முதற்கனல் (வெண்முரசு)வாசிப்பனுபவம்

 பிரபஞ்சம் உருவாக்கத்திற்னான முதற் கனல் தோன்றியதில் நாவல் தொடங்கி  நிகழவிருக்கும் பாரதப் போருக்கான முதற்கனல் எப்படி நிகழ்ந்தேறியது என சொல்லவிருக்கும் நாவலாக என நான் அவதானித்துக் கொண்டேன்.


மானசா தேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு தன் குலம் வழித்தோன்றல் கதையை கூறி மேலும் நாகர் குலத்தினை காக்கும் பொருட்டு மகனை அஸ்தினாபுரிக்கு பயணம் மேற்கொள்ளச் செய்கிறாள் . அஸ்தினாபுரி நிலத்திருந்து பாரதவர்ஷத்தின் கதை ஆரம்பிக்கிறது .


சந்தனு சத்யவதி இணையர்கள் கதை ஆரம்பிக்கும் போதே நிமித்திகன் "தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது " என்கிறான்.


அவர்களுக்கு பிறக்கும் மகன்கள் சித்ராங்கதன் மற்றும் விசித்திர வீரியன். சித்ராங்கதன் அழகன். தன் இச்சையை தனக்குள்ளேயே நிகழ்த்திக் கொள்வதிலே நிறைவு கொள்பவன். அதனாலேயே நாட்டை ஆளக்கூடிய வல்லமை இருந்தும் அலையடிக்கும் மனதுடனே இருந்தான். திருமணம் ஆகியும் அந்தப்புரத்திற்குள் செல்லாதவன். வேட்டை விலங்கை அடைந்தே தீரும் நோக்குடன் கானகம் புகுந்த போது அங்கிருக்கும் சுனை ஒன்றில் வசிக்கும் சித்ராங்கதன் எனும் கந்தர்வனால் இழுக்கப்பட்டு விடுகிறான்


விசித்திரவீரியன் பிறவி நோயாளியாக இருக்கிறான். மருத்துவர்களின் உதவியாலேயே அவன் உடலில் இச்சை எனும் நெருப்பு  காற்றிலாடும் சுடர் போல அல்லாடிக் கொண்டு இருக்கிறது. சத்தியவதி சித்ராங்கதனின் மறைவிற்கு பின் விசித்திரவீரியனுக்கு மணமுடிக்கும் பொருட்டு பீஷ்மரின் உதவியை நாடுகிறாள். சத்யவதி சத்ரிய நெறிகளை கொண்டே அஸ்தினாபுரி ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ள அனைவரையும் ஆளும் திறன் கொண்டவளாக இருக்கிறாள். சுயநலமிக்கவள் என்று யோசித்தாலும் கூட  அவள் அஸ்தினாபுரியின் பேரன்னையாகவே திகழ்கிறாள். பீஷ்மர் தன் பிறப்பிலிருந்தே நெறிகளாலும், வாக்குகளிலாலும் சிறையுண்டவராகவே இருக்கிறார்.


பீஷ்மர் காசி மன்னனின் இளவரசிகளை ராட்சஸ முறைப்படி கவர்ந்து வருகையில் அம்பிகை மட்டும் தான் காதலை சொல்லி சால்வ மன்னனை தேடி பயணிக்கிறாள். சால்வனோ புறக்கணிக்க, காசிக்கு சென்றால் அவர்களும் தன் நாட்டின் மக்கள் நலன் கருதும் அரசனாக அம்பையை ஏற்கவில்லை. ... நெறிகளால் உணர்வுகள் மிதிபடும் அம்பையின் பரிதாபகரமான நிலையாகவே இருந்தது. இந்த நெருக்கடியில்  அவளின் மனமோ பீஷ்மரைத்தான் உண்மையாக காதல் கொண்டதாக நம்ப வைக்கிறது. மீண்டும்   பீஷ்மரை தேடி வருகிறாள் தன் காதலுக்காக இறைஞ்சுகிறாள். பீஷ்மரும் தன் தந்தைக்கு செய்து கொடுத்த வாக்கினால் நைஷ்டிக பிரம்மசாரி எனும் நெறியினை மீறாதவன் என்றுரைக்கிறார். ஒரு பெண் தன் காதலுக்காக இறைஞ்சியும் பீஷ்மர் மறுத்தும்... அம்பையை நோக்கி தன்னுணர்வில்லாமல் முறுவலித்ததை கண்டு அம்பை தீச்சொல்லிட்டு செல்கிறார்.


இங்கு தான் எனக்கு பாரதப் போரின் முதற்கனல் என  அம்பையின் தீச்சொல் எனத் தோன்றியது.


ஆனால் இங்கு தீச்சொல் என்பது எப்படி பாரதவர்ஷத்தையும் அதில் கிளைத்து வரும் குலத் தோன்றலின் ஆளுமைகளையும் வளர்த்து வருகிறது என்பதை ஆசிரியர் நாவல் முழுவதும் காட்டிச் செல்கிறார்.


என்னை இங்கு உற்று நோக்கச் செய்த இடம் என்பது அம்பையின் தீச்சொல் பீஷ்மரின் மேல் விழுந்தது நியாயம்தானா? என...! கேள்வி எழும்பியது... அதையும் பீஷ்மருக்கான கடமைகள், நெறிகள், வாக்குகள் அதனால் அவர் பல இக்கட்டுகளில் சிக்கி கொள்வதும், அதனை சரி செய்ய மேலும் பிழையாகி விடுவதான வாழ்க்கையில் சிக்குண்டவர். அதனாலயே பழி கொள்கிறார். ஆனாலும் அந்த நெறிகளே அவருக்கு அரணாக காக்கிறது. அதனாலேயே

அம்பையின்  தீச்சொல் வலிமையான பீஷ்மரை உடனே ஆட்கொள்ளவில்லை. அதே நேரத்தில் தன் பெண்மை அவமதிக்கப்பட்டதாக எண்ணிய அம்பை சிகண்டியாக உருவெடுக்கிறாள். கவனிக்க ஆதியில்  இருளில் ஏற்பட்ட  அசைவே (பிறழ்வு)பிரபஞ்ச தோற்றத்திற்கு வழி வகுத்தது. அம்பையின் பெண்மையில் ஏற்பட்ட அவமதிப்பு அவள் வளர்க்கும் சிகண்டினி என்ற பெண் குழந்தை பிறழ்ந்து சிகண்டியாக உருவெடுக்கிறான். பீஷ்மர் போன்ற வலிமையான ஆளுமையை அழிக்க இந்த பிறழ்வு மிக முக்கியம் என்றே தோன்றியது. 

சிகண்டியின் பயணம் பீஷ்மரின் ஆடிபிம்பம் என உணரச் செய்தலும். பீஷ்மரின் தனிமை தன்னை யயாதியின் ஆடி பிம்பம் என உணரச் செய்தலும் கதையின் போக்கில் கதாபாத்திரங்களின் பரிணாமத்தை பார்க்க முடிகிறது.


விசித்திரவீரியன் அம்பிகை , அம்பாலிகையை மண முடித்து  இறந்த தருவாயில் மீண்டும் சத்யவதி ஆணையிட பீஷ்மர் வியாசரை அழைத்து வருகிறார். பராசரருக்கும், மச்சகந்தி (சத்யவதி )க்கும் பிறந்த வியாசர் அம்பிகை, அம்பாலிகை, சேடி சிவை இவர்களுடன் கூடி மீண்டும் வனம் திரும்புகிறார். மூவருக்கும் திருதா, பாண்டு, விதுரன் பிறக்கிறார்கள். 


பீஷ்மரை வெல்ல பயிற்சி பெற அக்னிவேசரிடம் செல்லும் சிக்கண்டி பொறுப்புகளின் அச்சத்தோடு பயிலும் பாஞ்சால இளவரசன் யக்ஞசேனனையும், விதையை இலக்காக்கி கனவு காணும் பதற்றத்தோடு இருக்கும் துரோணரும் அறிமுகமாகிறார்.


இப்படியாக பாரதவர்ஷத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அவரவர் குணநலன்களுக்கான கிளை கதைகள் மூலம் ஆசிரியர் அறிமுகம் செய்கிறார். கிளை கதைகள் வழியாகவே ஒவ்வொருவரின் ஆழத்தை சென்றடைய முடியுது... செவ்வியலுக்கே உரிய சரி, தவறை தூக்கிப் பிடிக்காமல் கதை போக்கில் ஏற்படும் உணர்வெழுச்சிகளை சமநிலைப்படுத்துவதை உணர முடியுது. 


நாவலில் வரும் நாகம் பல குறியீடுகளாக வருவதை காண முடிகிறது. இச்சையின் வடிவில் தொடங்கி பல குறியீடுகளாக படம் விரிக்கிறது. நாவலின் முடிவில் நாகர்களின் மீது அவர்கள் மூதன்னை கத்ருவின் தீச்சொல் இருக்கிறது" என்கிறார்கள்... அன்னைகளின் தீச்சொல்லினாலே இங்கு அனைத்து ஆடலும் ... இந்த ஆடலே புவியை சமநிலையில் இயக்குகிறது எனலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாசித்த நூல்களின் பட்டியல் - 2025

மார்க்கெட் நாட்கள்

"அப்பா"- சிறுகதை