கர்நாடக பயணம் - 7
புதுப்புது இடங்களையும், மனிதர்களையும், கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளையும் அறியவே நாம் பயணம் மேற்கொண்டாலும் அதனூடே நம் அகத்தினுள்ளும் ஒரு பெரும் பயணத்தை நிகழ்த்தி விடுகிறது. உலக அறிவோடு நம்மைச் சுற்றியுள்ள சுற்றத்தாரை புரிந்து கொள்ளவும், நம்மை ஒரு நிலைப்படுத்தி புதுப்பித்துக் கொள்ளவும் பயணங்கள் அவசியமாகின்றன.
நிமிஷாம்பாள் கோயிலுக்குச் சென்றிருந்த போதே வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்து புறப்பட்டு மதிய உணவையும் முடித்துவிட்டு 10 நிமிடத்தில் தாரியா தெளலத் பாக்கிற்கு வந்து சேர்ந்தோம். அரண்மனைக்கு நுழைவுச் சீட்டு எடுக்க முற்பட்ட போது இணையம் மூலமாக மட்டுமே எடுக்க முடியும் என்று அரண்மனை நிர்வாகிகள் கூறினர். அதன் பின் ஷீலா மதினி நபருக்கு ரூபாய் 25 வீதம் என எங்களுக்கான நுழைவுச் சீட்டினை பதிவு செய்தார். கார் பார்க்கிங் ஏரியாவில் நிறைய மரங்கள் இருந்ததினால் வெயிலின் உக்கிரம் தெரியாமலிருந்தது. நுழைவு வாயில் வழியாக அரண்மனை வளாகத்தில் நுழைந்த போது நான் வானத்தை அண்ணாந்து பார்க்க நீலத்திரை விரித்தது போல் காட்சியளித்த்து.நீலத் தோட்டத்தில் ஆங்காங்கே பருத்தி பூத்தது போல் மேகக் கூட்டங்கள், பொன்னெ வெயில் உருகி கண்களை தீண்ட கண் கூசி தலை தாழ்ந்து நடக்க ஆரம்பித்தேன். உருக்கும் வெயில் எப்பொழுதுமே சூழலை அமைதி கொள்ளச் செய்கிறது, இன்று அந்த அமைதியை எனக்குள்ளும் உணர்ந்தேன்.நாங்கள் முதலில் கூர்க், பேளூர், ஹலேபீடு என்றே பயணத்தை திட்டமிட்டிருந்தோம். ஆனால் அருணா மதினியின் விருப்பத்தின் பேரில் மைசூரையும் பயணத்தில் இணைத்துக் கொண்டோம்.எனக்கும் ஷீலா மதினிக்கும் பேளூரிலிருந்து வெளியேறிய பிறகு உற்சாகம் குன்றத் தொடங்கியிருந்தது. ஆனால் அருணா மதினியும், அருண்சியும் உற்சாகமாகவே இருந்தனர்.
நுழைவு வாயிலை கடந்து சென்ற போது மிகப் பெரிய பூங்காவின் மையத்தில் பச்சை நிற திரைச்சீலைகள் கொண்டு . பாதுகாக்கப்பட்டிருந்த அரண்மனை காட்சியளித்தது.அரண்மனை வளாகம் பச்சை பசும் புல்வெளிகளாலும் , அடர் மரங்களாலும் பராமரிக்கப்பட்டு இருந்தது. நுழைவாயிலிருந்து அரண்மனை வரை இருமருங்கிலும் நெடிய நடை பாதை அமைக்கப்பட்டு பாதைகளின் பக்கவாட்டில் பந்து போலவும், கூம்பு போலவும் வெட்டப்பட்ட சைப்ரஸ் மரங்களும், அதற்கிடையே பக்ஸஸ், மற்றும் கேட்னிப்ஸ் போன்ற செடிகளும் கொண்டு பராமரிக்கப்பட்டிருந்தன. அரண்மனையின் முன்புறம் உள்ள ' மேடை ஒன்றில் பீரங்கி ஒன்று பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
தாரியா தெளலத் பாக் திப்பு சுல்தான் கோடை காலத்தில் வாசம் செய்ய கட்டப்பட்ட அரண்மனை ஆகும். இது 1784 இல் திப்பு சுல்தானின் தந்தையால் கட்டுவிக்க தொடங்கி திப்புசுல்தானால் கட்டி முடிக்கப்பட்டது. இவ்வரண்மனை இந்திய - சரசனியக் கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டது. 1799 ஆம் ஆண்டில் திப்பு பிரிட்டானியரால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இவ்வரண்மனை பிரிட்டானிய தளபதி கேணல் வெல்லெசுலி தனது இருப்பிடமாகப் பயன்படுத்தினார். இப்பொழுது இது நினைவுச் சின்னமாகவும், அருங்காட்சியகமுமாக இயங்கி வருகிறது.
