நாவல் கோட்பாடு - வாசிப்பனுபவம
நண்பர் யதார்த்தன் நான் போன வருடம் வாசித்த நூல் பட்டியல்களைப் பார்த்து விட்டு குறிப்புகள் எடுத்து வாசித்ததை தொகுத்து எழுதுவதையும் செய்யுங்கள் என அறிவுறுத்தினார். நானுமே வெ.மு. மறுவாசிப்பில் தொகுத்து எழுதனும் என திட்டமிருந்திருந்தேன். அதன்படி குறிப்புகள எடுக்க தொடங்கியிருந்தேன். மேலும் யதார்த்தன் வாசிப்பை மேம்படுத்தவும் , தொகுத்து எழுதவும் அடிப்படை நூல்கள் வாசிப்பு மிக அவசியம் என ஜெ யின் நாவல் கோட்பாடு மற்றும் எழுதும் கலை புத்தகங்களை அடிக்கடி வாசிப்பதை வழக்கமாக்கி கொள்ளும்படியும் கூறினார். அவர் பரிந்துரையின் படி நீண்ட நாட்களாக எடுத்து வாசிக்க ஆரம்பித்து பிறகு வாசிக்கலாம் என தள்ளிப் போட்டு கொண்டே இருந்த நாவல் கோட்பாடு புத்தகத்தினை கடந்த வாரம் வாசிக்க தொடங்கினேன்.
பத்து கட்டுரைகளுடன் 84 பக்க அளவுகள் கொண்ட புத்தகம் . நூல் எழுதப்பட்ட சூழலையும் , அவசியத்தையும் முன்னுரையில் ஆசிரியர் கூற இலக்கியத்தின் வடிவம் பற்றி ஆராயும் அமைப்பு என்ற கட்டுரையில் தொடங்குகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் நாவல் வடிவத்தை எப்படி அடைந்தது பற்றிய ஒரு நீண்ட விவரிப்பை ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.எது நாவலாகும், அந்த ஆக்கத்தில் அது வாசகனுடன் தொடர்பு கொள்ளும் முறை , தரிசனம், காலம், தடைகள், உணர்ச்சி கதைகள், குறுநாவல், நீள் கதைகள், நாவல் முயற்சிகள், சாத்தியக்கூறுகள் என்ற தலைப்புகளின் வழியாக ஒரு நீண்ட விவாதத்தை எடுத்துச் செல்கிறது இந்நூல்.
நாவல்களின் அமைப்பை முன்னுதரணாமாக சில நாவல்களின் முக்கியமான பகுதிகளை தொட்டெடுத்து விவரிக்கிறார்.. மேலும் போதாமைகளையும் சுட்டி காண்பிக்கிறார். பெரும்பாலும் நாம் நாவல் என நினைத்திருக்கும் நூல்கள் நீண்ட கதைகளாக இருக்கின்றன. ஒரு நாவல் முக்கியமாக வாழ்வின் முழுமையை சித்தரிக்க முயலனும். அழுத்தமில்லாத , சாரத்தை பிரதிபலிக்காத அனுபவம் எதுவும் இலக்கியமாகாது . அது வாழ்க்கையின் சிக்கலையும், பன்முகத் தன்மையையும் காட்டக் கூடிய அளவிற்கு விரிவு கொண்டதாகவும் ஒன்றையொன்று மறுக்கும் கூறுகளையும் அடங்கியது தான் நாவல் என்கிறார். மேலும் நாவலில் விடப்படும் இடைவெளிகள் மிக முக்கியமானதும் நாவலளிக்கும் தரிசனம் அதனை மறுக்கும் கருதுகோளும் இருக்க வேண்டும் என்கிறார்.
வாசகத் தொடர்பை பற்றி பேசும்போது நம் மனித மனம் இயங்குமுறையையும் கூடவே அறிய முடிகிறது பல காரணங்களால் மனித மனம் தான் செலுத்தப்படும் திசைக் கெதிராகத் திரும்பும் தன்மையை கொண்டதுதான். அது போலவே ஒரு கதையின் மையம் ஒரு கருத்தை வலிபுறுத்துவதாக இருக்க அதை மறுக்கும் பொருட்டு ஒரிழை மேலெழுந்து வந்து அவை முரண்பட்டு வளர்ந்து இன்னொரு மையம் உருவாகி வர வேண்டும் என்கிறார். எதையும் வலியுறுத்தி சொல்லப்படுவதாகவோ, ஒற்றைத் தன்மையுடனோ இருத்தல் கூடாது என்கிறார் ஆசிரியர். அந்த மாதிரியான செயல்பாடுகள் வேறு வேறான இலக்கிய வடிவங்களில் எப்படி பயின்று வருகின்றன என்பதையும் விவரிக்கிறார். சிறுகதையோ, கவிதையோ, நாவலோ எந்த வடிவமாகினும் வடிவத்திற்கேற்ப வாசகனுடன் உரையாடும் தன்மை, வாசகனுக்கான இடைவெளி எவ்வாறாக அமைந்திருக்கும் என்பதையும் விளக்குவதாக இருந்தது.
அடுத்ததாக தரிசனம் .நான் இதுவரை என் வாசிப்பில் தரிசனம் என்ற வார்த்தைக்கு சரியாக பொருள் கொண்டிருக்கேனா என்ற ஐயம் இருந்து கொண்டே இருக்கிறது. ஆசிரியர் இந்த சொல்லிற்கான விளக்கத்தை மிக விரிவாகவே பேசியிருக்கிறார். பொதுவாக இலக்கியம் தத்துவத்தின் அடிப்படைகள் உருவாக்கப்பட்டு ஆதாரமானதும் நிரந்தரமானதுமான கேள்விகள் எழுப்பப்பட்டுவிட்ட பிறகு, வாழ்க்கை சார்ந்து சில விடைகளைக் கண்டடைய முயன்றது. அதன்படி காலியங்கள் இயற்றப்பட்ட காலம் முதல் நவீனத்துவ கால கட்டம் வரை மானுட வரலாறு அதன் அடிப்படை கேள்விகளை , மதிப்பீடுகளை அதனதன் சமூக கட்டமைப்பில் நின்று எதிர் கொண்ட விதமாகவோ, தரிசனமாகவோ படைப்புகளில் எப்படி வெளிப்படுத்தியுள்ளது என்று ஆராயும் விதமாக இருந்ததாகவே என் மனதில் பதிந்துள்ளது.
ஒவ்வொரு படைப்புக்கும் காலத்தை கையாள்வது என்பது படைப்பின் நோக்கமும், படைப்பாளியின் வாழ்க்கைப் பார்வையை உருவாகி வருவதாக இருக்கிறது. நாவலின் மையமான தரிசனம் ஒவ்வொரு தருணத்திலும் எல்லையில்லா தன்மையுடன் மோதிய படியே முன்நகர வேண்டியுள்ளது. உதாரணமாக தஸ்தாயெவ்ஸிகியின் படைப்புகளை முன்வைத்து ஆசிரியர் கூறுகிறார். ஒரு நிகழ்வில் கதாபாத்திரத்தின் எண்ணவோட்டங்களை சொல்ல முயலும் போது அந்த எல்லையில்லாத்தன்மையை உணர்ந்ததை நினைவு கூர்ந்து கொண்டேன். அது போல் சம்பவங்களை முன்பின்னாக கூறுதலின் வழியாக காலத்தை சாஸ்வதமாக ஒரு எல்லைக்குள் நிறுத்துவதும், தொன்மங்களை படிமமாக்குவதன் வழியாக பின்னி பினணயும் தன்மையையும் காலத்திற்கு கொடுத்து விடும் மாதிரியாக படைப்புகளில் காலத்தை ஒரு உத்தியாக பயன்பட்டு வருவதை விளக்கியுள்ளார்.
இதுவரை ஒரு முன்மாதிரியாக விளங்கக் கூடிய நாவல் உருவாகி வருவதற்கான உத்திகள் என கருதினால் அதனை கையாள்வதில் உள்ள தடைகளையும், அந்த தடைகளினாலேயே வேறு வடிவங்களாக அதாவது குறுநாவல்களாகவும் , நீள் கதைகளாகவும், உணர்ச்சி கதைகளாகவும் உருமாறி வந்ததைப் பற்றியும் விளக்கி இருக்கிறார் ஆசிரியர். அந்த தடைகளிலிருந்து விலகி மீண்டு முயற்சி செய்து நாவலாக உருவெடுக்க சாத்தியக் கூறுகளையும் கூறி விளக்குகிறார். தடைகள் என்பது படைப்பாளியின் போதாமைகளும் , சமூகச் சூழலும், வாசிப்பு சூழலும் அதன் வடிவத்திற்கும், படைப்பின் முழுமையை அடைவதற்கும் காரணமாகின்றன. ஆனாலும் ஒரு படைப்பாளி ஒரு போதும் அப்பழுக்கற்ற உதாரணம் ஒன்றைத் தனது மொழியில் சாத்தியப்படுத்துவது அவன் உத்தேசமாக இருக்காது என்கிறார் ஆசிரியர். மொழி அதன் முமுமையை அடைய புது புது வடிவங்களை காலந்தோறும் கண்டடைந்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கையுடனேயே இந்தூலை நிறைவு செய்திருப்பதாக என எண்ணுகிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக