கே.சச்சிதானந்தன் கவிதைகள்

எனக்கு கவிதை வாசிப்பு என்பது என்னவோ அவ்வளவு எளிதாக வசப்படுவதில்லை. கவிதையை வாசிக்கும் பொழுதெல்லாம் என்னுடைய வாசிப்பு போதாமையும், கூர்ந்த அவதானிப்பின்மையும் உணர்ந்து குற்ற உணர்விற்கே ஆளாகி விடுவதுண்டு. ஆனாலும் அவ்வப்பொழுது கவிதைகளை வாசிப்பதுண்டு.

 இன்று விஷ்ணுபுர சிறப்பு விருந்தினராக  கவிஞர் கே. சச்சிதானந்தன் அவர்களின் அறிவிப்பை தளத்தில் கண்டு அவருடைய கவிதைகளை வாசித்து பார்க்கலாம் என சொல்வனம் இனணயதளத்தில் உள்ள இவரின் சில கவிதைகளை வாசித்தேன். முதல் வாசிப்பிலேயே இவருடைய கவிதை எனக்கு வசப்பட்டு விட்டதாக உணர்ந்தேன். இவருடைய கவிதைகள் நேரடியாகவே என் இதயத்தில் என்பதை விட மூளையில் ஒரு வலியும் இனிமையும் என   தீண்டிச் தீண்டிச் சென்றன.

மறந்து வைத்த பொருட்கள்

ஒரு மின்னல்வெட்டில்
என் வாழ்வில் மறந்து வைத்த
அனைத்துப் பொருட்களையும்
நினைவுகூர்கிறேன்
பளபளப்பான பத்து கோலிகள்
மாமரத்தடியில்
காய்ந்த இலைகளடியில் மறந்தவை,
மழை வரத்தவறிய ஒரு நாளில்
அபுவின் சலூனில் விட்டுவந்த குடை,
கிராமத்துப் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும் வழியில்
முந்திரிமரம் ஏறுகையில்
சட்டைப்பையிலிருந்து தாவிக்குதித்த பேனா
ரீகாவின் ஓட்டலறைத் துணிஅலமாரியில்
தங்கியிருக்கும் ஆகாய நீலச் சட்டை,
கடன்கொடுத்துத் திரும்பிவராத
புத்தகங்களின் நீளப் பட்டியல்
தீர்க்கப்படாத சில கடன்கள்,
அங்கீகரிக்கப்படாத சில காதல்கள்
மறதி மட்டுமே என்னை மறக்காமல் இருந்தது.
காதலில் வீழ்ந்தபோது என் இதயத்தைத் தவறி வைத்தேன்
கவிதை கிறுக்க ஆரம்பித்தபோது உருவகங்களை.
பின்னாளில், குன்றுகளைப் பார்க்கையில்
வானம் அவற்றை வைத்து மறந்துவிட்டதாய் நினைத்தேன்
மேகங்கள் வானவில்களை.
அண்மைக்காலமாய்
நாமிருக்கும் இந்த பூமியும்
கடவுளால் மறந்து வைக்கப்பட்டுவிட்டதோ என
சந்தேகிக்கிறேன்.
ஞாபகம் வரும் வரிசையில் அவர் மீட்டுக்கொள்கிறார்:
காடுகள், நதிகள், நாம்.

இந்த கவிதையில் மறந்து வைத்த பொருட்கள் என மறதியை  பால்ய காலத்தில் தொடங்கி ஒரு பிரபஞ்ச தரிசனத்தை நோக்கி நகர்த்தி இருப்பதை உணர முடியும். மறதியாக சலூனில் விட்டு வந்த குடை என்ற வரிசையில் கடவுளின் மறதியால் விட்டு போன பூமி என்று கூறிச் செல்லும் இடம் அகத்தே  மாபெரும் பயணத்தை நிகழ்த்தி விட்டுச் செல்கிறது. எல்லா நேரங்களிலும் மறந்து விட்டு வந்த பொருட்கள் இழப்பை மட்டும் கொடுப்பதில்லை… நமக்கு அளித்தும் சென்று விடுவதுண்டுதானே!… 

சப்பாத்தி கள்ளி

முட்கள் என் மொழி
இரத்தம் கசியும் தொடுகையால்
ஒவ்வொருவரையும் அழைத்து
நான் இங்கிருக்கிறேன் என்று அறிவிக்கிறேன்.
அவருக்குத் தெரியாது
ஒருகாலத்தில் இம்முட்கள் மலர்களாயிருந்தனவென்று.
ஏமாற்றும் காதலர்கள் எனக்கு வேண்டாம்.
கவிஞர்கள் பாலைவனத்தைப் புறக்கணித்து
தோட்டங்களுக்குத் திரும்பிவிட்டார்கள்.
என் மலர்களைத் தூசாய் மிதிக்கும் ஒட்டகங்களும்
வணிகர்களும். மட்டுமே இங்கு மிஞ்சியிருக்கிறார்கள்
அரியதான ஒவ்வொரு நீர்த்துளிக்கும்
நான் ஒரு முள்ளை விரிக்கிறேன்
வண்ணத்துப்பூச்சிகளை நான் வசியப்படுத்துவதில்லை
என் பெருமையை எந்தப் பறவையும் பாடுவதில்லை
வறட்சிக்கு நான் வளைந்துகொடுப்பதில்லை.
பசுமையின் விளிம்புகளில்
நான் வடிப்பது இன்னொரு வகை அழகு
சந்திர ஒளிக்கு அப்பக்கம்
கனவுகளின் இப்பக்கம்
கூர்மையாய் தைக்கும்
ஓர் இணை மொழி.

இந்தக் கவிதையில் கவிஞர் புறக்கணிப்பின் மொழியை  வலியாக இல்லாமல் இனிமையாக மாற்றிக் கொண்டு செல்லும் இடத்தை அவதானிக்கலாம். புறக்கணிப்பின் மொழியின் கூர்மை இங்கு பூவிலிருந்துதான் முள்ளாக மாறும் தருணத்தை கவனிக்க தவறுவதை சுட்டிச் செல்வதாக உணருகிறேன். பாலையிலும் துளிர்க்கும் ஈரத்தையும், அழகையும் காட்டி புறக்கணிப்பார்களுக்கு தலை வணங்காமல் நிமிர்ந்து நிற்கிறது இந்த சப்பாத்திகள்ளி.

முதிய பெண்கள்

முதிய பெண்கள் மந்திரக்கோலில் பறப்பதில்லை
அச்சுறுத்தும் காடுகளிலிருந்து
புரியாத குறிகளும் சொல்வதில்லை.
அமைதியான மாலைப்பொழுதுகளில் அவர்கள்
புறாக்களைப் பெயர் சொல்லி அழைத்து
சோளக்கதிர்களால் வசீகரித்தபடி
வெற்றுப் பார்க் பெஞ்சுகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
அல்லது, அலைகள் போல் நடுங்கியபடி
அரசு மருத்துவ நிலையங்களின்
முடிவில்லா வரிசைகளில் நின்றிருக்கிறார்கள்
அல்லது மலட்டு மேகங்களைப் போல்
அஞ்சலகங்களில் காத்திருக்கிறார்கள்
என்றோ இறந்துபோன வெளிநாட்டு மகன்களின்
கடிதத்தை எதிர்நோக்கி..
எதையோ மேலே எறிந்து
அது பூமிக்குத் திரும்பி வராததுபோல
ஒரு தொலைந்த நோக்குடன்
தெருக்களில் அலையும்போது
அவர்கள் மழைத்தூறலைப் போலக் கிசுகிசுக்கிறார்கள்.
கடைகளின் திண்ணைகளில்
தங்கள் கனவற்ற உறக்கத்தில்
அவர்கள் டிசம்பர் இரவைப்போல நடுங்குகிறார்கள்.
அவர்களின் அரைக் குருட்டுக் கண்களில்
இன்னும் ஊஞ்சல்கள் இருக்கின்றன
அரைகுறை நினைவுகளில்
லில்லிப் பூக்களும் கிருஸ்துமஸ்களும்.
அவர்களின் சருமத்தின் ஒவ்வொரு சுருக்கத்துக்கும்
ஒரு நாட்டார்கதை இருக்கிறது.
அவர்களின் தாழ்ந்துபோன முலைகளில்
தேவையான பால் இருக்கிறது.
அதை உதாசீனப்படுத்தும்
மூன்று தலைமுறைகளுக்கு ஊட்ட.
விடியல்கள் தாண்டிப்போகின்றன
அவர்களை இருட்டில் விட்டு.
அவர்கள் இறப்பை அஞ்சுவதில்லை
அவர்கள் என்றோ இறந்து போனவர்கள்.
வயதான பெண்மணிகள் ஒருகாலத்தில்
கண்டங்களாய் இருந்தவர்கள்.
அவருள் அடர்ந்த காடுகள் இருந்தன
நதிகள், மலைகள், எரிமலைகள் கூட,
கொந்தளிக்கும் வளைகுடாக்களும்.
பூமி கொதித்திருந்தபோது
அவர்கள் உருகி, குறுகினர்
தம் வரைபடத்தைமட்டும் விட்டு.
அவற்றை மடித்து நீங்கள்
வாய்ப்பாய் வைத்துக்கொள்ளலாம்
யாருக்குத் தெரியும்
நீங்கள் வீடுதிரும்ப அவை வழிகாட்டி உதவலாம்.

இந்த கவிதை ஒரு முறை வாசித்து கடந்து போகவே இயலாத ஒன்று. இக்கவிதையை வாசித்த போது கவிஞர் தன் ஆசானில் ஒருவராக சிந்தை கலங்கிய பாட்டியை குறிப்பிட்டிருந்தது நினைவு வந்தது. என் வாழ்வில் என் வீட்டில்  எனைப் பாதித்த இரு முதிய பெண்கள் என் ஆச்சியும் , என் அத்தையும் வாழ்வின் மீதான சலிப்பையும், ஏமாற்றத்தையும் தகர்த்துக் கொள்ள அவர்களுக்கான நிகர் உலகை படைத்துக் கொண்டவர்கள். இந்தக் கவிதையில் அவர்களைக் காண்கிறேன் …. மலட்டு மேகங்களைப் போல் அஞ்சலகங்களில் காத்திருக்கிறார்கள்…  ஆனால் முதிய பெண்களின் வாழ்வில் இந்த மலட்டு மேகங்கள் போல் கருணையற்றுத்தான் போய்விட்டதா என்ன!...  அவளின் தாழ்ந்து போன முலையில் இன்னும் தேவையான பால் இருக்கிறது என்ற வரி அவர்களின் வாழ்க்கையை அர்த்தப்படுத்திவிட்டுதானே போகிறது என உணர முடிகிறது… அவர்களுக்குள் காடுகளையும், மலைகளையும், நதிகளையும் ஏன் எரிமலைகளையும் புதைத்து வைத்திருக்கும் பேரன்னை என உணர வைக்கும் தரிசனத்தை அளித்துச் சென்றது. இக்கவிதை 
.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பென்சாம்- வாசிப்பனுபவம்

கர்நாடகா பயணம் - 4

மார்க்கெட் நாட்கள்