பறவை பார்த்தல் அனுபவம் - 3
பறவை பார்த்தல் அனுபவம்
நேற்று சுந்தரம் பார்க்கிற்கு பறவை பார்த்தலுக்காக செல்லலாம் என காலை நடை பயிற்சி போன போது ஒரு எண்ணம் வந்தது. சுந்தரம் பார்க் மதுரை வண்டியூர் கண்மாய் கரையோரம் அமைந்த பூங்கா. என் பால்ய காலத்தில் அங்கு படகு சவாரி சென்றிருக்கிறேன். சமீபமாக நடைபயிற்சி செல்லும் வழக்கம் மிகவும் குறைந்துள்ளதை எண்ணி மாலை பூங்காவிற்கு நடந்தே செல்லலாம் எனவும் திட்டமிட்டேன்.
சரியாக 4.30க்கு வீட்டிலிருந்து நடக்க ஆரம்பித்தேன். சுந்தரம் பார்க் என் வீட்டிலிருந்து 3. கி.மீ தொலைவில் உள்ளது. பள்ளி, அலுவலகம் நேரம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் மக்களின் கூட்டத்தை பார்த்துக் கொண்டே 5 மணி வாக்கில் பூங்காவை வந்தடைந்தேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்காவை மேம்படுத்தும் புணரமைப்பு பணி நடந்து கொண்டிருந்தது. பூங்காவிற்குள் நுழையும் இடம் தூசு மண்டலமாக இருந்தது… அதற்குள் புகுந்து சென்ற போது. இயக்குநர் ராதா மோகனின் படம் ஒன்றில் ஹீரோ ஹீரோயினியை கொசு மருந்து புகை நடுவே நடந்து வருவதை தேவலோக தேவதை வருவது போல நினைத்து கொள்வார், அதே போல் நானும் புகை மண்டலத்திற்குள அமைந்துள்ள பூங்காவை “ மைம் மலி பொழில்” என கம்பன் சொல்வது போல கற்பனை பண்ணிக் கொண்டு உள் நுழைந்தேன்.
என்னோட பத்து, பதினொன்று வயதுகளில் இந்த பூங்காவிற்கு வந்துள்ளேன். பிறகு இந்த சாலையை கடக்கும் போதெல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டே கடந்து சென்று விடுவேன் .மக்கள் நடைபயிற்சிக்காக இங்கு வருவதை பார்ப்பதுண்டு.. பறவை பார்த்தல் ஆரம்பித்த பிறகு வேறு வேறு இடங்களுக்கு சென்று பார்க்கனும்னு நினைத்தும் செல்வதில்லை. நேற்று உறுதியாக புறப்பட நினைத்து கிளம்பியதில் புகையும், பல்வேறு புணரமைப்பு பணியின் இரைச்சலூடான பூங்காவினுள் கண்மாயை கண்டவுடன் கண்கள் விரிந்தது. பொதுவாகவே மனிதர்களுக்கு நீர்நிலைகளை பார்த்தாலே பரவசம் தான்.நான் பயணிக்கும் நேரங்களில் பேருந்து, ரயில் . சன்னல்கள் வழியே நீர்நிலையை பார்த்தவுடன் அருகில் இருக்கும் நபரை அழைத்து கை நீட்டி காண்பிக்கும் மனிதர்களை பார்த்துக் கொண்டே இருக்கிறேன் … நானுமே அப்படித்தான். கண்மாய் நோக்கி நடந்து கொண்டே இத்தனை இரைச்சல், மாசு நிறைந்த மக்கள் கூட்டத்தின் நடுவில் பறவைகள் தங்கியிருக்குமா என்ற ஐயத்துடனே கண்மாய் இருக்கும் பகுதியை வந்தடைந்தேன். அங்கு இரும்பு வேலி அமைத்திருந்ததால் பறவைகள் எந்த வித இடையூறுமின்றி அங்கிருந்து கொண்டிருந்ததை புரிந்து கொண்டேன் . ஆனால் புணரமைப்பு பணி முடிந்து இங்கு உல்லாச படகு சவாரி துவங்கும் அப்பொழுதும் இங்கு இப்பறவைகள் தங்கியிருக்க இயலுமா என எண்ணமெழுந்து வந்தது.
இப்படியான மன ஓட்டங்களுக்கு நடுவே நான் பார்த்துக் கொண்டிருக்கும் தூரத்தில் நிறைய நீர்க்காகங்களும், இரு சாம்பல் நாரைகளும் இருந்தன.. நீர்காகங்கள் நீரில் நீந்த பறக்க என்றிருக்க சில நீர்காகங்களும்,நாரைகளும் ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்த நீர்த்தாவரங்கள் மேல் கண்மாயின் அந்தி சாயும் அழகில் லயித்து நின்றிருப்பதாக தோன்றியது. அதுவும் நீர்க்காகங்கள் அதன் சிறகுகளை விரித்து நின்றிருப்பது ‘“ என்னா ஸ்டைலு !” என்று நினைத்துக் கொண்டேன்.
நான் வழக்கமாக நடைபயிற்சி செய்யும் வைகை ஆற்றோரம் நாரைகளை பார்த்திருந்தாலும் இவ்வளவு அருகில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. கடந்த மாதம் தூரன் விழாவிற்கு ஈரோடு சென்றிருந்த போது நண்பர்களுடன் பறவை பார்த்தலுக்காக வெள்ளோடு சென்றிருந்தோம். அங்கும் இருநோக்கியின் வழியாகத்தான் பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் இங்கு வெறும் கண்களின் வழியாகவே மிக அருகில் பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சற்று நகர்நது போன பொழுது இன்னும் அருகில் ஒரு சாம்பல் நாரை காணக் கிடைத்தது. அதை கண்ட முதல் கணம் அதன் கம்பீர அழகில் மனம் மயங்கியது. பின்பு நாரையின் டீடெயிலிங்கை காண ஆரம்பித்தேன். சாம்பல் நாரையை பொருத்த வரை அதன் கண் மேல் புருவம் போல் அமைந்திருக்கும் கருமையான நிறத்தின் அழகு வசீகரிக்க கூடியதாக இருக்கும். பின் அதன் நீண்ட கழுத்து, மஞ்சளும் இல்லாத ஆரஞ்சும் இல்லாத ஒரு கலவையான இளம் ஆரஞ்சு நிறமான நீண்ட கூரிய அலகு குச்சி குச்சியாய் நீண்ட கால்கள் என பார்த்துக் கொண்டே இரண்டு மூன்று ஃபோட்டோக்களை அலைபேசியில் கிளிக்கிக் கொண்டேன்.
கிட்டதட்ட 20 நிமிடங்களுக்கும் மேலாக அசையாமல் நின்று கொண்டிருந்தது . அது நின்று கொண்டிருந்த நீர்த்தாவரம் நீரோட்டத்தில் மெல்ல கரையோரமாக நகர்ந்து வந்து கொண்டிருந்தது. எனக்கோ மனம் பரபரத்தது இன்னும் அருகே இன்னும் அருகே காணப் போகிறோம் என … இதற்கிடையில் சிறிது தூரத்தில் வாத்துக்கள் கூட்டமாக நீந்திக்கொண்டிருந்து… கண்கள் அதனை அடையாளமிட துடித்துக் கொண்டிருக்க… நாரையும் கரைக்கு அருகே வந்தது … ! வந்ததும் ,சட்டென எழுந்து பறந்தது. நான் அதை தொடர்ந்து ஃபோட்டோ எடுக்கத் துவங்க வானில் அதன் இணையுடன் இணைந்து பறந்து போனது. நீண்ட நேர மௌனத்தை கலைத்து பறந்து போக மனம் கிளர்ச்சியடைந்தது . மானுடர்களும் அப்படித்தானே அவர்களும் பறக்கத் தானே எண்ணுகிறார்கள், ஆனால் அந்த பறத்தலுக்கு முன் நீண்ட தவம் தேவைப்படுகிறது… மானுடன் என்று மட்டும் குறுக்கி கொள்ளத் தேவையில்லை என்றே தோணுகிறது. இங்கிருக்கும் அத்தனை உயிரின்ங்களும் அப்படித்தானே என மனமெழுந்தது. பட்டுப்புழு தன்னைச் சுற்றி பொன்னிழைகளால் நெய்து சிறையிட்டு கொள்வதும் அதனை கிழித்து பட்டாம்பூச்சியாய் பறப்பதற்குதானே. . .! என்று எண்ணுகையில் மனசாட்சி “ரொம்ப பொங்காத அடங்கிட்டு போய் வேலையைப் பார்”! என்றது.
எனக்கு அதன் பாலினம் என்னவென்று தெரியாது எனினும் மனதிற்குள் “ ஓ அவரோட கேர்ள் ஃப்ரண்ட் சிக்னல் கொடுக்க பறந்துட்டார் போல” என நினைத்து சிரித்துக் கொண்டேன்.
இப்போ எந்த வித தடங்கலுமின்றி வாத்துக் கூட்டத்தை காண ஆரம்பித்தேன். இது வரை சில வாத்துக்களை பார்த்திருந்தாலும் தூரத்தில் இருந்து பார்ப்பதால் அதன் வகையினத்தை அடையாளம் கண்டு கொண்டதில்லை. வெள்ளோட்டில் நண்பர் விஜய பாரதி புள்ளி மூக்கு வாத்து மற்றும் நீலத் தாழைக் கோழி வகையினத்தை அடையாளம் காண்பித்து கொடுத்தார். பிறகு அன்பரசி மற்றும் மதன் மற்ற வாத்து , கோழி இனங்களை பற்றி நிறைய விளக்கங்கள் கொடுத்தனர்.
இங்கு பார்த்துக் கொண்டிருந்த வாத்துக்கள் முழுமையான கருமை நிறத்தில் இருந்தது… மற்றும் சில சிறிய வாத்துக்களின் தலை மற்றும் கழுத்து அளவுதான் தெரிந்தது. அவைகள் கரைகள் நோக்கி வரும் வரை காத்திருந்தேன். சிறிய அளவிலான வாத்து மூழ்கி மூழ்கி எழுந்த வண்ணம் இருந்தது. முக்குளிப்பான் வகையாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். அதன் நிறம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அது மூழ்கி மூழ்கி வெளிவரும் காட்சியை ரசித்த வண்ணம் நின்று கொண்டிருந்தேன்..
நீண்ட காத்திருப்பிற்கு பின் மூன்று கருமை நிற வாத்துக்கள் கரை நோக்கி வர அதன் வெண்மை நிற அலகு பளீரென தெரிந்தது. ஆஹா யுரேசியன் கூட் (நாமக் கோழி) என கண்டு கொண்டேன் . ஒவ்வொரு பறவை இனத்தையும் முதன் முதலில் அடையாளமிடும் கணங்கள் வெற்றிக் களிப்பிலாழ்த்தும். அதற்கான காத்திருப்பு இனிய தருணங்கள். நாமக்கோழி தலையை ஆட்டி ஆட்டி மிதந்து வரும் காட்சி கண்களை விட்டு அகல மறுக்கிறது இன்னும் . காத்திருக்கும் வேளையில் பல முறை கரை நோக்கி வந்து பிறகு சட்டென யு டெர்ன் எடுத்து திரும்பி போய் ஏமாற்றத்தை அளித்தது. ஒரு முறை சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் நாமக்கோழி நீரின் மேற்பரப்பில் கால்கள் ஓட சிறகுகளை படபடத்து விரைந்து பறந்து வந்து அப்படியே மிதக்கும் லாவகம் என்னையும் அறியாமல் வாய் பிளக்க வைத்தது, பின் சட்டென நினைவு மீண்டு என் கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்க்க ஒரு மணி நேரம் ஆகியிருந்தது.. அந்தி அணையத் தொடங்கி இருந்தததையும் கவனித்து வானத்தை அண்ணாந்து பார்த்தேன் . எட்டு கிளிகள் கூடணைய பறந்து கொண்டிருந்தது நானும் வீட்டிற்கு புறப்பட்டேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக