அசோகமித்ரன் சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம்

எனக்கு தீவிர இலக்கியம் அறிமுகம் ஆன போது நான் வாசிக்க தொடங்கியது சிறுகதைகளில் இருந்துதான். அதுவும் ரஷ்ய படைப்பாளிகளின் சிறுகதைகளை பெரும்பாலும் வாசித்துக் கொண்டிருந்தேன். அதிலும் செகாவ் கதைகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கதைகளாக உணர்ந்தேன் பின் புதுமைப்பித்தன், எஸ்ரா , ஜெயமோகன் என வாசிப்பு தமிழிலக்கியத்தை நோக்கி திரும்பியது. எஸ்ராவின் கதைகள் எனக்கு மிகவும் அணுக்கமாக இருப்பதை உணர்ந்தேன். அப்பொழுதெல்லாம் புதுமைப்பித்தன், ஜெயமோகன், லா.சா.ரா. மெளனி இவர்களின் படைப்புகளை புரிந்தும் புரியாமலும் வாசித்துக் கொண்டிருந்தேன். பின்னாட்களில் சிறுகதைகள் விவாவதக் குழுவில் பங்கு கொள்ள தொடங்கிய பிறகு சிறுகதை வாசிப்பில் உள்ள நுட்பங்களை அறியத் தொடங்கி என் வாசிப்பை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது. ஜெயமோகன் மற்றும் எஸ்.ரா வின் சிறுகதை தொகுப்புகளை மட்டுமே அதிகமாக வாசித்திருக்கிறேன். 2024 இறுதியில் சுரேஷ் பிரதீப் முன்னெடுப்பில் அசோமித்திரனின் சிறுகதை தொகுப்பை வாசிக்க தொடங்கி உள்ளேன். ... இது வரை 110 கதைகள் வாசிப்பில் தொடர அசோகமித்ரனை தொகுத்துக் கொள்ள ஒரு முயற்சியாக இந்த கட்டுரை ...

யதார்த்தங்களின் வழியாக வாழ்வின்  கேள்விகளை எழுப்பிக் கொண்டும், உணர்வுப் பூர்வமான தருணங்களை மட்டும் டார்ச் அடித்து காண்பிப்பதை அ.மி கதைகள் செய்வதில்லை.... 110 கதைகளை வாசித்து திரும்பிப் பார்க்கும் போது வாழ்வின் அபத்தங்களை, முகத்தில் அறையும் உண்மைகளையும் பகடி வழியாகவும்  சில நேரங்களில் ஒரு விதமான நக்கல் தோரணையிலும் சொல்லி விட்டுச் செல்கிறார். மேலும் அவர் வாழ்வின் சொந்த அனுபவங்களை சிறுகதை மூலமாகவே எவ்வளவு விரித்து எடுத்துச் செல்கிறார் என்பதை சொல்லும் விதமாக அமைந்த சினிமா கதைகள், போரின் தாக்கம் பெற்ற சமூகத்தை சொல்லும் கதைகள் மேலும் அவரின் சுய தத்துவம், ஆன்மீகம் தேடலை யும்  சொல்லிச் செல்லும் கதைகள் என பிரமிக்க வைக்கிறார் .... வாழ்வின் சிறு சிறு தருணங்கள் சொல்லிச் சென்றே பல பல வாழ்க்கையை வாழ்ந்து விட்ட அனுபவத்தை  வாசகனுக்கு கடத்தி விட்டதாக எண்ணுகிறேன்.... ஆந்திரா, தமிழ்நாட்டு குக்கிராம வாழ்க்கையில் தொடங்கி சென்னை, செகந்திராபாத், அமெரிக்கா, என கதைக்களங்களை விரித்தெடுத்து பல தரப்பட்ட வாழ்வியல் அனுபவங்களை கொடுத்திருக்கிறார்.... மாஸ்டர் , இலக்கிய முன்னோடி என ஏன்  என்பதை புரிந்து கொள்ள முடியுது....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பென்சாம்- வாசிப்பனுபவம்

கர்நாடகா பயணம் - 4

மார்க்கெட் நாட்கள்