பூங்காவினை கடந்து அரண்மனைக்குள் நுழைந்த போது நான் டெல்லி, ஆக்ராவில் பார்த்த முகலாய பாணி கட்டிடங்களை ஞாபகப்படுத்தின. அங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் சலவைக் கல்லில் நுணுக்கமாக செதுக்கப்பட்ட ஓவியங்கள் இங்கு அதே வடிவமைப்பில் தைல வண்ணங்கள் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்களால் ஆன சுவர்களால் அமைக்கப்பட்டிருந்தது. அடர் சிவப்பு நிற பூச்சுகள் பூசிய சுவர்களும், தேக்கு மரத்தினால் ஆன தூண்களும் பழமையின் கம்பீரத்தை அளித்தது. அரண்மனையின் தரைத்தளம் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. தரைத் தளம் அருங்காட்சியகமாக திப்பு சுல்தானுடன் தொடர்புள்ள பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. 1800 ஆம் ஆண்டில் வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வந்த சிறீரங்கப்பட்டினம் பிரித்தானியரிடம் விழுவதற்குமுன் இருந்த நிலையைப் படம்பிடித்துக் காட்டும் வகையில் அமைந்த ஓவியங்களில் அக்காலத்து ஆங்கிலத் தளபதிகள் பலரும் இடம்பெற்றுள்ளனர். இந்த ஓவியத்தின் பின்னணியில், திப்பு சுல்தானின் அரண்மனையின் ஒரு பகுதியும், மசூதி ஒன்றின் மினார்களும், சிறீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் கோபுரமும் காணப்படுகின்றன.இது தவிர திப்பு சுல்தானின் உருவப்படம் ஒன்றும், திப்பு சுல்தானின் இளவரசுக் கால உருவப்படமும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. திப்பு சுல்தானின் பிள்ளைகள், அமைச்சர்களின் பென்சில் ஓவியங்களும், நாணயங்கள்,பதக்கங்கள், ஆடை அணிகள், தளவாடங்கள், ஆயுதங்கள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அரண்மனை முழுவதும் சுற்றி விட்டு வெளியேறி அடுத்து திப்பு இறந்த இடத்தையும் அதன் அருகில் உள்ள திப்பு சிறைச்சாலை ஒன்றையும் காணப் புறப்பட்டோம். திப்பு வின் இறந்த உடல் கண்டுபிடிக்கப் பட்ட இடம் சிறிய திடல் போன்று அமைக்கப்பட்டு அதனைச் சுற்றிலும் சங்கிலி அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் அருகே உள்ள சிறைச்சாலை தரை மட்டத்துக்கு கீழே நுட்பமாக கட்டப்பட்டிருந்தது. தரைமட்டத்தின் மதில் அருகே காவேரி ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் படி வழியாக இறங்கி 30 அடிக்கு கீழே உள்ள சிறைச் சாலையை அனடந்தோம். சிறைச்சாலை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு பெரிய பெரிய தூண்களாக கட்டப்பட்டிருந்தது. தூண்களுக்கும் சுவருக்கும் இடையே வளைவுகள் அமைக்கப்பட்டு சிறு சிறு கற்கள் பொருத்தப்பட்டிருந்தன. கைதிகளை பிணைத்து வைப்பதற்கு இந்த அமைப்பு ஏற்படுத்தி இருக்கலாம் என எண்ணினோம். சிறைக்கு நடுவே சிறு பீரங்கி போன்ற அமைப்பும் இருந்தது.
இதனை பார்வையிட்டு முடித்து வெளியேறி காரில் ஏறி 2 நிமிட பயணத்தில் தர்கா ஒன்றினை கண்டோம். அதற்குள் சென்று வர விரும்பி ஆரிஷிடம் அங்கு செல்ல அனுமதி கிடைக்குமா? என கேட்டு வரக் கூறினோம். அனுமதி கிடைத்தவுடன் உள் சென்று பார்த்தோம். 10 , 15 இராணுவ வீரர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். அங்கிருக்கும் மண்டபம் ஒன்றில் சிறுவர்களுக்கு குர்ரான் பாடங்களை பயிற்றுவித்து கொண்டிருந்தார்கள். சில மண்டபங்கள் அடைக்கப்பட்டிருந்தன. வளாகம் முழுவதும் சுற்றி விட்டு காரில் ஏறி மைசூருக்கு பயணப்பட்டோம். மைசூரில் நாங்கள் தங்குவதற்கு ஹோம் ஸ்டே ஒன்றில் பதிவு செய்திருந்தோம்.நாங்கள் 45 நிமிட பயணத்திற்கு பின் தங்குமிடம் வந்து சேர்ந்தோம். 2 படுக்கை அறைகள் கொண்ட எல்லா வசதிகளுடன் கூடிய அழகிய வீடாக இருந்தது. படுக்கையில் தும்பைப் பூ போன்ற வெள்ளை நிற விரிப்பு விரித்தும், சன்னல்கள் திரைச்சீலைகளால் அலங்கரிங்கப்பட்டும் இருந்தது இனிமையான ஒரு சூழலை உருவாக்கியிருந்தது. சமையல் அறையில் சமைப்பதற்கு தேவையான பாத்திரங்கள் இருந்தன. நாங்கள் கூர்கிலும், பேளூரிலும் தங்கியிருந்த அறைகளை விட வீடு மிகவும் சுத்தமாக பராமரிக்கப் பட்டிருந்தது. ஹாலிலும் இருக்கைகள் , தொலைக்காட்சி அமைக்கப்பட்டு நல்ல பராமரிப்பில் இருந்தது. பேளூரில் தனித் தனி அறைகளே கிடைத்திருந்தது. இங்கு அனைவரும் ஒரே வீட்டில் இருந்தது ஒரு பாதுகாப்பு உணர்வை அடைந்தோம். நானும், அருண்சியும் இரவுணவை நாமே செய்துவிடலாமா? என்று பேசிக் கொண்டிருந்தோம். மதினி
" ஆமா அதுக்குத்தான வந்திருக்கோம் பாரு…. இப்ப கோயிலுக்கு போனும் போ…. அதுக்கு கிளம்பற வழியைப் பாரு"...அருண்சி
" கோயிலுக்கா…. ஷாப்பிங் போலாம்னு நினைச்சேன்…" என்றாள்.
ஒரு சிறு விவாதத்திற்கு பிறகு சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு செல்லலாம் என முடிவு செய்தோம். ஆனால் அனைவரும் மிகக் களைப்பாக இருந்ததால் சிறிது நேர ஓய்விற்கு பின் புறப்பட்டோம். சாமுண்டீஸ்வரி கோவில் மைசூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் சாமுண்டி மலை மேல் அமைந்துள்ளது. கார் மலையேறத் தொடங்கிய போது அந்தி சாயத் தொடங்கியிருந்தது. கார் குளிர்விப்பானை அணைத்து விட்டு சன்னல் கண்ணாடிகளை இறக்கிய போது இளங் குளிர் காற்று காரினையும், என் மனதினையும் நிரப்பியது. சன்னல் வழியாக ஒரு புறம் சூரியனை அடிவானம் விழுங்கிக் கொண்டிருப்பதையும், மறுபுறம் மலைக் காட்டின் பசுமையையும் பார்த்தவாறு பயணித்தோம். மேலே செல்லச் செல்ல காற்றின் வேகமும் அதிகரித்தது… அந்தக் காற்றில் மரங்களின் கிளைகளும், இலைகளும் ஒன்றோடொன்று உரையாடி உறவாடி, சிரித்து , சிலிர்த்து கொண்டிருக்க சாலையில் இதை எதையும் கவனியாமல் அத்தனை வாகனங்களும் சர் சர் ரென மேலேறிப் போய்க் கொண்டிருந்தது. இருள் நன்கு கவியத் தொடங்கிய சில கணங்களில் ஓரிடத்தில் வாகனங்களும், மக்களும் நெரிசலாக நின்றிருப்பதை கவனித்து ஆரிஷ் காரை ஓரங் கட்டினான்.அது ஒரு காட்சி முனைப் பகுதி … அங்கிருந்து கீழே பார்க்கும் போது மொத்த மைசூர் நகரமும் மின்னிக் கொண்டிருந்தது. அரண்மனையும், கோவில்களும், சர்ச்சும் இன்னும் பல கட்டிடங்களும் நகரில் அதன் பிரம்மாண்டத்தை பறைசாற்றிக் கொண்டிருக்க நாம் அதனை மலை உச்சியில் இருந்து மின்விளக்குகளின் ஒளியில் ஒளிர்ந்து கொண்டு சிறு வடிவமாக அதனை காணும் போதும் மனம் உவகை அடைவதை மறுக்க முடிவதில்லை. அந்த உவகையோடு மீண்டும் காரில் ஏறி கோயிலுக்குச் சென்றோம்.
கோயிலை அடைந்தவுடன் நாங்கள் கோயிலுக்கு செல்லும் பாதை வழி அமைந்த படிகளில் ஏற ஆரம்பித்தோம். பாதையின் இருபுறமும் ஏராளமான கடைகள் இருந்தன. கீர்த்தி பொம்மை கடைகளை பார்த்து நிற்க திரும்பும் போது வாங்கலாம் என சமாதனம்
செய்து அழைத்து வந்தார்கள். மேலேறி வந்த எங்களை இளம் மஞ்சள் நிறத்தில் அமைந்த கோவிலின் நுழைவு கோபுரம் அதன் உயரத்திலும், அழகிலும் உறையச் செய்தன. கோவிலின் கோபுரத்தையே சில மணித்துணிகள் பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் தரிசனத்திற்கு நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தை கண்டு அதிர்ந்தோம். நாங்கள் கோவிலின் வளாகத்தை கடந்த போது அங்கு ஒரு சிறிய சிவன் கோபிலைக் கண்டு அங்கு சென்று எங்கள் வழிபாட்டினை முடித்து விட்டு வெளியேறினோம். நாங்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து கொள்ள அருண்சி, அருணா மதினி, கீர்த்தியை அழைத்துக் கொண்டு வணிக வளாகத்திற்கு சென்று வந்தவுடன் நாங்கள் கீழிறங்கத் தொடங்கினோம்.
மலையிலிருந்து கீழிறங்கி நகருக்குள் வந்தவுடன் இரவுணவை முடித்து விட்டு தங்குமிடம் சென்றோம். காலை 10 மணிக்குத் தான் மைசூர் அரண்மனை திறக்கப் படும் நேரம் என்பதால் தாமதமாகவே எழலாம் என்று முடிவெடுத்து விட்டு படுக்கைக்கு சென்றோம். ஆனாலும் நான் வழக்கம் போல் 5 மணிக்கு எழுந்து விட குளித்து முடித்து விட்டு பால்கனியிலிருந்து அருகிலிருக்கும் பூங்காவில் நடைபயிற்சி சென்று கொண்டிருப்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன். மற்றவர்களும் எழுந்து வர அவர்களுக்கு காஃபியை வரவழைக்க கீழிறக்கும் வரவேற்பரைக்கு சென்று ஆரிஷையும் வரச் சொல்லி விட்டு காஃபியும் ஆர்டர் செய்து விட்டு வந்தேன். ஹிமாவிற்கு ஃபோன் செய்து பேசிக் கொண்டிருக்க அனைவரும் தயாராகி வந்தவுடன் காலை உணவிற்காக உணவகம் சென்றோம், பிறகு அரண்மனைக்கு பயணப்பட்டோம்.
காலையில் இணையம் வழியாக நாங்கள் அரண்மனைக்குள் செல்வதற்கான நுழைவு சீட்டினை பதிவு செய்திருந்ததால் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து அரண்மனைக்குள் சென்றோம். மிகப்பெரிய நுழைவு வாயிலைக் கடந்து செல்ல மிகப் பெரிய மைதானமும் தோட்டமும் காணக் கிடைத்தன. அங்கிருந்து அரண்மனையின் வெளித் தோற்றம் நம் கண்முன்னே பிரம்மாண்டமாக காட்சியளித்தது .அரண்மனைக்கு மூன்று நுழைவு வாயில்கள் உள்ளன. ஆழமான இளஞ்சிவப்பு நிற குவிமாடங்களும் , சாம்பல் நிறத்தில் பல வளைவுகளையும் கொண்டு பெரிய தூண்களால் தாங்கப்பட்டுள்ளது. மத்திய வளைவில் கஜலெட்சுமியின் சிற்பமும் , யானைகளும் பொறிக்கப்பட்டிருந்தன.
அரண்மனை முகப்பினை கடந்து உள்நுழைந்தால் கலையம்சம் பொருந்திய சாமி சிலைகளும், பல்லக்குகளும், சிம்மாசனங்களும் காட்சிப்படுத்தப் படுத்தப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து உள் நுழைய ஏராளமான ஆடம்பர பிரத்யேக அறைகளும், முற்றங்களும், மல்யுத்த மைதானங்களும், அந்தப்புரமும் , விளையாட்டு மைதானங்களும், கலை நிகழ்வுகளையும், தர்பாரில் நடக்கும் காட்சிகளையும் காண அறிஞர் பெரியோர்கள் அமர்வதற்கான அரங்குகளும் வண்ணமயமான ஓவியங்களாலும் அலங்கார தூண்களாலும் அமைக்கப்பட்டிருந்தன. ராஜ வம்சத்தினர் உபயோகித்த அத்துனை பொருட்களும் , அவர்கள் வம்ச வழியினரின் ஓவியங்களும் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அரண்மனையின் பிரம்மாண்டமும், காட்சிப் படுத்தப்பட்டிருந்த பொருட்களும் எனக்கு சிறிது அலுப்பூட்டியதாகவே இருந்தது ஒரு மணி நேரம் முழுதாக அரண்மனை வளாகத்தை சுற்றி விட்டு வெளி வந்தோம்.
அருண்சி மைசூரில் ஷாப்பிங் செய்யும் திட்டமுடன் இருந்ததால் ஆரிஷை வணிக வளாகத்திற்கு செல்லுமாறு மதினி கூறினார். வணிக வளாகம் அருகே உள்ள செயின்ட் பிலோமினா கதீட்ரல் சர்ச்சிற்கு நான், ஷீலா மதினி, ஆரிஷ், கீர்த்தியும் செல்ல அவர்கள் இருவரும் வணிக வளாகத்திற்கு சென்றார்கள். சர்ச் கூம்பின் மேல் கூம்புகள் அடுக்கப்பட்டிருப்பது போல் கூம்பு அமைப்பிலும் அழகிய வளைவுகளும் கொண்டு சாம்பல் நிறத்தில் இரட்டை கோபுரங்களை கொண்ட நியோ கோதிக் பாணியில் கட்டப்பட்டிருந்தது. இதன் தள அமைப்பு சிலுவையை ஒத்து அமைக்கப்பட்டிருந்தது. சர்ச்சின் கண்ணாடி சன்னல்களில் கிறிஸ்துவின் பிறப்பு , கடைசி இரவு உணவு , சிலுவையில் அறையப்படுதல் , உயிர்த்தெழுதல் மற்றும் கிறிஸ்துவின் விண்ணேற்றம் ஆகியவற்றின் காட்சிகளை சித்தரிக்கும் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தது. பலிபீடத்திற்கு கீழே நிலவறைக்கு செல்லும் படிக்கட்டுகள் இருந்தன. அதன் வழியே இறங்கி போன பொழுது பிலோமினாவின் சிலை வைக்கப்பட்டிருந்தது. நிலவறையிலிருந்து சர்ச்சின் வெளி வளாகத்திற்கு வருவதற்கும் வழி இருந்தது. நாங்கள் சர்ச்சில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு வெளி வந்தோம். ஷீலா மதினியும் வணிக வளாகத்திற்கு சென்று அவர்களுடன் இணைந்து கொள்ள நானும் கீர்த்தியும் ஆரிஷும் கார் நிற்கும் இடத்திற்கு திரும்பினோம். அரை மணி நேரம் கழித்து அவர்கள் வர எங்கள் பயணத்தை முடிக்க மதுரையை நோக்கி ஆரிஷ் காரை இயக்கினான். இந்த முறை நான் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தேன். கீர்த்தி எனது மடியில் அமர்ந்து கொள்ள ஆரிஷ் என்னிடம்
" மதும்மா ஏதாவது நல்ல பீட் சாங்க்ஸா போடுங்கம்மா…. ட்ராவல் சாங்க்ஸ் னு சேர்ச் பண்ணி எடுத்து போடுங்கம்மா" என்றான்.
நான் அவன் கேட்டபடி பாடல் "டாக்ஸி டாக்ஸி…" என பென்னி தயாள் குரலில் ஒலிக்க விட…. ஷீலா மதினி
" இப்ப தாண்டி நல்ல பாட்டு போட்டுருக்க…. வர்ரப்ப… ஒரே தாலாட்டு பாட்டு மாதிரி நல்லா தூக்கந்தான் வந்துச்சு … யூத்தாடி நீயெல்லாம்…."அனைவரும் சிரிக்க….
" என்ன மைனி இன்னுமா என்னை யூத்…னு நம்புறீங்க…சர்தான்……"
எங்கள் பயணம் ஆரம்பித்த அதே உற்சாக மனநிலையில் ஊருக்கு திரும்ப தயாரானேன்.அருணா மதினி பயணம் முழுக்கவே அமைதியாக வந்தார். இப்போது மதினியிடம் பேசிக் கொண்டே வந்தேன்.அருணா மதினி நிறைய பயணம் செய்பவர். அவருடைய பயண அனுபவங்களையும், இசை குறித்த அவருடைய ரசனையையும் கேட்ட பொழுது மிகுந்த ஆச்சரியத்தக்க வகையில் இருந்தது. இசையும் , அரட்டையுமாக கர்நாடக எல்லையை தாண்டிய பொழுது ஷீலா மதினி உற்சாகமிழந்து
" அய்யோ 4 நாள் ஓடிப்போச்சு …. திரும்பி வீட்டுக்கு … மனசு ரொம்ப வெறுமையா இருக்கு…" நான்
" எனக்கு இந்த நாலு நாள் 40 நாள் வர உற்சாகமா வைச்சிருக்கும்…" என்றேன்.
"ம்ம்ம்…" என்றார்
தமிழக எல்லையில் உள்ள ஒரு ஊரில் மதிய உணவிற்காக உணவகம் தேடிய பொழுது ஹலால் உணவுகள் கிடைக்கும் என ஒரு உணவகத்தின் பலகையில் பார்த்ததும் ஆரிஷ் காரை நிறுத்தினான். எங்களுக்கோ பயண நேரத்தில் அசைவம் சாப்பிட சிறிது தயக்கமாக இருந்தது. ஆனாலும் ஆரிஷ் 4 நாட்களாக விரும்பிய உணவிற்காக நாங்களும் இயைந்து மதிய உணவை அந்த உணவகத்தில் முடித்துக் கொண்டோம்.
மதிய உணவிற்கு பிறகு எனக்கு தூக்கம் கண்களை அழுத்த நான் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டேன். மணி இரவு 7.30 ஆன போது மதுரையை நெருங்கியிருந்தோம். அங்கே ஒரு உணவகத்தில் இரவுணவை முடித்து விட்டு காரில் தொடர்ந்து பயணித்து 8.30 மணிக்கு எனது வீட்டில் இறக்கி விட்டு அருணா மதினி வீட்டிற்கு சென்றார்கள். அன்று இரவு 2 மணிக்கு மேல் நான் வாயுமிழ ஆரம்பித்தேன்…. 3 முறை வாயுமிழ்ந்த வுடன் மிகவும் களைப்படைந்து தூங்கி விட்டேன். காலை உணவை தவிர்த்து விட்டேன். 10 மணிக்கு ஷீலா மதினி ஃபோன் செய்தார்….
" மதினி நைட்லாம் ஒரே வாமிட்… வயிறும் கொஞ்சம் சரியில்லை… இப்போ தேவல… " என்றேன்
" இங்க எல்லோருக்கும் அதே நிலைதான்… ஒ.கே ரெஸ்டப் போடு" என்றார். நான்
" ஆரிஷ்….." என இழுத்தேன்…
" அவனுக்கு ஒன்னும் செய்யல…. அவன் கேட்கிறான் எனக்கு தெரியாம என்ன சாப்டீங்க…" என்றார்
" சேட்டையை பாருங்க" என்றேன்.
ஃபோனை துண்டித்து விட்டு மீண்டும் படுக்கைக்கு சென்றேன்.
முற்றும்.
கருத்துகள்
கருத்துரையிடுக