சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கு ஒரு பயணம்
இந்த வருட புத்த பூர்ணிமா அன்று ஒரு அட்டகாசமான அனுபவம் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.வழி தவறிய ஆட்டிற்கு ஆண்டவனின் தோளில் இடம் உண்டு எனச் சொல்லி கேட்டதுண்டு வழியே சரியாத் தெரியாத எங்களையும் ஆண்டவன் அவர் தோளில் ஏற்றிக் கொண்டதாக இருந்தது இப்பயணம்.
நான் வாசிக்கத் தொடங்கி 5 வருடமாகிறது. இதனைத் தொடர்ந்து என் வாழ்வில் புதிதாக இணைந்து கொண்ட உறவுகளும்,நட்புகளும் ஏராளம். வாசிக்கத் தொடங்கிய நாட்களில் என் வாசிப்பனுபவங்களை பகிர்ந்து கொள்ள இணை உள்ளங்கள் இல்லாமல் ஏங்கி தவித்த காலத்தில் என் அத்தை மகள் ஷீலா மதினி வாசிப்பதை ஒரு திருமண வீட்டில் சந்தித்த போது அறிந்து கொண்டேன். ஆனாலும் நாங்கள் மிக அரிதாகவே வாசிப்பை பகிர்ந்து கொண்டோம்.
நான் வெள்ளிமலைக்கு சென்று தத்துவ வகுப்பு மூலமாக அறிந்த நண்பர்கள் சுக்கிரி விவாதக் குழுவில் இணைந்து கதை விவாதிக்க என்று மதினியிடம் என் அனுபவங்களை கூறிய போது எங்கள் நட்பு நெருக்கமாக ஆரம்பித்தது. மதினிக்கு சிறு வயது முதலே பயணங்கள் மீது தீராத மோகம் கொண்டவர் என்பதைக் கூறினார். நானும் பொன்ராஜ் உடனான பயணங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டேன். அப்படியாக நானும் மதினியும் இணைந்து சில பயணத் திட்டங்களை திட்டமிட ஆரம்பித்தோம். எங்களுடைய முதல் பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி இது வரை ஆறு பயணங்கள் என தொடர எங்கள் நட்பு மேலும் நெருக்கமாகியது.
குரு பூர்ணிமா அன்று திருப்பரக்குன்றம் மலையில் உள்ள சமணர் சிற்பங்களை பார்த்து வரலாம் என ஷீலா மதினியின் அக்கா அருணா மதினி என்னிடம் கேட்க நானும் சம்மதித்தேன்.
ஞாயிறன்று அருணா மதினியின் குடும்பத்துடன் மதியம் 2.30 மணி அளவில் என் வீட்டிலிருந்து கிளம்பினோம். ஷீலா மதினி 2 மணி அளவில் விருதுநகரிலிருந்து புறப்பட்டிருந்தார். அருணா மதினி மகன் விவேக் என்னையும் அருணா மதினியையும் 3 மணி அளவில் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் மலைப் படிக்கட்டின் அருகே இறக்கி விட்டு மற்றவர்கள் அருகிலிருக்கும் பூங்காவிற்கு சென்று விட்டனர். நாங்கள் ஷீலா மதினி வருவதற்குள் சமணச் சிற்பங்களும் , மலையில் அமைந்துள்ள குகை பற்றியும் அங்குள்ள மக்களிடம் விசாரித்தோம் அவர்கள் எவருக்கும் அதைப் பற்றி தெரியாது என கூறினர். நான் காவல் அதிகாரி ஒருவரைக் கண்டு அவரிடம் விசாரித்தேன். அவர் இரண்டு இடங்களில் சமணச் சிற்பங்கள் இருப்பதாகச் சொல்லி வழியும் சொன்னார். ஆனால் இரண்டுமிடங்களும் மலையடிவாரத்தில் குடைவரைச் சிற்பகமாகத் தான் இருக்கும் மலைக்கு மேல் எதுவும் இருக்காது என்றும் கூறினார். மலை மேல் உள்ள குகை பற்றியோ அங்குள்ள சிற்பங்கள் பற்றியோ தெரியாது என்றும் கூறினார்.
