பென்சாம்- வாசிப்பனுபவம்

    வாழ்க்கை இதுதான் என அறுதியிட்டு கூற இயலாது என்பது நாம் அறிந்ததுதான். இந்நாவலில் வரும் கதை மாந்தர்கள் அதனை மீண்டும் நினைவுறுத்தி விட்டு சென்றது போல் இருந்தது. கதை களம் நிகழும் நிலம் எனக்கு புதியது என்றாலும் நிலபரப்பின் விவரணைகளும், ‘கதை மாந்தர்களின் வடிவமைப்பும் மிக அணுக்கமாக உணரச் செய்தது. நாவல் ஆரம்பித்த சில மணித் துளிகளிலே கணப்படுப்பு  அருகே அமர்ந்து கதை கேட்க ஆரம்பித்து விடுகிறோம். நாவலின் செறிவான மொழி , தேர்ந்தெடுத்த சொற்சேர்க்கைகள் அந்நிலத்தினை விவரிக்கும் விவரணைகள், அம்மக்களின் உணர்வெழுச்சிகளை சொல்லிச் செல்லும் இடங்கள் வாசிப்பை இனிமையாக்கியது. கதையை தொடர்ந்து வாசிக்கும் போது ஒரு வித மன அழுத்தத்தை உணர்ந்தேன். கதை நிகழ்வுகள் அனைத்தும் புறச் சூழலோடு இணைந்து வரும் போது என் மனதிலும் கரு மேகங்கள் கவிழ்ந்தன… மழை பெருக்கெடுத்து ஊற்றியது…. பறவைகள் பாடின, பூக்கள் பூத்து குலுங்கின,  இடி இடித்தது … பூகம்பம் நிகழ்ந்தது குன்றுகள் பிளந்தன … புறத்தையும் அகத்தையும் பிணைத்து எழுதிய ஆசிரியரின் சொற்கள் நாவலினுள் என்னை வாழச் செய்தது. 

      

        விண்ணிலிருந்து விழுந்த குழந்தை ஹாக்சோ வில் இருந்து உலகின் நாட்குறிப்பு ஆரம்பமாகிறது. ஹாக்சோ காலமற்று வாழ்தலை விரும்புவதலோ என்னவோ அவருக்கு காட்டிற்குள் சென்று தனிமையாயிருக்கும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. . இழப்புகளைச் சந்திக்கும் போது சபிக்கப்பட்டதாகவும், மீண்டு வரும் போது தாயாகவும் ஏந்தப்பட்ட நிலத்தில் வாழும் இம்மக்களின் கதைகளை கதை சொல்லி ஹாக்சோ வழியாக சொல்லத் தொடங்குகிறார்.

        இங்கு வாழும் பெண்களே இந்நிலத்தில் ஆன்மாவாக திகழ்கிறார்கள். ஒரு நதியைப் போல வாழ்கிறார்கள். இப்பெண்களின் வாழ்க்கையில் தான் எத்தனை இழப்புகள். வாழ்நாள் முழுவதும் இழந்து கொண்டே இருக்கிறார்கள். தாயை, பிள்ளைகளை, காதலனை, கணவனை… இன்னும் எவ்வளவோ, ஆனால் ஒரு போதும் அவர்கள் தேங்கி நின்று விடவில்லை. அத்தனை இழப்புகளையும், துயரத்தையும் , அபத்தங்களையும், காதலையும். அன்பையும்  அனுமதிக்கிறார்கள் வாழ்வினை நிரப்பிக் கொள்கிறார்கள். ஆட்டிஸம் பீடித்த குழந்தை அடெல்லாவை விட்டு  தாய் மோனா  தன் கணவன் ஜூல்ஸுடன் ஏற்பட்ட  அபத்தமான  பிணக்கினால் பிரிகிறாள். குழந்தையை பிரிந்த துயரில் உள்ள மோனாவிடம் ஹாக்சோ கூறுவது ‘“சில விஷயங்கள் திரும்பப் பெறமுடியாதவை, அவை எப்போதும் நிகழ்கின்றன. நாம் தயாராய் இருப்பதே சிறந்தது.’ இவ்வார்த்தைகளுக்குப் பின் மோனாவின் பயணம் மீண்டும் தொடர்கிறது.பின்யாரின் வாழ்வினைப் பார்க்கும் போது கதை சொல்லிக்கு மட்டுமல்ல நமக்கும் தோன்றுகிறது பெண்களின் மனது ஆண்களின் மனதை விட பெரியது என்று. கதை சொல்லியின் தோழியாக வருபவள் எத்தனை துடுக்கானவள், வாழ்வின் அத்துனை அபத்தங்களையும் அனுமதிக்கிறாள் எந்த ஒளிவு மறைவின்றி தன்னையும் முழுதாக வெளிப்படுத்திக் கொள்கிறாள்.அவளை பார்க்கும் போது சிறிது பொறாமையாகத்தான் இருக்கிறது…. ஏன் நம்மால் இத்தனை வெளிப்படையாக இருக்க முடிவதில்லை… என அதே போல் இன்னும் என்னை ஏங்க வைத்த பெண் நெனமின்  கல்வி கற்றால் ஆன்மா சுருங்கி விடும் என்று சொல்லி கல்வியை மறுத்து ஆறுகளோடும், மலைகளோடும் வாழ்தலே ஆன்மாவை நிறைக்கும் வாழ்க்கை என உணர்ந்தவள். தன்னை இயற்கையின் ஒரு அங்கமாகவே வரித்து கொள்கிறாள். டேவிட் உடனான நெனமின்னின் ஆரஞ்சு காதல் எத்தனை இனிமையானது. டேவிட்டின் அத்தனை காதலையும் அனுமதிக்கிறாள்…. மேலும் மேலும் அன்பை எதிர்பார்ப்பவர்கள் பெண்கள் நெனமின்னும் அதற்கு விதிவிலக்கல்ல… அந்நிலையில் காதல் கைவிடப்படுகிறது… தனிமையிலிருந்தும், அற்புதங்களிலிருந்தும் பிறக்கும் கிராமத்தின் மகள்கள் உதிர்த்து செல்லும் வார்த்தைகள் எத்தனை மகத்தானவை. அவர்களின் உழைப்பும், உடல் உரமும் சிறிதும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என உணர வைத்தவர்கள். “ ஒரு வாழ்க்கையில் உடலையும் ஆன்மாவையும் ஒருமையில் வைத்துக் கொள்ள வேலை செய்வது மட்டுமே” என்று கூறும் பெண்களின் தகுதி வெறும் திருமண வாழ்க்கைக்கு  மட்டும் பார்ப்பது எத்தனை அவலம். கதை சொல்லியின் அன்னை இறந்து போகுமிடம்  என்னை நிம்மதி இழக்க வைத்தது…7 வருடங்களாகியும் அன்னையின் இழப்பை ஏற்றுக் கொள்ளவே  இயலாத மனநிலையில் நான் கதை சொல்லி தாயின் பிரேதத்தை தொடுகையில் கதறி அழுதேன். கதை சொல்லியின் தோழி திரும்ப திரும்ப சொல்கிறாள் “ நீ அதிர்ஷ்டம் வாய்த்தவள் உனக்கு அம்மா இருக்கிறாள்”. ஆம் அன்னையின் அருகில் வாழ்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான். இவர்களின் காதலர்கள் ஒரு போதும் இவர்களை காதலித்ததில்லை தான்…. ஆனாலும் இந்தப் பிரபஞ்சம் இவர்களை ஒருபோதும் கைவிடவில்லை என நாவல் முடியும் போது உணர்ந்தேன் . அரசாங்கத்திற்கு எதிராக போராடும் இசாமும் நவீன யுகத்தின் பிரதிநிதி போல்  வரும் சிர்சிரியும் எனக்கு அந்நியரின் ஊடுறுவலாலும் , நகரமயமாக்கலின் கலாச்சார மாறுபாட்டினாலும் சிதைந்த  ஒரு ஆளுமையாக பரிதாபப்பட வைக்கிறார். 

         .

         மக்கள் தொகை அதிகமில்லாத முற்றிலும் மலைகளாலும் நதிகளாலும் சூழப்பட்ட உலகின் ஒரு மூலையில் வாழும் இந்நில மக்கள் சபித்துக் கொண்டும் , முணுமுணுத்துக் கொண்டும் மாற்றங்களை அனுமதித்து கொண்டே இருக்கிறார்கள். பச்சை நிறத்தோடு தன்னைப் பொருத்திக் கொண்டு ஹாக்சோ கற்பனை பெருக்கிலும், தனிமை உணர்விலும் நம்மோடு ஒன்றி விடுகிறார். ராக்குட்டின் துடுக்குத்தனம் அம்மக்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. கமூரின் மனப்பிறழ்வினால் தன் குழந்தைகளையே வெட்டிச் சாய்க்கும் இடம் மனதை பதைக்கச் செய்தது.கா போ தன் மனைவி நெனாமின் மரணத்தில் அடையும் துயரம் அவர்களுக்கிடையேயான காதலை , பிணைப்பை உணரச் செய்தது. தன் இன மக்களுக்காகவும்    அவர்களின் உணர்வுகளையும், அடையாளத்தையும் அரசுக்கு எடுத்துரைக்கும் ஒரு குழுவை உருவாக்கி  வெற்றியும் பெறுகிறான் லரிக்.


       இருநூறு வருடங்களாக அந்நியர்கள் இந்நிலத்தில் ஆக்கிரமிப்பு நடத்துகிறார்கள்,போரிடுகிறார்கள், உள்ளூர்வாசிகளை இழிவு செய்கிறார்கள் இவை அனைத்தையும் அனுமதித்தும், மறுத்தும். போராடியும், சில நேரங்களில் இயைந்தும் இந்த விளிம்பு நிலை மக்கள் வாழ்கிறார்கள்.  இந்நில மக்களின் சடங்குகளும், ஆவிகளும், நம்பிக்கைகளும், அவர்கள் ரத்தத்தில் ஊறிய ஒன்று அதுவே அவர்களை நெடிய தூரம் பயணிக்கச் செய்கிறது. மாற்றம் வியத்தகு ஒன்றாகும் அதனை ஒரு இடம்பெயர்வு போல் ஏற்றுக்கொள்ளும் தைரியமும், நம்பிக்கையும் கொண்ட இம்மக்கள் நம் மனதில் நீங்கா இடம் பெற்று விடுதின்றனர்.

        நாவலின் மையமாக வரும் அந்நியர்களின் ஆக்கிரமிப்பினால் ,  அவர்களுக்குள் எழும் குழப்பங்களும், ஆளுமையை குலைக்கும் விதமும், அடையாள அழிப்பும் போராட்டங்களும், காடுகளை அழித்தலும், அதனை தொடர்ந்து வரும் இயற்கைப் பேரழிவால் நடக்கும் இடம் பெயர்வுகளும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாற்றம் நிகழும் தருணத்திலிருந்தும் மீண்டு வருவதற்கான துயரத்தையும், முன்னேறிச் செல்வதற்கான ஏக்கத்தையும் வெளிப்படுத்தும் கதை மாந்தர்களின் வடிவமைப்பும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

       

     வாழ்க்கை என்பது பலவித சாத்தியங்களின் கூட்டுக் கலவை அத்தனையையும் அனுமதித்து , நிதர்சனங்களை ஏற்றுக்கொண்டு,  எந்த வித பயமும் இல்லாமல்  மகிழ்ச்சியாக வாழ் என்ற நம்பிக்கையை கொடுத்து விட்டது சென்றது இந்நாவல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கர்நாடகா பயணம் - 4

மார்க்கெட் நாட்கள்