எழுத்தாளர் சாம்ராஜ் உடன் ஒரு சந்திப்பு
கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி இரவு வீட்டு வேலைகளை முடித்து படுக்கைக்கு சென்று ஃபோனை எடுத்த போது கவிஞர் சாம்ராஜ் அவர்களிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "தமிழ் நாவல்களில் சிறு குழுக்களின் பதிவுகள்" என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடக்க விருப்பதாகவும் அதில் பங்கு கொள்ள வாய்ப்பிருந்து நேரமிருந்தால் வாருங்கள் என அழைப்பும் விடுத்திருந்தார். நானும் கண்டிப்பாக வருகிறேன் என்றும் தகவலுக்கு நன்றி தெரிவித்தும் அவருக்கு செய்தி அனுப்பி விட்டு பொன்ராஜிடமும் நாளை கருத்தரங்கிற்கு செல்வதை பற்றி கூறிவிட்டு உறங்கச் சென்றேன்.
சாம்ராஜ் சாரை நான் முதலில் பார்த்தது 2021 விஷ்ணுபுரம் விருது விழாவில் அப்பெழுது எனக்கு அவர் கவிஞர் , எழுத்தாளர் என எதுவும் தெரியாது. விழாவில் அனைத்து கருத்தரங்குகளிலும் சிறு பகடியோடு சுவாரசியமானதாகவும் கிடுக்குப்பிடி கேள்விகளையும் தொடர்ந்து எழுப்பிய வண்ணம் இருந்தார். அதுவே எனக்கு அவர் ஈர்க்கக் கூடிய ஆளுமையாகவும் மனதில் பதிந்தார். ஒரு சில கருத்தரங்குகளில் அவர் அருகாமையில் அமரவும் நேர்ந்தது அப்பொழுது அவர் நண்பர்களிடம் உரையாடிக் கொண்டிருந்ததை கவனித்த பொழுது அவருடைய நுட்பமான வாசிப்பு வெளிப்பட்டதை கண்டு வியந்திருந்தேன். நான் வாசிக்க ஆரம்பித்த 2 ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில் நான் கலந்து கொண்ட முதல் விஷ்ணுபுர விருது விழா வில் எனக்கு நண்பர்களிடமும், ஆசிரியர்களிடமும் உரையாட நிறைய தயக்கம் இருந்தது. அங்கு நடக்கும் நிகழ்வுகளை கவனித்துக் கொண்டு மட்டுமே இருந்தேன். பின்னாட்களில் தளத்தில் வெளியான கடிதங்கள் மூலமாகவே சாம்ராஜ் சார் கவிஞர் எனத் தெரிய வந்தது.அதன் பின் அவரின் பல உரைகளை இணையத்தில் கேட்டிருந்தேன். அவரின் உரைகளின் வாயிலாகவும், கட்டுரைகளின் வாயிலாகவும் அவருக்கு இடதுசாரி கொள்கைகளின் மீதிருந்த ஈடுபாட்டினையும் தெரிந்து கொண்டேன்.
5 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் என் கணவரின் தம்பி பாண்டியராஜன் மதுரையில் நடக்கும் வைகை இலக்கிய திருவிழாவில் சாம்ராஜ் சாரின் கருத்தரங்கு ஒன்றின் அழைப்பிதழை குறுஞ்செய்தியாக அனுப்பி இருந்தார். சாம்ராஜ் சார் அவரின் பள்ளித்தோழன் என்றும் குறிப்பிட்டிருந்தார். நான் உடனே அவரை போனில் அழைத்து அவரை விஷ்ணுபுர விருது விழாவில் பார்த்ததைப் பற்றி கூறி அவர் அனுப்பிய கருத்தரங்கத்திற்கு சென்று சந்தித்து வருவதாகவும் கூறினேன்.அவரும் சாம்ராஜ் சாரிடம் நான் சந்திக்க வருவதாக தகவலும் தெரிவித்திருந்தார். நானும் கருத்தரங்கிற்கு சென்று அவரின் உரையையும் கேட்டு முடித்து அவரைப் பார்க்கலாம் என நினைத்த போது சாம்ராஜ் சார் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். பின்பு அவர் ஒரு அலுவலக அறைக்குள் செல்ல நான் அறையின் வாசலில் 5 நிமிடம் காத்திருந்தேன். அவருடைய புத்தகம் எதுவும் வாசிக்காத நிலையில் அவரிடம் பேசத் தயங்கி சந்திக்காமலே சென்று விட்டேன்.
கடந்த ஜூன் 4 ஆம் தேதி கனடா இயல் விருதிற்காக சாம்ராஜ் சார் கனடாவிற்கு சென்றிருப்பதை பற்றிய ஜெ தளத்தின் பதிவை ஹிமாவிற்கு பகிர்ந்து சித்தப்பாவின் நண்பர் என்றும் அவளிடம் கூறிய பொழுது ஹிமா முன்பே தனக்கு தெரியும் எனக் கூறினாள். நான் அவள் சித்தப்பா கூறினாரா என்று கேட்டதற்கு
" இல்ல ஜப்பான் ல இருந்து ஒரு ஃப்ரண்ட் சொன்னார் "
" என்ன ஜப்பான் ஃப்ரண்ட் சாம்ராஜ் சாரைப் பத்தியா?.... என்ன சொல்ற ஒன்னும் புரியல…" என்றேன்.அவள் சிரித்துக் கொண்டே
" ஆமா…. ம்மா காலையில் ஷாகுல் மாமா எனக்கு அனுப்பியிருந்தார்."
" ஓ…" என்றேன்..
அவளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு ஃபோனை துண்டித்தேன்., சாம்ராஜ் சார் எனது கணவரின் தம்பியின் பள்ளித் தோழன் என்று ஷாகுல் அண்ணாவுக்கு நான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். பின் அவர் என்னை ஃபோனில் அழைத்துப் பேசினார். அன்று இரவு எனக்கு சாம்ராஜ் சாரிடம் இருந்து குறுஞ்செய்தி " ஷாகுல் உங்கள் எண் கொடுத்தார் " என்று வந்தது. பின் தொடர்ந்து கனடாவில் இருந்து ஃபோனில் அழைத்துப் பேசினார். 15 நிமிட உரையாடலில் விஷ்ணுபுர விருது விழா தொடங்கி வைகை இலக்கிய திருவிழா வரைக்குமான கதையும் பேசப்பட்டது. இப்படியான அறிமுகத்திற்கு பின்பு சாம்ராஜ் சாரை நேரில் சந்திக்க கருத்தரங்கிற்கு புறப்பட்டேன்.
காலையிலேயே சமையல் மற்றும் வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு 9.30 க்கு வீட்டை விட்டு பொன்ராஜ் உடன் கல்லூரிக்கு சென்றேன். கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள காவலாளியிடம் கருத்தரங்கு நடக்கும் அரங்கம் செல்லும் வழியை கேட்டேன். அவர் பின்பக்க வாயில் வழியாகச் செல்லுங்கள் என அறிவுறுத்தினார். அந்த வாயிலுக்கு சென்ற பொழுது அங்கு அனுமதிக்க மறுத்து விட்டனர். பின்பு மீண்டும் பிரதான வாயில் வழியாகவே வழி கேட்டுச் சென்றேன். அரங்கிற்குள் நுழைந்த பொழுது 10 மணி ஆகி இருந்தது. ஆனால் 2 மாணவர்கள் மட்டுமே இருந்தார்கள். நிகழ்வு 10 மணி என்றிருக்க யாருமே இல்லையே எனக் கேட்டேன். மாணவி ஒருத்தி முதுகலை மாணவர்கள் வந்தவுடன் ஆரம்பித்து விடும் என்று சொல்லி என்னை அமரச் சொன்னாள். 2 நிமிடங்களில் மாணவ மாணவியர்கள் வந்து இருக்கையில் அமரத் தொடங்கினர். 10 நிமிடங்கள் கழித்து சாம்ராஜ் சாரும் , அவருடன் தமிழ்த் துறைத் தலைவர் பிரபாகரன், ஸ்டாலின் ராஜாங்கம் மற்றும் சில பேராசியர்கள் வந்தனர். கருத்தரங்கம் தொடங்கி சாம்ராஜ் உரையாற்றத் தொடங்கினார்.
தமிழ் நாவல்களில் சிறு குழுக்களின் பதிவுகள் என்ற தலைப்பிற்க்காக அவர் வாசித்த . காலவெளி, அம்மன் நெசவு , நுண்வெளிக்கிரணங்கள், கழிசடை , காடு, கதாநாயகி , கோபல்லபுரத்து மக்கள் மற்றும் அசோகமித்ரன், அபிமானி நாவல்களை முன்வைத்து உரையை நிகழ்த்தினார் சிறுபான்மையினரின் அடையாளச் சிக்கல்கள், உளவியல் சார்ந்த பிரச்சினைகள், வாழ்வியல் முறைகள், புலம்பெயர் காரணிகள்,கலாச்சார பண்பாட்டு கூறுகள் என அனைத்துத் தளங்களையும் தொட்டு தனக்கே உரிய பகடித்தனத்தோடும் பரந்த, கூரிய வாசிப்பனுபவத்தோடும் மாணவர்களுக்கு விரிவுரை ஆற்றினார். நவீன இலக்கியத்தில் சிறுபான்மையினரினை பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே உள்ளதாகவும் கூறினார் அவர் முன்வைத்த நாவல்களிலுமே படைப்பின் சில பகுதிகளில் மட்டுமே சிறு குழுக்களின் பதிவுகள் உள்ளன. சு.வேணுகோபாலின் நுண்வெளிக் கிரணங்களில் மட்டுமே ஒரு குழுவினுடைய மொத்த வாழ்க்கையும் காட்டப்பட்டுள்ளதாக கூறினார்.எம் . கோபாலகிருஷ்ணன் , சு.வேணுகோபால் , கி.ரா போன்ற வெகுசிலரே அந்த குழுக்களின் பின்புலத்திலிருந்து எழுதுவதால் அவர்களின் நாவலில் குழுக்களின் வரலாற்று பதிவுகளிலிருந்து அனைத்தும் முழுமையாக படைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.உரைக்குப் பின் மாணவர்களுடன் கலந்துரையாடலும் தொடர்ந்தது. பேராசியர்களும், வாசகர்களும் உற்சாகமாக கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். மாணவி ஒருவர் ஆய்வுக் கட்டுரைகளில் சிறுபான்மையினரின் பதிவுகளை பற்றிய கேள்வி எழுப்பிய போது சாமராஜ் ஆவணப்படுத்தப்படும் பதிவுகள் பெரிதாக சமூகத்தில் எந்த வித மாற்றத்தையும ஏற்படுத்துவதில்லை என்றும் ஏனெனில் ஆவணங்கள் உணர்வுபூர்வமாக எழுதப்படுவதில்லை" என்றும் கூறினார். தொடர்ந்து ஆங்கிலோ இண்டியன் குழுக்களின் பதிவுகளை பற்றிய சுவாரசியமான விவாதங்கள் நடைபெற்றன. பேராசியர் ஒருவரின் அண்டை வீட்டில் குடியிருந்த ஆங்கிலோ இண்டியன் பெண் ஒருத்தியுடன் உண்டான சுவாரசியமான நட்பினை பகிரும் பொழுது அரங்கம் சிரிப்பில் நிறைந்தது.12 மணிக்கு நிகழ்வு முடிந்து அரங்கை விட்டு வெளியேறினோம்.
சாம்ராஜ் சாருடன் எனக்கு ஃபோனில் மட்டுமே பேசி அறிமுகம் உண்டு என்பதனால் அரங்கில் இருந்து வெளிவந்த சாம்ராஜ் சாரிடம் என் பெயர் சொல்லி அறிமுகம் செய்து கொண்டு, நலம் விசாரித்து உரையாடிக் கொண்டிருந்த பொழுது அப்பொழுது மற்றொரு வாசகி இந்துமதியும் இன்னும் சில நண்பர்களும் எங்களுடன் இணைந்து கொண்டனர். சாம்ராஜ் சார் எங்களை கேண்டீனுக்கு அழைத்துச் சென்றார். நான் அவரிடம் அவருடைய சில கவிதைகளைப் பற்றியும் ஜெ வின் தளத்தில் வெளியான அவருடைய கட்டுரைகளைப் பற்றியும் பேசிக் கொண்டே வந்தேன். இந்துமதி கவிதை எழுதக் கூடிய தருணங்களையும், அதற்கான அவதானிப்புகளைப் பற்றியும் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். சாம்ராஜ் சார் ஆலயக் கலை வகுப்பு குழுவினருடன் சென்று வந்த ஹம்பி பயணத்தைப் பற்றியும் அங்கு குழுவாக விஷ்ணுபுரம் நாவல் வாசித்தது பற்றியும் சிலாகித்து கூறினார். பிறகு சுக்கிரி குழுவினைப் பற்றிய உரையாடல் தொடர்ந்த போது நண்பர்கள் ஷாகுல், பழனி ஜோதி , ராஜேஷ், மற்றும் வள்ளியப்பன் இவர்களோடு உரையாடிய சில தருணங்களையும் பகிர்ந்து கொண்டார். நாங்கள் அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருடைய அண்ணன் வந்து சேர அவரிடம் எங்களை அறிமுகம் செய்து வைத்தார், பின் அனைவரும் கேண்டீனுக்கு வந்து சேர்ந்தோம்.
கேண்டீனில் எங்கள் அனைவருக்கும் தேநீர் வரவழைக்கச் சொல்லி விட்டு உரையாடலை மற்ற நண்பர்களுடன் தொடர்ந்து கொண்டிருந்தார். நானும் அவரிடம் ஆய்வுக் கட்டுரையைப் பற்றிய அவரின் கருத்துக்களை மேலும் தெரிந்து கொள்ள ஒரு கேள்வியை எழுப்பினேன்.
"சார் நான் தருமராஜ் அவர்களின் 2 ஆய்வு நூல்களும், சில கட்டுரைகளையும் படித்துள்ளேன். சில உரைகளையும் கேட்டுள்ளேன். ஒரு சில கட்டுரைகளைத் தவிர மற்ற அனைத்தும் புனைவிற்கு நிகரான உணர்வுபூர்வமாகவே இருக்கிறதாக உணர்ந்தேன். என் தோழி ஒருவர் அ.கா பெருமாள் அவர்களின் நூல்களைப் படித்தும் அவ்வாறே கூறினாள்"….என இழுக்க…சாம்ராஜ் சார்
." அதைத்தான் நானும் சொல்றேன் மதுபாலா மிகச் சிலரே ஆய்வுக் கட்டுரைகளை அப்படி எழுதுறாங்க… நீங்க மார்க்ஸ், ஏங்கல்ஸ் புக்ஸ் படிச்சிருக்கீங்களா?".. என்றார்.
" இல்லை சார்" என்றேன்.
" அதெல்லாம் படிங்க புரியும்…. ஒரு ஆசிரியனின் வாசிப்பு பின்புலம்தான் கட்டுரைகளை அத்தளத்திற்கு கொண்டு செல்லும்…. என்னோட ஆசையும் அதான்…. ஆனா இங்க பலர் ஆய்வு கட்டுரைகளை ஆவணப்படுத்திட்டு மட்டும் போயிடுறாங்க…தொடர்ந்து நிறைய வாசிங்க மதுபாலா நான் சொல்றது உங்களுக்கு புரியும்…" என்றார்.
" ஆமா சார் நிறைய வாசிக்கனும்…. கண்டிப்பா முயற்சி பண்றேன்" என்றேன்.
தேநீர் அருந்திவிட்டு சாருடன் இணைந்து நானும் இந்துமதியும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பின் சாம்ராஜ் சாரிடம் வீட்டிற்கு வருமாறு அழைத்த போது இன்னும் 3 நாட்கள் மதுரையில் தான் இருப்பேன் என்றும் கண்டிப்பாக வருவதாகவும் கூறினார். நானும் இந்துமதியும் சாம்ராஜ் சாரிடம் விடை பெற்று நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டே கல்லூரியின் நுழைவாயிலுக்குச் சென்றோம். இந்துமதியின் கார் வர அவர் கிளம்பிச் சென்றார். நான் பொன்ராஜ் க்காக காத்திருந்த பொழுது ஷீலா மதினியிடம் இருந்து. எழுத்தாளர் , முனைவர் தருமராஜ் அவர்களின கருத்தரங்கம் ஒன்று காமராஜ் பல்கலைகழகத்தில் நடக்க இருப்பதாக செய்தி அனுப்பியிருந்தார். சில நிமிடங்களில் பொன்ராஜ் வரவும் நானும் புறப்பட்டேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக