமும் அதிகமாக காணத் கிடைத்தன. ஆனால் ஒவ்வொரு சிற்பமும் மற்ற சிற்பத்திலிருந்து சில வேறுபாடுகளுடன் செதுக்கப்பட்டிருந்தது. நிலையாய் நின்ற ஏழு மராமரங்களை அம்பெய்து வீழ்த்திய ராமனின் சிற்பத்தை பார்த்த பொழுது
"எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கைசெற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா …. "
என்ற பிரபந்த பாடல் வரிகள் நினைவில் எழுந்து வந்தன.
.அகங்காரம் கொண்டு கைலாயத்தை தலையில் ஏந்திய இராவணனின் சிற்பத்தை கண்ட போது வியப்பில் நானும் மதினியும் சொல்லெழ தவித்து நின்றோம்.யானை, குதிரை. யாழி, சிங்கம் போன்ற விலங்கினங்களின் சிற்பங்கள் செதுக்கிய கற்களை அடுக்கடுக்காக அடுக்கி வைத்து பீடங்களை அமைத்திருந்தனர்
.நாங்கள் சிற்பங்களை பார்வையிட்டு கொண்டிருந்த பொழுதே ஆரிஷ் வந்து சேர்ந்தான். என் புரிதலுக்கு எட்டாத சில சிற்பங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு பின்னாட்களில் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டேன். நாங்களும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கோவில் வளாகத்தை விட்டு வெளிவந்த போது கீர்த்தி மீண்டும் கன்னடத்தில் எழுதிய அந்தப் பலகையை பார்த்து வாசிக்க முயற்சி செய்தாள்.நாங்கள் சிரித்துக் கொண்டே காலை உணவிற்காக உணவகம் செல்லுமாறு ஆரிஷிடம் கூறினோம். காலை உணவை முடித்து விட்டு தங்குமிடம் சென்று அறையை காலி செய்து மைசூருக்கு செல்ல ஆயத்தமானோம்.
அருணா மதினி மைசூருக்கு செல்லும் வழியில் பார்க்க விரும்பும் இடங்களை கூகுளில் பார்க்கத் தொடங்கினார். மதினி ஆரிஷிடம் ஸ்ரீரங்கபட்டினத்திற்கு செல்ல கூகுள் வழிகாட்டியை போட்டுக் கொள்ளுமாறு கூறி பயணத்தை தொடர்ந்தோம்.
3 மணி நேர பயணத்திற்கு பிறகு ஸ்ரீரங்கபட்டணா நிமிஷாம்பாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். இக்கோவில் மைசூர் சாலையில் ஸ்ரீரங்கபட்டணா அருகில் காவேரி கரையோரம் அமைந்துள்ளது. இக்கோயிலிருந்து 2 கி.மீ தொலைவில் திரிவேணி சங்கமம் இருப்பதாகவும் கூறினார்கள். நாங்கள் கீர்த்தி ஆற்றில் விளையாட விருப்பப்பட்டதால் இவ்விடத்திற்கு வந்தோம். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் நாங்கள் நேராக காவேரி ஆற்றிற்கு சென்றோம். கடும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்ததால் நான், ஷீலா மதினி, ஆரிஷ் படித்துறையிலேயே அமர்ந்து கொண்டோம். அவர்கள் மூவரும் ஆற்றிற்குள் இறங்கிச் சென்றார்கள். ஆரிஷ் மீண்டும் அவன் குடும்பத்தை பற்றியும், எதிர்கால திட்டங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தான்.சிறிது நேரம் கழித்து நானும் ஷீலா மதினியும் ஆற்றில் இறங்கி ஆற்றின் போக்கில் நடந்து கொண்டிருந்தோம். கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ந்த ஆற்று நீரில் நடப்பது இனிமையாக இருந்தது.பின்பு அருகில் இருந்த உணவகத்தில் மதிய உணவினை முடித்துவிட்டு தாரியா தெளலத் பாக் எனப்படும் திப்பு சுல்தானின் கோடை கால அரண்மனைக்கு பயணித்தோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக