"சிறகுகள் விரிப்போம்" - வாசிப்பனுபவம்

   “ சிறகுகள் விரிப்போம்’” எனக்கு மிகவும் பிடித்த வகைமையான பயணக் கட்டுரை. அதுவும் ஒரு இலக்கியவாதியின் கண்ணோட்டத்தில் பயணக் கட்டுரை கூடுதலாக நமக்கு பல திறப்புகளையும், அறிதல்களையும் அளித்து விடுகின்றன. மேலும் ஆசிரியர் கவிஞர் என்பதால் செறிவான மொழி நடையும் , கவித்துவமான வரிகளும் வாசிப்பை தடையின்றி நகர்த்தி செல்கின்றன. வாசகர்களுடன் உரையாடுவது போல் அமைத்திருக்கின்ற நடை நானும் அவருடன் சேர்ந்து பயணித்தது போல் ஒரு அணுக்கமான உணர்வை ஏற்படுத்தியது.


பயணம் ஆரம்பித்த நொடியிலிருந்து ஒவ்வொரு நிகழ்வையும் ,தன் அகத்தே ஓடும் உணர்வுகளையும், பால்ய கால நினைவுகளையும் ஊடாடி விவரித்து கொண்டே செல்வது காலத்தை முன்னும் பின்னும் நகர்த்தி வாசிப்பில் ஒரு விளையாட்டை நிகழ்த்தி விடுகிறது. தான் கண்ட கலைத்துவம் மிக்க இடங்களையும், இயற்கை காட்சிகளையும், நவீன தொழில் நுட்பங்களால் உருவாக்கப்பட்ட இடங்களையும பற்றிய விவரணைகள் அந்த இடங்களை காட்சிப் படுத்திக் கொள்ளும் வகையில் இருந்தது. ஆசிரியர் எந்த வித தயக்கமுமின்றி தன்னை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறாரே… என்று எண்ணும் பொழுதே … ஆம் ஒரு படைப்பாளியின் மனம் அப்படித்தானே இருக்கும் எனவும் நினைத்துக் கொண்டேன்.


ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கும் சமயத்திலும் தனது கிராமத்து நினைவுகளையும், கல்லூரி நாட்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டே சென்றது வாசிப்பின் சுவாராசியத்தை கூட்டியது. தாங்கள் சென்ற ஒவ்வொரு இடத்தின் வரலாற்றுத் தகவல்களையும் தன்னியல்பான நடையில் கொடுத்திருப்பது கட்டுரையின் செறிவைக் கூட்டியது. ஆனாலும் சில இடங்களில் பயணக் கட்டுரையில் தான் சொல்ல வேண்டிய கருத்துக்கள் தேவைதானா என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்வது மீண்டும் மீண்டும் சில இடங்களில் வருவது வாசிப்பில் சலிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.


அங்கோர்வாட் கோவிலின் பிரும்மாண்டத்தை விவரித்த அழகும், அது அமைத்திருக்கும் இடத்தை பற்றிய விவரணையில் கம்போடியாவின் ஈரத்தையும், மண் வாசனையையும் என்னால் உணர முடிந்தது. ஹிட்லரின் வதை முகாமில் நடந்த படுகொலையின் பிணங்களை வெள்ளாவியில் வைத்து எடுத்த துணிகளோடு ஒப்பிடுகையில் அந்த கோரக் காட்சி கண் முன் வந்து மிரட்டிச் சென்றது. மிதவை நகரமான வெனிஸ் நகரினை பற்றிய விவரனைகள் என்னையும் கோண்டேலா படகுகளில் மிதக்கச் செய்தது. இது போல் எத்தனையோ இடங்கள் ஆசிரியரின் எழுத்துக்களின் வாயிலாக நான் வாழ்ந்து விட்டேன் எனலாம்.


இந்நூல் வெறும் பயணக்குறிப்புகள் மட்டுமே என எளிதில் கடந்து விட முடியாது. தான் காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும், தொன்மங்களும், கலை ஓவிய சிற்பங்களும் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற படிமங்கள். அதன் வாயிலாக இன்றைய அரசியலையும், வாழ்வியல் முறைகளையும்  புரிந்து கொள்ள முடியும் என்பதற்கான சான்றையும் தன் வாசிப்பனுபவத்தோடு பகிர்ந்தளிக்கிறார். ஒவ்வொரு பயணத்திலும் தான் சந்திக்கும் மனிதர்களின் மேன்மைகளையும், கீழ்மைகளையும் வரலாற்றில் நடந்த அதிகார துஷ்பிரயோகங்கள் இன்று நடைமுறையில் எப்படி கைமாறி வந்திருக்கின்றன என்ற அவலத்தையும், பால், இன, மத, மொழி பேத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தன் குரலை ஓங்கி பதிவு செய்திருக்கிறார். ஆணாதிக்க சமுதாயத்தில் பெண் கல்வி , விடுதலை முக்கியத்துவத்தை தன் பெண் குழந்தைகளின் முன்னேற்றம் வழியாக நமக்கு கடத்தி விடுகிறார்.


உலகில் எந்த ஒரு தனிமனிதனுக்கும் தமக்களிக்கபட்ட நியாயமான வாழ்வினை வாழ உரிமையிருக்கிறது. அப்படி இருந்தும் சக மனிதர்கள் மீது ஒரு பார்வையாலும், சொல்லாலும், அதிகார அத்துமீறலாலும் நசுக்குகின்ற மனம் எத்துனை கீழ்மையானது என்று பல நிகழ்வுகளை எடுத்துக் கூறுகிறார். அதே நேரம் தமக்கு அறிமுகமே இல்லாத பல மனிதர்களிடம் கண்ட மானுட நேயத்தை பற்றியும் வியந்தோதி பதிவு செய்கிறார். மொத்த கட்டுரையிலும்  அடிநாதமாக மானுட நேயமே கசிந்து வருவதை என்னால் உணர முடிந்தது. 


‘“சிறகுகள் விரித்தோம்” ஆசிரியருக்கு மட்டுமல்ல என் அகத்தில் ஒரு பெரும் பயணத்தையும், என் சிந்தனையில் ஒரு தெளிவையும் நிகழ்த்தி விட்டது. ஆசிரியரின் கருத்துகள் ஒரு மறை பிரதியாக  எழுத்துகளில் பிரதிபலிக்கும் போதே வாசகனிடத்தில் ஆழமாக போய்ச் சேரும் என்பது என்  தனிப்பட்ட கருத்து. இந்நூலில் ஆசிரியர் சில விடயங்களை மீண்டும் மீண்டும் கூறுவது பிரச்சாரத் தன்மையையும், சலிப்பையும் அடையச் செய்கிறது. 








 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பென்சாம்- வாசிப்பனுபவம்

கர்நாடகா பயணம் - 4

மார்க்கெட் நாட்கள்