மார்க்கெட் நாட்கள்
மதுரை நெல்பேட்டையில் 50 வருடங்களுக்கு மேலாக எங்களது சாக்கு குடோன்கள் இயங்கி வருகின்றன. எனது மாமனார் காலம் முதல் பொன்ராஜும் இந்தத் தொழிலை தொடர்ந்து செய்து வருகிறார். ரேஷன் கடைகளிலும் மற்றும் கொள்முதல் கூடங்களிலும் உள்ள சாக்குப்பைகளை டென்டர் மூலம் ஏலத்தில் எடுத்து அதனை பின்பு எங்கள் குடோனுக்கு கொண்டு வந்து ரகம் பிரித்து , உதறி தூசு. குப்பைகள், தவிடுகள் நீக்கி கிழிசல்களை தையலிட்டு ரகம் வாரியாக 50 சாக்குகளாக கட்டு போட்டு விற்பனைக்கு தயார் படுத்தனும்.
6 வருடங்களுக்கு முன்பு வரை சிம்மக்கல்லில் இயங்கிக் கொண்டிருந்த மொத்த காய்கறி வியாபாரக் கடைகள் அனைத்தும் மதுரையின் புறநகர்ப் பகுதியான பரவையில் அரசாங்கத்தால் கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சிம்மக்கல் பகுதி மதுரையின் பிரதானப் பகுதியில் இருந்ததால் போக்குவரத்து நெரிசலும், காய்கறி கழிவுகளை அகற்றுவதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டதினாலும் இந்தத் திட்டம் அரசாங்கத்தால் கையெடுக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
எங்களது வாடிக்கையாளர் கேரட் வியாபாரி ஒருவர் அங்கு 3 கடைகள் விலைக்கு வாங்கியிருந்தார். அதில் ஒரு கடை கேரட் பிடிக்கும் சாக்குப்பைகளை போட்டு வைக்க ஒதுக்கியிருந்தார். அவர் கடைக்கு தேவையான மொத்தச் சாக்குப் பைகளும் எங்களிடமிருந்து தான் பெற்றுக் கொள்வார்.எங்களது கடை சிம்மக்கல் அருகில் உள்ள நெல்பேட்டையில் இருந்ததால் முன்பு அவருக்கு சரக்கு அனுப்புவது எளிதாக இருந்தது. கேரட் வியாபரிக்கு தினசரி வியாபாரம் என்பதால் பொன்ராஜ் அன்றன்றைக்கு தேவையான சரக்கை எங்களது கடையிலிருந்து ட்ரைசைக்கிள் மூலமாக அனுப்பிக் கொண்டிருந்தார். பரவைக்கு கடை மாற்றப்பட்ட பிறகு பொன்ராஜ் ஒரு மாதத்திற்கு தேவையான சரக்கை கொள்முதல் செய்யும் இடத்திலிருந்தே நேரடியாக சரக்கை அங்கு இறக்கினார்.
கொள்முதல் கூடங்களிலிருந்து வரும் சரக்கை அப்படியே பயன்படுத்த முடியாது. நாங்கள் வாங்கும் சரக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சாக்குகள்தான். சரக்கு இறக்கியவுடன் சாக்கு கட்டுகள் பிரிக்கப்பட்டு முறையாக ரகம் பிரித்து தூசிகள் நீக்கப்பட்டு கிழிசல்கள் தைக்கப்பட்டு பின்புதான் விற்பனைக்கு அனுப்ப முடியும்.சீனி, சர்க்கரை, வெல்லம் பிடிக்கப்படும் சாக்குகளில் கசிவு இருக்கும். அதனை அலசி உலர வைத்து பின்பு மறு பயன்பாட்டிற்கு விற்கப்படும்.
எங்கள் கடையில் தண்ணீர் வசதி இல்லாததால் பொன்ராஜ் பெரும்பாலும் சீனி பிடிக்கப்படும் சாக்குகளை ஆயத்தம் செய்யும் பணியை என் பொறுப்பில் விட்டு விடுவார். சிறிது கடினமான பணிதான் சீனி பிடிக்கப்படும் சாக்கு கெட்டிச் சாக்கு வகையை சேர்ந்தவை நீரில் அமிழ்த்தி வெளியில் எடுக்கும் போது தூக்க முடியாத அளவிற்கு எடை ஏறியிருக்கும். ஒரு நாளைக்கு 25 லிருந்து 50 எண்ணிக்கை வரை சாக்குகளை அலசி உலர வைத்து கடைக்கு எடுத்துச் செல்லனும்.
