அயோத்திதாசர் - முதற்சிந்தனையாளர் - ஜெயமோகன்

நண்பர்களுக்கு வணக்கம், 
ஆசிரியரின் கட்டுரை வாசித்து முடித்து என்னால் இயன்ற அளவு தொகுத்து எழுதியுள்ளேன்.
முதற் சிந்தனையாளர், வழிச் சிந்தனையாளர் என்றால் யார்? என்ற கேள்விக்கான விளக்கங்களோடும், உதாரணங்களோடும் கட்டுரை தொடங்குகிறது. ஆசிரியர் தொகுத்து அளிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் என் அறிதல்களையும் உற்று நோக்கி தெளிவு படுத்திக் கொள்ள ஏதுவாக எளிய முறையிலும் , விரிவாகவும் ஏற்புடையதாகவும் இருந்தது. 
        ஆசிரியரால் முதற் சிந்தனையாளராக கூறப்படும் மூவரில் ஒருவரான S.N. நாகராஜன் அவர்களின் நேர்காணல் ஒன்றினை 4 வருடத்திற்கு முன் தடம் பத்திரிக்கையில் வாசித்ததுண்டு. அந்நாளில் இவர் கூறும் மார்க்ஸியம் வேறு மாதிரி உள்ளதே என்று நான் நினைவில் நிறுத்தி யோசித்ததும் உண்டு. இக்கட்டுரை வாசித்த பொழுது S.N. நாகராஜன் அவர்களைப் பற்றி ஆசிரியர் கூறிய தகவல்களும், சிந்தனை முறைகளும் எனக்கு ஒரு பெரும் திறப்பாக இருந்தது. இவ்வாறான சிந்தனை முறைகளைப் பற்றிய அறிமுகக் கட்டுரையை தொடர்ந்து அயோத்திதாசர் ஒரு முதன்மை சிந்தனையாளர் என்பதை நிரூபிக்கும் வகையில் பல திறப்புகளை முன்வைத்து விவரிக்கிறார் ஆசிரியர்.
       நமது பண்பாட்டு அரசியல் சூழலில் நாராயணகுரு, அம்பேத்கர் மற்றும் அயோத்திதாசர் போன்ற அறிஞர்கள் மீது தொடர்ந்து முத்திரை குத்தப்படுதலும், திரிபுகளை நிழ்த்துவதும், அவர்களின சொற்கள் மறைக்கப்படுவதும், மறுக்கப்படுவதும்
வேதனை அளிக்கக் கூடியதாக ஆசிரியர் கூறும் உண்மையை நாமும் தொடர்ந்து இன்றைய நாட்களில் பரர்ப்பதும் பெரும் சாபமாகவே உணர்கிறேன். ஆசிரியர்   பெளத்தம், அவைதிக சிந்தனை முறைகளை ஆராயும் போது அதிலுள்ள முக்கியமான சில விடுபடல்கள் மூலமாகவே அயோத்தி தாசரை கண்டடைகிறார். மேலும் அவரை சுற்றி  நிகழும் சில்லறை அரசியல்களையும், விமர்சனங்களையும் தவிர்த்து விட்டு முழு ஈடுபாட்டோடும், வரலாற்று பிரக்ஞையோடும் ஆய்வுகளை நிகழ்த்துகிறார். 
       ஆசிரியரின் பல கட்டுரைகளைப் படித்து ஏற்கனவே நான் உணர்ந்த  ஒன்று நம் கல்வி முறையால் நம் மரபிலிருந்து துண்டிக்கப்பட்டு , மடை மாற்றம் செய்யப்பட்டமையால் நம் முன்னோர்களிடத்திலிருந்து நமக்கு உருவான ஒரு இடைவெளி நம் சிந்தனை முறையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை அடைந்துள்ளோம் என்பதையும், தனித்துவத்தை இழந்துள்ளோம் என்பதையும்  அவர் அனுபவங்களில் இருந்து கூறப் பெறுவதும் எனக்கு ஒரு திறப்பாகவும், படிப்பினையாகவும் இருந்தது. மரபான சிந்தனை பின்புலத்தில் நின்று சமகால பிரச்சினைகளை ஊன்றி கவனிக்கும் அயோத்திதாசரை  ஐரோப்பிய மைய நோக்கு சிந்தனை முறையில் காணாமல் பின்நவீனத்துவ சிந்தனை முறையில் இருந்து படிப்படியாக பின்னோக்கி சென்று நாம் ஒரு  மாற்றுச் சாத்தியத்துடன் கண்டடையலாம் என ஆசிரியர் உறுதி கொள்கிறார்.
     ஆசிரியர் நம்முடைய சிந்தனைத் தளமே ஐரோப்பிய நோக்கினால் கட்டமைக்கப்பட்டுள்ளதை உணர்த்தி நம்மை நாமே பார்க்கும் முறையான அயோத்திதாசரின் ஆய்வு முறையினை  வேருள்ள ஆய்வு முறை என கூறுகிறார். அவ்வாறாக கண்டடையப்பட்ட அயோத்திதாசர் என்னும்  முதன்மை சிந்தனையாளரின் ஆய்வு முறையின் மூலம் பண்பாட்டு ஆய்வுகளை நிகழ்த்தும் போது நாம் பல்வேறு திறப்புகளையும், சாத்தியங்களையும் கண்டு கொள்ள முடியும் எனவும் அதற்குச் சான்றாக சாஸ்தா வழிபாட்டு முறையினை கூறியும்  விளக்கி உள்ளார்.
    ராஜ்கெளதமன் அவர்கள் எழுதிய அயோத்திதாசர் ஆய்வு நூலில் உள்ள பெளத்தம் பற்றிய கட்டுரையின் மூலம் அயோத்திதாசரின் பெளத்த சிந்தனை சமகாலப் பின்னணியை அறிந்து கொள்ள ஏதுவாக பல தகவல்களும்,  ஐரோப்பியரால் கட்டமைக்கப்ட்ட பௌத்தமும், மேலை , கீழை மெய்யியல் நோக்குகளும் சில சிறப்பு செய்திகளும் கூட நமக்கு கிடைக்கப் பெறுகிறது. நவீன ஐரோப்பா பௌத்தத்தை கண்டெடுத்த மையமாக சென்னை இருந்த போதிலும் அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சைவ மீட்பு நடைபெற்றதை பற்றிய தகவல்களும் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. மேலும் பல புத்தகங்களின் அறிமுகமும். அறிஞர்களின் அறிமுகமும் கிடைக்கப் பெறுகின்றன. ராஜ் கௌத்மன், ஞான அலாய்சியஸ் ஆய்வுகளை கொண்டு பார்க்கும் போது ஆசிரியர் அயோத்திதாசரின் பெளத்தம் முற்றிலும் வேறாக இருப்பதை உணர்கிறார். மேலும் அவர் தலித் போராட்டத்திற்காக பெளத்தத்தை ஒரு கருவியாக உபயோகிக்கவில்லை என்பதையும் உறுதியாக நம்புகிறார்.
     பெளத்த மீட்பியக்கத்தில் நேரடித் தொடர்பு கொண்ட மூவரில் சிங்கார வேலரும், லட்சுமி நரசுவும் ஐரோப்பிய நோக்கு கொண்டவர்கள் இவர்களுடன் ஒப்பிடப்பட்ட அயோத்திதாசரின் மதமும், தத்துவமும் அவரது சொந்தப் பின்னனியில் வந்தவர் என்றும்  மேலும் அவர் நூல்களுக்கு உரை வழங்குவதிலும், புராணியம் அமைப்பதிலும் அவர் முன்வைக்கும் முடிவுகளிலும் தனித்தன்மையோடு விளங்குவதாக ஆசிரியர் கூறுகிறார். உரை எழுதுவதிலும் புராணங்களை உருவாக்கிக் கொள்வதிலும் மூலமே இங்கு கருத்தியலதிகாரம் நிறுவப்படுகிறது என்று ஆசிரியர் சைவம், வைணவும் போன்றவைகளுக்கு எழுதிய உரைகளை எடுத்துரைத்து விளக்கிச் சொல்கிறார்.  பெரும்பாலான சிந்தனைகள் உரைகளின் வாயிலாகவே சமூகத்தில் நிலைநாட்டப்பட்டு வருகின்றன என்பதை அறியும் போதே அயோத்திதாசரின் ஆய்வின் முக்கியத்துவத்தையும் , அவரின் உழைப்பையும் என்னால் உணர முடிந்தது. அயோத்திதாசர் சித்த மரபில் நின்றபடி பௌத்த சமண பாரம்பரியத்தை ஆராய்ந்து நூல்களுக்கு விளக்க உரை அளிக்கிறார். அதன் மூலம் தமிழ் வரலாற்று பண்பாட்டாய்வில் பல   சாத்தியக்கூறுகள்  கிடைக்கப் பெறலாம். அதன் வழியாக நாம் புதிய அறத்தை நோக்கி நகர்த்தப்படுகிறோம் என்பதே உண்மை. நம் மரபில் பெரும்பகுதி கைவிடப்பட்டு இருக்கும் நிலையில் அயோத்திதாசர் போன்ற ஒரு அறிஞர் உருவாக்கும் மறு சித்தரிப்பு நமக்கு கிடைத்த வரம் என்பேன். இந்த மாதிரியான சித்தரிப்பில் சில சிக்கல்கள் இருந்தாலும் ஆசிரியர் சொல்வது போல் நமக்கான ஆய்வுக் கருவிகளை நாமே உருவாக்கிக் கொண்டு நம் வரலாற்றை பன்மயமாக ஆக்கிக் கொள்ளலாம்.
   இக்கட்டுரை நீண்ட வாசிப்பு பயணத்தில் தொடர ஒரு அறிமுகமாகவும், பல்வேறு அறிஞர்களையும், துறைகளையும் அறிந்து கொள்ள ஏதுவாகவும் இருந்தது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பென்சாம்- வாசிப்பனுபவம்

கர்நாடகா பயணம் - 4

மார்க்கெட் நாட்கள்