இதற்கிடையில் ஷீலா மதினியும் வந்து சேர மூவருமாக அந்த காவல் அதிகாரி சொன்ன இடத்தை தேடி நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் இருந்த இடத்திற்கு அருகிலேயே உள்ள ஒரு சமணச் சிற்பங்களை காண முதலில் சென்றோம். ஆனால் அந்த இடம் இரும்பு கம்பிகளால் வேலி அமைக்கப்பட்டு பூட்டப்பட்டிருந்தது. வெளியில் நின்றே சிற்பங்களை பார்த்தோம். தொல்லியல் துறையினரால் வைக்கப்பட்டிருந்த பலகையில் 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள் என்றும் சிற்பங்கள் தொடர்ந்து சேதப்படுத்தப்படுவதால் அடைக்கப்பட்டிருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. அவ்விடத்திற்கு முன்பு உள்ள பெரிய மைதானத்தில் பூசகர் பயிற்சியில் இருக்கும் இளம் மாணவர்கள் தலையில் குடுமியும், தோளில் பூணலும் மஞ்சள் வேட்டியும் அணிந்து உற்சாகமாக கபடி விளையாடிக் கொண்டிருந்தனர்.. வழக்கமாக விளையாட்டு உடை அணிந்து கட்டுகோப்பான உடல்வாகு கொண்ட வீரர்கள் விளையாடியதையே பார்த்திருந்த எனக்கு சிறியதும் பெரியதுமான பையன்கள் சதைத் திரட்சி குழுங்க ஒரு வித்தியாசமான காஸ்ட்யூமில் விளைபாடுவதை காண சுவாரசியமாக இருந்தது. பின்பு நாங்கள் அங்கிருந்து மற்றொரு இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
அந்த இடம் நாங்கள் தற்போதிருக்கும் மலைப்பகுதியின் பின்புறத்தில் இருந்தது. ஏறக்குறைய ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு நடக்க வேண்டி வரும். பெளர்ணமி தினமென்பதனால் கிரிவலம் வரும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சாலை ஓரங்களில் உருக்குலைந்த இரவலர்கள் தங்கள் குரலால் தங்கள் இருப்பை நிகழ்த்தி கொண்டிருந்தனர். கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தொன்னைகளில் புளியோதரை, பொங்கல் என வழங்க வழிகளை மறித்து நீண்ட வரிசையும் ஆங்காங்கே நிற்க இதனைப் பார்த்துக் கொண்டே நாங்களும் எங்கேனும் மலையேறும் பாதை தெரிகிறதா என்றும் சமணச் சிற்பங்களோ, குகைகளோ இருப்பதற்கான பலகைகள் ஏதும் தெரிகிறதா என கவனித்துக் கொண்டே நடக்க ஒரு வழியாக சமணச் சிற்பங்கள் இருந்த மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்தோம். ஆனால் அங்கு ஒரு பலகையில் தர்காவிற்கு செல்லும் வழி என குறிப்பிட்டு அம்புக்குறி காண்பித்த பகுதியில் மலையேறும் பாதை ஒன்று இருந்ததையும் பார்த்தேன். என் மனதில் வெகு நாள் ஆசை என மின்னிய நொடி மதினிகளிடம்“ தர்காவிற்கு செல்லலாமா? “ என்றேன். ஷீலா மதினி சரி சொல்ல அருணா மதினி தயங்கினார்.
அருணா மதினிக்கு அந்த குகையை எப்படியாவது கண்டுபிடித்து விடனும் என்கிற விருப்பம் அவரை தயங்கச் செய்தது. எங்களுக்கு இந்தக் கூட்டத்தில் இந்த இடத்தை கண்டடையவே ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது வந்ததிற்கு தர்காவிற்கு சென்று வரலாம் என்று தோன்றியது. மேலும் எனக்கு மலை உச்சியில் தனித்திருக்கும் அந்த தர்காவை பார்க்கும் போதெல்லாம் ஒரு முறையாவது அங்கு செல்ல வேண்டும் என்ற விருப்பமும் இருந்தது. ஒரு வழியாக நாங்கள் இருவரும் மதினியை சம்மதிக்க வைத்து, திரும்பும் வழியில் சிற்பங்களை பார்த்துக் கொள்ளலாம் நேரம் விரயமாகிக் கொண்டே இருக்கிறது என்று கூறி மலையில் ஏறத் தொடங்கினோம்.
சாலை வழியில் செல்லும் போது இந்த மலை பெரிய வழுக்குப் பாறை போல இருக்கும்,அதன் உச்சியில் ஒரு கட்டிடம் என “ யானை மேல் அம்பாரம்” போல் காட்சி அளிக்கும். ஆனால் மலைக்கு மேலேறும் பாதை அடர்ந்த காட்டினூடாக ஆரம்பித்தது. வழியெல்லாம் பாறைகளை வெட்டியெடுத்தும். செதுக்கியும், கற்குவியலுமாக பாதையை அமைத்திருந்தனர். பாதையில் பெயருக்கு கூட மண் என்பதை காண முடியவில்லை. பாதை ஓரங்களில் முட்செடிகளும் அதிகம் காணப்பட்டன. மிகுந்த கவனத்துடன் மெதுவாகவே ஏற முடிந்தது. இந்த கடினமான பாதையிலும் மக்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். குச்சியை ஊன்றிக் கொண்டு முதுமையானவர்களும் கூட ஏறிக் கொண்டிருந்தனர். துய வெண்ணிற அங்கியும், குல்லாவும் அணிந்த ஒரு இஸ்லாமிய ஆண்கள் குழு ஒன்று அதி விரைவாக அப்பாதையில் ஏறிக் கொண்டிருந்தனர்.
மலையேறத் தொடங்கி பத்து நிமிடங்கள் கழிந்த நிலையில் அருணா மதினி மருமகள் அருண்சியிடம் இருந்து ஃபோனில் அழைப்பு வந்தது வீட்டிற்கு கிளம்பலாமா? என… அருணா மதினி எங்களிடம் என்ன செய்யலாம் எனக் கேட்க காத்திருக்கச் சொல்லுங்கள் நாம் தர்காவை பார்த்து விட்டு வந்திடலாம் எனக் கூறினோம், மதினியும் அவ்வாறே கூறினார். நாங்கள் அங்கு மலையேறிக் கொண்டிருக்கும் ஒரு பயணியிடம் நான் “எவ்வளவு நேரம் பிடிக்கும் தர்காவிற்கு செல்ல” என கேட்டேன். அவர் “ ஒரு மணி நேரம் ஆகுங்க… “ என்றார். அதனை கேட்டு அருணா மதினி திகைத்து “ திரும்பி விடலாமா?” எனக் கேட்டார். ஷீலா மதினி என்னிடம் கேட்க நான் “ உங்கள் விருப்பம்” என்றேன். மதினி “ உன்னால் ஏற முடியுமா? .. “ என்றார். “ ஏறிடலாம் மைனி இவ்ளோ பேர் போறாங்கதானே! “ என்றேன். உடனே அருணா மதினி “ நீங்க போங்க நான் இங்கேயே இருக்கிறேன்” என்றார். நாங்களிருவரும் தயக்கத்துடன் நடக்க ஆரம்பித்தோம். நாங்களிருவரும் இரு முறை திரும்பி பார்த்து மதினியிடம் “தனியாக இருக்க சங்கடமாக இல்லையா” எனக் கேட்க அவர் “இல்லை.. என்னால் ஏற முடியும்னு தோணல நீங்க போங்க” என்றார். ஆனாலும் அவர் முகத்தில் ஒரு சோர்வு படர்ந்திருந்ததை பார்த்த நாங்களும் தயங்க எங்களருகே வந்த அறுபது வயது தக்க ஒரு அம்மா .. “ நீங்க கோயிலுக்கு போகனுமா? தர்காவிற்கு போகனுமா?” என்றார்.
“ இங்க கோயில் இருக்குதா மா ? “ என்றேன். அந்த அம்மா நாங்கள் செல்லும் பாதையிலிருந்து பிரிந்து போகும் இன்னொரு வழியை காட்டி” இந்த வழியா போனா கோயிலுக்கு போகலாம். ஆனா ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி நீங்க இருவர் தனியாக போக வேண்டாம் …. எந்தச் சாமி னா என்னம்மா வாங்கம்மா தர்காவிற்கே போகலாம்” எனக் கூற நாங்கள் மீண்டும் உற்சாகமாக நடக்கத் தொடங்கினோம்.
எங்களுடன் வந்த அம்மா கடுமையான கால் வலி இருப்பதால் குச்சியை ஊன்றிக் கொண்டு நடப்பதாகவும் மேலே தர்காவிற்கு அருகில் கடை போடுவதற்காக தன் மகளுடன் செல்வதாகவும் கூறி இரவும் அங்கேயே தங்கி விடுவோம் என்றார். அவரது மகள் இரு கைகளிலும் பை நிறைய பொருட்களோடு ஏறிக் கொண்டிருந்தார். நான் அவ்வப் பொழுது அந்த அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு அவர் ஏறுவதை எளிமையாக்கிக் கொள்ளும்படி செய்தேன். பின் அவர் ஓய்விற்காக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார். நாங்கள் தொடர்ந்து நடக்க கால் மணி நேரத்திற்கு பின் பெரிய வெட்டவெளிக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் தர்கா வந்து விட்டது என நினைத்து மகிழ்ந்தோம். ஆனால் அங்கு எதுவுமில்லாததை கண்டு மதினி ஒரு பெண்ணிடம் கேட்க… அவள் “ இப்பதான் பாதி தொலைவு வந்திருக்கீங்க…. இன்னும் அரை மணி நேரம் மேலே ஏறனும் “ என்றாள். நானும் மதினியும் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டோம்.
இந்த வெட்டவெளி எனக்கு பாறைப் பாலை என கண்முன் விரிந்தது . நாலாபுறமும் இருந்து வந்த காற்று
எங்களை நிலையில்லாமல் தள்ளாடச் செய்தது. இப்பாறைப் பாலையின் வெறுமையும் , காற்றின் இனிமையும் மனதை சிறகடிக்க வைத்தாலும் கீழே எல்லோரும் எங்களுக்காக காத்திருப்பதை எண்ணி மண்ணில் காலை ஊன்றச் செய்தது.
இதுவரை கடினமான கூர்மையான பாறைகளையும், கற்களையும் பார்த்து அஞ்சி அஞ்சி எடுத்து வைத்த பாதங்கள் வெட்ட வெளியில் வழுக்கும் பெரிய மலைப்பாறை பரப்புகளின் மீது கால் வைத்த போது பூவின் மென்மையைத் தான் உணர முடிந்தது. அந்த அதீத மென்மையில் எங்களின் கால்கள் வழுக்கிச் செல்ல தட்டுத் தடுமாறி ஒருவரை ஒருவர் பிடித்து கொண்டு மெல்ல மெல்ல அடிவைத்தும், சில இடங்களில் தவழ்ந்தும் முன் நகர்ந்து சென்றோம். பாறைப் பரப்புகளில் பல கோடி ஆண்டுகளாக காற்றும், நீரும் நாமறியா மனிதர்களும் , விலங்குகளும் கடந்து சென்ற தடங்கள் மந்தணச் சொற்களாக பொறிக்கப்பட்டிருப்தை கண்டு அதை கைகளால் நீவி நீவி அந்த சொற்களின் பொருளறிந்து அள்ளிக் கொள்ள மனம் பதறுவதை மதினி எடுக்கும் புகைப்படத்திற்கு புன்னகையாக்கி கொண்டேன். நாங்கள் திருநந்திக்கரை குடைவரை கோயிலுக்கு சென்ற பொழுது அங்கே பார்த்த பாறைப் பரப்பு குழந்தை கையினால் குழைத்து பூசிய களிமண் போல இருப்பதாக மதினி வியந்தோதியது மனதில் மின்னிச் சென்றது. அந்த குன்றின் மேல் நின்று கீழே பார்த்த பொழுது மதுரை மாநகரம் முழுதும் அழகாக காட்சியளித்தன. நானும் மதினியும் சிதறால் மலையேறிய போது இதே போன்ற காட்சியைப் பார்த்ததும் நினைவில் எழுந்து வந்தது. மதினியிடம் நான்
“ இலக்கிய வாசிப்புக்கு முன் இந்தப் பாறை, மலையெல்லாம் பெரிசா நான் கவனிச்சது இல்ல… இப்ப என்னவோ இதெல்லாம் பார்த்து கொஞ்சம் பெனாத்துறது மாதிரி தோணுது… சரியா தப்பா னு தெரியல.. ஆனா லைஃப் இன்ட்ரஸ்டிங்கா போகுது மைனி “ என்றேன்..
இதற்கு மேலும் போகலாமா என்ற எண்ணம் வந்து மீண்டும் தயங்க கீழே பார்த்த அம்மா எங்களை கவனித்து மேலே ஏறச் சொல்லி உற்சாகப் படுத்தினார் . நாங்கள் மேலே பார்த்த பொழுது காலணிகளுடன் ஏறுவது சிரமம் என கண்டு அதை ஓரிடத்தில் வைத்து விட்டு நடக்கத் தொடங்கினோம். இந்த முறை எங்கள் பயணத் துணையாக சில குரங்குகளும் தொடர்ந்து வந்தன. வழுக்குப் பாறைகளில் மேலேறுவதற்கு பிடிமானமாக செவ்வக வடிவத்தில் பாறைகளில் செதுக்கி வைத்திருந்தனர் அதில் பாதங்களை பக்கவாட்டாக வைத்து வைத்து கவனமாக ஏறிச் சென்று கொண்டிருந்தோம். நான் மதினியிடம் “இங்கு வருகிறவர்கள் எல்லோரும் ஸ்பைடர் மேனாக இருப்பார்கள் என நினைத்து இப்படி செதுக்கி இருப்பார்களோ?” என்றேன். பாதை மேலும் மேலும் செங்குத்தாக போய்க் கொண்டே இருக்க ஷீலா மதினி சோர்ந்து ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு “ மது ரொம்ப நேரமாகுது நீ மேல போய் கொண்டே இரு நான் முடிஞ்சா வர்றேன்… “ என கூற நான் மட்டும் மேலேறிச் சென்றேன். மதினி என்னைக் கைவிட்ட நிலையில் குரங்குகள் என்னுடன் தொடரந்து பயணித்தன. உள்ளுக்குள்ள கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது ஆனாலும் திக்கற்றவனுக்கு தெய்வம் தான் துணை என்பது போல் ஆஞ்சநேயரை மனதில் நினைத்துக் கொண்டு குரங்குகளுடன் பயணித்தேன். சிறிது தூரம் சென்ற பிறகு “ மைனி தர்காவை பார்த்துட்டேன்… பக்கமாத்தான் இருக்கு, நீங்களும் வாங்க “ என்று உரத்து கூப்பிட்டேன். மதினியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை… அருகில் இருந்த பெண் “ அக்கா நீங்க ரொம்ப மேல ஏறி வந்துட்டீங்க இங்கிருந்து கூப்பிட்டா கேட்காது , நீங்க ஏறுங்க அக்கா” என்றாள். நானும் மேலேற தர்காவை கண்டடைந்து விட்டேன் என்று நினைத்த போது அந்த கட்டிடம் பூட்டப் பட்டிருந்தது. அங்கிருந்த சிறுவன் ஒருவன் “ அக்கா மேல பாருங்க அதுதான் தர்கா இது வெறும் கட்டிடம்தான்…. ம்.ம்…. மேல ஏறுங்க “ என்றான். நான் மீண்டும் ஏறத்தொடங்கினேன்.. மூச்சு வாங்கியது… சிறிது என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு மீண்டும் எற ஆரம்பித்து தர்காவை சென்றடைந்தேன் . அங்கு இஸ்லாமியர்கள் பலர் குழுமியிருந்தார்கள். நான் அவர்களை வெறுமனே பார்த்து விட்டு தர்காவிற்கு வெளியில் உள்ள ஹஜ்ரத் சிக்கந்தர் சுல்தான் பாதுஷா அவுலியா அவர்களின் கல்லறைக்கு அருகில் சில நொடிகள் நின்றிருந்தேன்.
மலை உச்சியில் சில நொடிகளில் கண்டடைந்த பரவசநிலையை என்னுள் நான் நிரப்பிக் கொண்டிருந்தேன். அச்சமயம் காற்றில் எழுந்து வந்த ஒலி கீதையின் வரிகளை நினைவூட்டியது
அவ்யக்தோ க்ஷர இத்யுக்தஸ் தம் அஹு பரமாம் கதிம் |
யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம ||
(எது தோற்றமற்றதோ. எது அழிவற்றதோ எது பரமகதியாக அறியப்படுகிறதோ அந்த இடத்தை அடைந்தவன் திரும்பி வருவதில்லையோ அதுவே உன்னத இருப்பிடம். )
இவ்வாறான உன்னத நிலையை அடைந்த அனைத்து ஞானாசிரியர்களையும் அந்த நொடிகளில் நினைத்துக் கொண்டிருந்தேன். கீழே காத்திருக்கும் மதினியின் நினைவு எழ கீழிறங்குவதற்கு ஆயத்தமானேன்.
அந்நேரத்தில் மதினி கூப்பிடும் குரல் கேட்டு கீழே எட்டிப் பார்க்க முதலில் கண்ட கட்டிடம் அருகே நின்று கொண்டிருந்தார்கள். நான் அவரை மேலே கூப்பிட மதினி மறுக்க நான் கீழே இறங்கத் தொடங்கினேன். மேலேறிக் கொண்டிருக்கும் போது கீழிறங்குவது எளிதாக இருக்கும் அதிக நேரம் பிடிக்காது என்று நினைத்திருந்தோம் . ஆனால் முழு கவனமும் கீழே பார்த்துக் கொண்டே செல்வது போலாயிற்று. சிறிது கவனம் குறைந்தாலும் கால் இடறியது. சிறிது நேரத்திலேயே மதினி கீழேயே பார்த்துக் கொண்டு வருவது தலை சுற்றுகிறது போல் இருப்பதாக கூறினார் . இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு இறங்க ஆரம்பித்தோம். பாதி தூரம் கடந்த நிலையில் எனது கண்களும், கால்களும் ஒத்திசைவை இழக்க இடையிடேயே தடுமாற ஆரம்பித்தேன். வழிப் பயணி ஒருவர் எங்களை உற்சாகப்படுத்தி மேலே ஏற வைத்த அம்மா தடுமாறி விழுந்து தலையில் அடிபட்டதாக சொன்னார் . எங்களிருவருக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது. அருணா மதினியிடம் இருந்து தொடர்ந்து ஃபோன் வந்த வண்ணம் இருந்தது. நான் ஷீலா மதினியிடம் “ மதினி நம்மள நல்லா திட்டிட்டு இருப்பாங்க“என்றேன். அதற்கு ஷீலா மதினி “மலை ஏறலனா நான் நல்லா திட்டிட்டு இருந்திருப்பேன்” என்றார். “நாம மலை ஏறுவதற்குத்தானே பிளான் போட்டிருந்தோம். இப்ப மலை ஏறியாச்சு அவ்ளோதான்… “ என்றார். கீழே இறங்க இறங்க இருவரும் மிகவும் சோர்ந்து விட்டோம். ஆனாலும் பாதுகாப்பாக வந்து சேர்ந்தோம். ஒவ்வொரு பயணத்திலும் சிறு சாகசத்தனம் இருக்கனும் என்பது எங்கள் இருவரின் விருப்பமும் கூட அது நிறைவேறிய திருப்தியில் பயணம் மகிழ்ச்சியாக நிறைவுற்றது. அருணா மதினியின் முகம் வாடி இருந்தது… நாங்கள் இருவரும் தூங்கி எழுந்தா சரி ஆகிடுவாங்க என்று மனதை தேற்றிக் கொண்டு அனைவரும் வீடு வந்து சேர்ந்தோம். வீட்டிற்கு வந்து நடந்த கதையெல்லாம் பொன்ராஜிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்
“தீர்த்தங்காரரை பார்க்கப் போய்ட்டு சூஃபி ஞானியை பார்த்துட்டு வந்துட்டீங்க.. “ என்று கூற இருவரும் ஒரு சேர சிரித்துக் கொண்டிருந்தோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக