பறவை பார்த்தல் அனுபவம் - 2

இன்று வழக்கம் போல் நடைபயிற்சி சென்று திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் பறவைகளை பார்த்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். பெரும்பாலும் முன்பே அடையாளம் கண்டடைந்த பறவைகள்தான். மீண்டும் அதன் பெயர்களை நினைவில் மீட்டி சரி பார்த்து கொண்டேன் ... இது வரை நான் பார்த்தில் என்னை கவர்ந்தவை செம்போத்தும், கார் வெண் மீன்கொத்தியும் . நான் பார்த்ததில் பல பறவை இனங்கள் சிறு, பெருங் கூட்டமாகவே இருக்கும். சில பறவை இனங்களை  தனித்தே பார்த்திருக்கிறேன்.  அந்த வகையில் என்னை வெகுவாக கவர்ந்தது செம்போத்து பறவை. ஏனோ அதை நான் பார்த்த போது அப்பறவை ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்திருந்தது போலத் தோன்றியது. சில நேரங்களில் நான் ஒரே ஒரு பறவையை மட்டும் அவதானித்துக் கொண்டு சில நிமிடங்கள் நின்று பார்ப்பதுண்டு... அப்படி சொம்போத்தை கண்ட பொழுது அது எவ்வித அசைவுமின்றி அமர்ந்திருந்தது எனக்குள் ஒரு அமைதியை கொண்டு வர சட்டென எழுந்து சிறகு விரித்து பறந்த போது அத்தனை அழகு...! கருநிறமும், உறைந்த குருதி நிறமும் (கபில நிறம்)கொண்ட தன் சிறகை விரித்தெழுந்த போது அனலென காட்சி அளித்தது. அது கொண்ட மௌனமா ? இல்லை அந்நிறமா? எது எனக்கு அனலென காட்சியாகியது என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வேன். இன்று மீண்டும் அதை மிக அருகில் காண நேர்ந்தது. அதன் சிவந்த கண்கள் அந்த அனலை நினைவூட்டியது. 

கூட்டமாக பார்த்த பறவை இனத்தில் என்னை ஈர்த்தது பவளக்கால் உள்ளான். இது கருப்பு நிற இறகும் , வெள்ளை நிற உடலும் , நீண்ட இளஞ்சிவப்பு நிற கால்களும் கூரான ஊசி போன்ற நீண்ட கருமையான அலகும் கொண்டது. இப்பறவைகளை பெரும்பாலும் நீருக்குள்ளேயே பார்த்திருக்கிறேன். அதன் நீண்ட காலினை தூக்கி தூக்கி வைத்து நடக்கையில் ஃபேஷன் ஷோவில் அழகிய நங்கையர்கள் நடந்து வருவது போலத் தோன்றும். இதன் நிறச் சேர்க்கையும், நடை அழகுமே என்னை ஈர்த்தது.
அடுத்ததாக  கருப்பு வெள்ளையுமாக நான் காணும் பொழுதெல்லாம் பெரும்பாலும் சிறகடித்துக் கொண்டே இருக்கும் கார்வெண் மீன்கொத்தி பறவை. நான் நடக்கும் பாதையில் 3 வகையான கருப்பு வெள்ளை சிறு பறவைகளை அதாவது குருவி அளவில் பார்க்க முடியும், கூர்ந்து அவதானித்தால் மட்டுமே அதனை சரியாக இனம் காண முடியும் .அந்த நிலையில் ஒரு நாள் மின்கம்பத்தில் சில நொடிகள் கார் வெள்ளை மீன் கொத்தி அமர்ந்திருப்பதை பார்த்து அதன் சிறிய கொண்டையையும் அதன் கூரிய நீண்ட அலகினையும் கொண்டு அடையாளம் கண்டு கொண்டேன். இன்று நீர்நிலைகளை சுற்றி சுற்றி ஒரு வட்டமாக சிறகடித்து  கொண்டிருப்பதை பார்த்து நின்று கவனிக்க ஆரம்பித்தேன் . வைகை ஆற்றில் ஆங்காங்கே தேங்கியிருக்கும் ஒரு குட்டையை சுற்றி சுற்றி பறந்து ஒரு சில நிமிடங்கள் அமரவும் பின்பு பறக்கவுமாக இருந்தது. சில நொடிகள் அப்படியே அந்தரத்தில் ஓரிடத்தில் நிலையாக சிறகடித்து கொண்டே குட்டையில் மீன்களை நோட்டமிடவும் செய்தது.... மீன் அகப்படுகையில் ஒரு அசாதரண வேகத்தில் தலை குப்புற நீருக்குள் விழ தண்ணீர் தெறிக்க மீனை கல்விக் கொண்டு மீண்டும் பறந்து வந்து அமர என அற்புதமான காட்சியை காண நேர்ந்தது.

ஒவ்வொரு நாளும் இந்த ஒரு மணி நேரம் நான் இயற்கை எனும் பெருவெளியில் அதன் இயக்கங்களை கண்டு சிலிர்த்து, வியந்து, மகிழ்ந்து களி கொண்டு வீடு திரும்புகிறேன் ... அந்த இனிமை நாள் முழுவதும் அன்றாடம் எனும் சலிப்பிலிருந்து மீட்டெடுக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாசித்த நூல்களின் பட்டியல் - 2025

"அப்பா"- சிறுகதை

கர்நாடகா பயணம் - 4