கறிக்கோழி எடுத்துச் செல்லும் சாக்குகளை சுத்தம் செய்வதுதான் மிகவும் சிரமமானதாக இருக்கும் என பொன்ராஜ் கூறுவார். பொன்ராஜிற்கு பொதுவாகவே கோழி என்றாலே ஒரு ஒவ்வாமை உண்டு …. இதில் முடை நாற்றமெடுக்கும் அந்தச் சாக்கை சுத்தம் செய்து விற்பனை செய்யும் வரை வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம் ஒரு குளியலை போட்டு விடுவார். நல்ல வேளையாக எங்கள் கடைக்கு அந்த முடைநாற்றமெடுக்கும் சாக்கு மிகவும் அரிதாகவே வரும்.
பரவைக்கு அனுப்பப்படும் சரக்கு இந்த ரகச் சரக்கு ஏதும் இல்லாமல் கவனித்து அனுப்புவார். பெரும்பாலும் நெல், கோதுமை, பருப்பு, பிடிக்கப்படும் சாக்கு ரகங்களை அங்கு அனுப்புவார். கொள்முதல் கலன்களில் இருந்து வரும் சாக்கு முறையாக கட்டுப் போடப்பட்டிருக்காது. சரக்கு வாகனங்களில் வரும் போதே திருடு போய் விடும் வாய்ப்பு அதிகம் அதனால் பொன்ராஜும் அந்த வாகனத்தில் பயணித்து வருவார். நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் போது சாக்கை எளிதாக உருவி விடாதபடி நுட்பமாக கட்டு போட வேண்டும்.
பரவையில் இறக்கப்படும் சாக்குகளை சுத்தம் செய்து கட்டுப் போட தொழிலாளரை நெல்பேட்டையிலிருந்து அழைத்துப் போக வேண்டும். அதற்கான கூலி தரும் போது எங்களுக்கு லாபம் என்று எதுவும் மிஞ்சாது. ஒரு சாக்கிற்கு 5 பைசாவிலிருந்து 10 பைசா வரை மட்டும் தான் லாபம் வைத்து விற்க முடியும். ஆனால் இப்பொழுது தொழிலாளர்களுக்கு உரிய கூலியை எங்களால் கொடுக்க இயலாத நிலையில் இருப்பதால் அந்தப் பணியை நானும் பொன்ராஜும் இணைந்து செய்யலாம் என முடிவு செய்தோம்.
நெல்பேட்டையிலும், பரவையிலும் பெண் தொழிலாளர்கள் எவருமே இருக்க மாட்டார்கள் என்பதாலே பொன் ராஜிற்கு என்னை வியாபாரத்திலோ, அங்கு நடக்கும் பணிகளிலோ ஈடுபடுத்துவதில் தயக்கம் இருந்து கொண்டே வந்தது. ஆரம்ப நாட்களில் எனக்கு பணம் சேகரம் செய்வது, வங்கியில் பணம் போடுவது, எடுப்பது, வீட்டிலிருந்தே கணக்கு வழக்குகள் எழுதித் தருவது இந்தப் பணிகள் மட்டுமே கொடுத்திருந்தார். அதுவும் அவரால் செய்ய இயலாத காலங்களில் மட்டுமே கொடுப்பார். 3 வருடத்திற்கு முன்பு வரை பொன்ராஜ் ஸ்மார்ட் ஃபோன் உபயோகிப்பதில்லை. அதனால் சரக்கு பார்க்கப் போகும் கொள்முதல் கூடங்களுக்கு ஃபோட்டோ, வீடியோ எடுத்து பார்ட்டிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்ப என்னை உடன் அழைத்துச் செல்வார். அன்றிலிருந்து சரக்கு ரகம் , விலை நிலவரம் ஒவ்வொன்றாக அறிந்து கொள்ள ஆரம்பித்திருந்தேன்.ஆனாலும் ஆண் துணையில்லாமல் இந்த தொழில் புரிவது கடினம் என அவருடன் செல்லும் இடங்களில் நடந்த சில சகித்து கொள்ள இயலாத சம்பவங்கள் மூலம் அறிந்து கொண்டே.ன்.10 வருடத்திற்கு முன்பு அவருக்கு உடல் நிலை சரியில்லாத பொழுது 3 மாதம் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயச் சூழலில் நான் கடைக்குப் போக வேண்டிய வேளை உருவாகி வந்தது.ஆனாலும் அங்கு பெண்கள் இருந்து வேலை செய்வதற்கான சூழலும், தகுந்த வசதியும் இல்லாததால் தொடர்ந்து என்னால் செல்ல முடியவில்லை அச்சமயம் எங்களது கடையில் பணியாளர்கள் இருந்ததால் கடைக்குச் சென்று அன்றன்றைக்கான பணிகளை அவர்களின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு முக்கியமான பணிகளை மட்டும் முடித்து வீடு திரும்புவேன்.நன்கு பழக்கமான வியாபாரிகளுடன் தொழில் முறை பேச்சு வார்த்தை நடத்தினாலும் பெண் என்கிற உதாசீனத் தொனியில்தான் உரையாடல்கள் நடக்கும் . பெரும்பாலான நேரங்களில் பொன்ராஜ் ஃபோன் வாயிலாக அனைத்தையும் பேசி முடித்து கணக்கு வழக்குகளை மட்டும் சரிபார்த்து பணம் வசூலிற்கு மட்டும் அனுப்பி வைப்பார்.
பரவை மார்க்கெட் இரவு மட்டுமே நடக்கும் வணிகம் என்பதாலும் எங்களுக்கு பகலில்தான் அங்கு பணி என்பதாலும் அங்கு செல்வதில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்தது. எங்களுக்கு அந்தக் கடையில் மாதத்தில் ஒரு வாரம் மட்டும் தான் வேலையும் இருக்கும். சரக்கு இறக்கிய பின்பு அந்தக் கடையின் சாவியை வாங்குவதற்காக முதல் முறை பொன்ராஜ் என்னை மார்க்கெட்டிற்கு அழைத்துச் சென்றார்.
மார்கெட்டிற்குள் நுழைகின்ற போது அன்றிரவு மணி 9 இருக்கும் எனக்கு அந்த மார்கெட் சூழலை பார்ப்பதற்கே வியப்பாக இருந்தது. அப்பொழுது தான் கடைகள் ஒவ்வொன்றாக திறக்கப்படுகின்றன, பூஜை போடப்படுகின்றன. அங்குள்ள ஒரு கோவிலில் சிலர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். லோடு மேன்கள் வணிக வளாகங்களில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதும், சிலர் படுத்திருப்பதுமாக இருந்தனர். கடை முதலாளிகள் அங்குள்ள தொழிலாளர்களுக்கு அன்றைய பணிக்கான ஆணைகளை இட்டுக் கொண்டிருந்தனர். சிலர் ஃபோனில் தொழில் முறையாக உரையாடிக் கொண்டிருந்தனர். அங்குள்ள உணவகங்கள் மிகவும் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்து. கொத்து புரோட்டோ போடும் ஓசை மார்க்கெட்டுக்கே உரிய இரைச்சலுக்கு பின்னனி இசையாக ஒலித்துக் கொண்டிருந்ததது. ஒவ்வொரு 2 அடியை கடக்கும் போது ஓரிரு கெட்ட வார்த்தைகள் எனது செவிக்கு ஈயத்தை காய்ச்சி ஊற்றிக் கொண்டிருந்தன. பணி முடித்து சோர்ந்து வீடு திரும்பும் நேரத்தில் பரவை மார்கெட் மனிதர்கள் அப்பொழுதுதான் விடிந்து சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கிறார்கள். ஏறத்தாழ இரண்டாயிரம் மனிதர்கள் இந்த இரவுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மார்க்கெட் முழுவதும் சுற்றி பார்க்க விரும்பி பொன்ராஜிடம் கேட்க அவரும் கூட்டிச் சென்றார். ஒரு பெண்ணை கூட அங்கு பார்க்க முடியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் லாரிகள் வர ஆரம்பித்து விடும் சரக்குகள் ஏற்ற இறக்க என இன்னும் பரபரப்பாக இயங்கும். காலை 6 மணிக்கு வந்து பார்க்கும் போது இந்த இரைச்சல்கள் எல்லாம் அடங்கி வெறிச்சோடி கிடக்கும் எனவும் இவர்களுக்கெல்லாம் விடியும் போது தான் உறங்கும் நேரம் துவங்கும் என பொன்ராஜ் என்னிடம் விவரித்து கொண்டே வந்தார். பின் கேரட் வியாபாரியின் கடைக்கு சாவியை பெற்றுக் கொள்ள சென்றோம். அங்கே சென்றவுடன் என்னைப் பார்த்து அந்த வியாபாரி பொன்ராஜிடம்
" ஏம்ப்பா பொன்ராஜ் வீட்டம்மாவெல்லாம் இங்க கூட்டுவர்ற " என்றார்.
" வீட்ல இருக்க போரடிக்குதாம்… வெளில கூட்டிட்டு போச் சொல்ற… நமக்கு நம்ம பொழப்பே பெரும் பாடா இருக்கு…இதுல எங்க வெளில கூட்டிட்டு போக… அதான் இதைப் பாருனு கூட்டிட்டு வந்தேன் …"
" சரி சரி… அதுக்காக இங்க ஏன்?... சரி சாவி இந்தாப்பா…காலைல வந்து வேலையை முடிச்சிட்டு மதியம் வீட்டில் சாவியை கொடுத்துருப்பா…"
"சரிங்க அண்ணாச்சி"
இருவரும் அண்ணாச்சியிடம் விடை பெற்று கிளம்பினோம். அண்ணாச்சியிடத்த்தில் எங்களுக்கு பல வருடம் பழக்கம் உண்டு. பொதுவாக பொன்ராஜ் வசூலிற்கு போகும் இடத்தில் என்னை வாசலில் நிற்க சொல்லி விட்டு அவர் மட்டும் உள்ளே போய் வருவார். அண்ணாச்சியை நான் முதன் முதலில் அவரது வீட்டில் வசூல் பணத்தை வாங்குவதற்காக சென்ற போது வீட்டிற்குள் அழைத்தார். பொன்ராஜ் என்னிடம் கண் ஜாடையில் வெளியே போ என்றார். நான் தயங்கியவாரே வெளியே போகும் முன் அவரை பார்க்க நேர்ந்தது தமிழ் படங்களில் வரும் வில்லனைப் போல் வாட்டசாட்டமாக கருப்பா முறுக்கிய மீசையோடும் போதையேறிய சிவந்த கண்களோடும் காட்சி அளித்தார்.பொன்ராஜ் சட்டென பணத்தை வாங்கி விட்டு வந்தார். நான்
" ஏங்க… அவர் பார்த்து கூப்பிடுறார். நீங்க வெளில போகச் சொல்லீட்டீங்க…"
" பார்த்தா தெரியலயா உனக்கு ஃபுல் போதைல இருக்கார்…வீட்டுக்குத்தானேனு … கடைக்கு போற வழில பணத்த வாங்கிட்டு போய்டலாம் னு உன்னைப் பத்தி யோசிக்காம வந்தது தப்பாப் போச்சு….சரி வா… நாம போவோம்"
அதன் பிறகு அவரது மகன், மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க எங்கள் வீட்டிற்கு வர நாங்களும் அவரது வீட்டு திருமணத்திலும் கலந்து கொண்டு எங்களது சந்திப்புகள் தொடர்ந்தது.
நானும் பொன்ராஜும் வீட்டிற்கு வர காலை 6 மணிக்கு பரவைக்கு புறப்படுமாறு சொல்லி விட்டு உறங்கச் சென்றார். காலை 6 மணிக்கு பரவைக்கு பொன்ராஜ் பைக்கில் இருவரும் பயணித்தோம். 35 நிமிட பயணத்திற்கு பிறகு மார்க்கெட் வந்து கடையைத் திறந்தவுடன் கடையையும் கடையின் முன்பகுதியையும சுத்தம் செய்வதற்கு ஆயத்தமானேன். நான் சுத்தம் செய்ய, பொன்ராஜ் சாக்கு கட்டுகளின் எண்ணிக்கையை சரிபார்த்து கொண்டிருந்தார். பின் 3 கட்டுகளை பிரித்து போட்டார்.
என் பணி என்னவென்று பொன்ராஜ் சொல்லத் தொடங்கினார். நிறம் மங்கிய சாக்குகளை தனியாகவும் கிழிசல்கள் உள்ள சாக்குகளை தனியாகவும் பிரித்து எடுத்து வைக்கச் சொன்னார் பின் அவர் 3 சாக்குப்பைகளை இணைத்து தைத்து தரப்படும் சாக்கினை விரித்து அதன் மேல் ஐந்து ஐந்தாக நல்ல சாக்குகளை படிக்கட்டு போல் அடுக்கி வைக்கச் சொன்னார். 50 எண்ணிக்கை சரியாக வைத்த பின்பு பொன்ராஜும் நானும் இணைந்து முட்டிக் காலால் அழுத்தம் கொடுத்து அதனை அப்படியே வெஜ் ரோல் போல் உருட்டி முனைகளை இணைத்து பொன்ராஜ் தையலிடுவார். நான் முதலில் அடுக்கிய 2 கட்டுகளில் ஸ்டஃப்டு ஐட்டங்கள் பிதுங்கி கொண்டிருக்க பொன்ராஜ் கடிந்து கொண்டார். நான் சாக்குகளை அடுக்கி வைக்கும் பொழுது பொன்ராஜ கிழிசல்களை தைத்து வைப்பார். உருட்டும் போது மட்டும் என்னுடன் இணைந்து கொள்வார்.அடுத்து கட்டிய 5 கட்டுகளும் பக்காவாக உருட்டி கட்ட பொன்ராஜ் மகிழ்ந்தார். மணி 8ஐ நெருங்கும போது கைகள் ஓய்ந்து முதுகிலும் வலி எடுத்தது.சிறிது நேரம் ஓய்வெடுக்க பொன்ராஜ் காபி வாங்கி வந்து கொடுத்தார். நாங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கடைக்கு எதிரில் ஒரு சாக்கு கடை ஒன்று இருந்தது. அதன் உரிமையாளரும் எங்களுக்கு அறிமுகமானவர் தான்.அவர் கடையை திறக்க வரும் பொழுது என்னைக் கண்டு நலம் விசாரிக்க
"அண்ணாச்சி வாங்க காபி சாப்பிட்டு போங்க" என்றேன்
" இருக்கட்டுமா இப்பதான் டிபன் ஆச்சு நீ குடிமா" என்றார்.
நான் ஒரு கப்பில் அவருக்கு காபி கொண்டு போய் கொடுக்க வாங்கி கொண்டார்.
" ஒத்தப்பிள்ளை வைச்சிருக்க எதுக்கு இத்தனை பாடு….பொன்ராஜ் உடம்புக்கெல்லாம் நல்லா இருக்குல…" என்றார். நான் சிரித்து கொண்டு
"நல்லா இருக்கார் அண்ணாச்சி"
என்று கூறி விட்டு வந்து மீண்டும் பணியை தொடர்ந்தேன்.மணி 10. ஐ நெருங்கிய போது கட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் இடத்திற்கு வெயில் ஏறி வர களைத்து போக ஆரம்பித்தோம். பசியும் வயிற்றைக் கிள்ளியது. மொத்தம் 12 கட்டுகள் முடித்து வைத்திருந்தோம்.பொன்ராஜ் கட்டிய கட்டுகளை அடுக்கி வைக்க நான்
"பேக்கரியில் அடுக்கி வைத்த சாக்லேட் ரோல் கேக் போல இருக்கு" என்றேன்.
" பசில உனக்கு எல்லாம் அப்படித்தான் தெரியும்…. போகிற வழியில் அப்டியே டிபன் சாப்பிட்டு வீட்டிற்கு போவோம்" என்றார்.
பரவையிலிருந்து கிளம்பி ஒரு உணவகத்தில் வண்டியை நிறுத்தி விட்டு சாப்பிட நுழைந்தோம். இருவரும் தோசை ஆர்டர் செய்தோம் .அந்த உணவகத்தில் தோசைக்கு சாம்பார் மற்றும் 2 வகை சட்னியுடன் பூண்டுப் பொடியும் பரிமாறினார்கள் . தோசையை பிய்த்து பூண்டு பொடியில் பிரட்டி எடுத்து சாம்பார் சட்னியில் ஒரு முழுக்கு போட்டு வாயில் வைத்தால் தோசை அப்படியே நாவில் கரைந்து செல்ல ருசி அபாரமாக இருந்தது. நான் பொன்ராஜிடம்
" அண்ணாச்சி ஏன் கேரட் வியாபாரம் மட்டும் செய்றார்…. எல்லாக் காய்கறிகளையும் வாங்கி விக்கச் சொல்லுங்க… அப்பதான் நிறைய சாக்கு வாங்குவாங்க " என்றேன்
" ஏன் திடீர்னு அப்டி சொல்ற…. "
" அப்பதான் டெய்லி கட்டுப் போட கூப்டு வருவீங்க…. கூடவே இந்தப் பொடி தோசையும் கிடைக்கும்ல…. " என்றேன்.பொன்ராஜ் சிரித்துக் கொண்டே
" இன்னொரு தோசை வேணுமா?"
" போதும்… போதும்…. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்" என்றேன்.
கடந்த 5 வருடங்களாக இந்தப் பணி தொடர்ந்தது. அண்ணாச்சி 6 மாதத்திற்கு முன்பு அந்தக் கடையை விற்று விட்டதாகவும் அந்த வியாபாரமும் இனி நமக்கு கிடையாது என்றும் வருத்தத்துடன் சொன்னார்.
" விடுங்கங்க இது போனா வேறு ஏதாச்சும் வரும்…. பார்த்துக்கலாம்…" என்றேன்.
" கைல தொழில் இருக்கு… ஒரு பொடி தோசைக்கு 12 கட்டு சாக்கு உருட்ட ஆள் இருக்கு…. நான் ஏன் வருத்தப்பட போறேன்…" என்றார்…
இருவரும் சேர்ந்து சிரித்து கொண்டிருந்தோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக