பறவை பார்த்தல் - ஒரு அனுபவம்

நான்  வைகை ஆற்றின் பக்கவாட்டில் அமைந்துள்ள ஒரு மேம்பாலம் வழியாகத்தான் நடை பயிற்சி செல்வேன். அங்கு நிறைய பறவை இனங்களை காண முடியும். நான்கு வருடங்களாக வெறுமனே பார்த்து கொண்டே செல்வேன். 10 நாட்களுக்கு முன்பு விஜய பாரதி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பொங்கல் பறவை கணக்கெடுப்பில் விருப்பம் இருந்தால் இணையலாம் என... நானும் இணைகிறேன் எனச் சொல்லி e bird. செயலியை தரவிறக்கம் செய்து 2 நாட்கள் பறவை பார்த்தலுக்காக செல்ல ஆரம்பித்தேன்.... முதல் நாளே வியப்பாக இருந்தது. கூர்ந்து கவனிக்கும் போதே பறவைகளுக்கு இடையேயான சிறு சிறு நிறம் , அலகு, சிறகு, கால் என பல வேறுபாடு களை அறிய நேர்ந்தது. கூட்டம் கூட்டமாக திரியும் ஒரு இனத்திற்கு நடுவே தனித்து வேற்றினப் பறவையைக் காணும் போது சட்டென மனம் எச்சரிக்கை அடைந்து அதன் அடையாளம் கண்டடைய பறவை கையேட்டினில் தேடி அதன்  பெயரை அறிந்த பின்பு ஒரு பரவச நிலையை அடைவேன். என்னிடம் தற்சமயம் பைனாகுலர் இல்லை என்பதால் வெறும் கண்களால் கண்டு அடையாளம் காண்பது சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. இன்று பறவை பார்த்தலுக்காக இல்லாமல் வெறுமனே நடைபயிற்சிக்கு தான் சென்றேன். பனிக்காலம் என்பதால் மெல்லிருட்டான சாலையில் மனம் தன்னிச்சையாக பறவைகளின் ஓசையை கேட்க தொடங்கியது. 20 நிமிடங்களில் 6 வகையான பறவை ஒலிகளை கவனிக்க நேர்ந்தது. பின் விடியத் தொடங்க வெளிச்சத்தில் ஏதேனும் புதிய இனம் அகப்படுகிறதா என்று பார்த்துக் கொண்டே நடக்கத் தொடங்கினேன். நான்கு புதிய இனங்களை பார்த்தாலும் ஒன்றை மட்டுமே உறுதியாக அடையாளம் கண்டடைய முடிந்ததால்  அதனை செயலியில் பதிவு செய்து கொண்டேன் . அதில் சந்தேகத்திற்கு உட்பட்ட ஒரு பறவை தகவியலான் இந்த பறவையை பற்றிய தகவலை கூகிளில் தேடிய பொழுது அது அசாம் பகுதியிலிருந்து மதுரைக்கு வலசை வரும் என தகவலை தெரிந்து மகிழ்ச்சியாக இருந்தது . இதன் வலசை அதிகமாகும் பொழுது மழைப்பொழிவும் அதிகமாக இருக்கும் எனவும் அறிந்து கொண்டேன். ஆனாலும் அதன் உடல் நிறம் எனக்கு சரியாக காணக் கிடைக்காததால் செயலியில் பதிவு செய்யவில்லை. இது போல் ஒவ்வொரு பறவை இனத்தின் தகவலை தெரிந்து கொள்ளும் போது  குழந்தை மனம் கொள்ளும் உவகையை    அடைய முடிகிறது. ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய நடையும், பறவை பார்த்தலும் ஒன்றரை மணி நேரம் அமைதியான, ஆற்றல் மிக்க மன நிலை நாள் முழுவதும் புத்துணர்வுடன் திகழச் செய்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பென்சாம்- வாசிப்பனுபவம்

கர்நாடகா பயணம் - 4

மார்க்கெட் நாட்கள்