நிலவளம் - நட்ஹாம்சன் வாசிப்பனுபவம்
1920 ல் நட்ஹம்சன் (நார்வே )அவர்கள் எழுதிய நோபல் பரிசு பெற்ற நாவல் நிலவளம் (Growth of Soil)
அடர்ந்த காட்டினை திருத்தி நிலத்தினை பண்படுத்தி வேளான்மை செய்து தன் வாழ்க்கையை தொடங்கிய ஒரு மனிதனின் கதை . காட்டாளன் போல் இருக்கும் ஐசக் கிராமம் நகரம் துறந்து காட்டில் தன் வாழ்க்கையை தொடங்கியவனுக்கு உதடு பிளந்த இங்கர் வாழ்க்கைத் துணையாக வர இருவரது உழைப்பினால் பெரிய பண்ணையை உருவாக்குகிறார்கள். பிள்ளைகள் பிறக்கிறார்கள். புதிதாக உருவாகிய பண்ணையை பார்வையிட வந்த அரசாங்க அதிகாரி நிலத்தினை ஐசக்கிற்கே உரிமை கொள்ள வழிநடத்துகிறான். அதிகாரி தற்செயலாக அந்நிலத்தின் கனிம வளத்தை கண்டறிந்து சுரங்கம் உருவாக்கவும் திட்டமிட்டு பின்னாட்களில் சுரங்கம் உருவாகி நாவல் முடிவில் பல்வேறு காரணங்களால் கைவிடப்படுகிறது.
ஐசக்கின் பண்ணையும், கனிம வளமும் அந்நிலத்தை சுற்றி சில பண்ணைகளும், கடைகளும் என உருவாகி வருகிறது.
மையக் கதாபத்திரமான ஐசக் கடுமையான உழைப்பாளியாக இருக்கிறான். தனது வேளாண் வாழ்க்கையிலும் ,உறவுகளிலும் எத்துனை சிக்கல்கள் வந்தாலும் மிகப் பொறுமையாக கையாள்கிறான் . அவனுக்கு மனதில் பல வித சங்கடங்கள் இருந்தாலும் எதனையும் விமர்சிப்பதில்லை மண்ணையும், மனிதர்களையும் அவனால் புரிந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. அவனது உழைப்பே அவனை நேர்மையாக வழிநடத்துகிறது , நிறைவான மனிதனாக உணரச் செய்கிறது.
இங்கர் சமூகம் ஏற்படுத்துகின்ற அழுத்ததினால் உருவாகும் உணர்வுகளை வெளிபடுத்தக்கூடிய வளாக வருகிறாள். ஐசக்கின் உழைப்பினாலும், நேர்மையினாலும் கவரப்பட்டு தன்னை அவனுக்கு ஒப்பு கொடுத்தவள். தன் இரண்டாவது குழந்தை தன்னைப் போல் (உதட்டு பிளவு) இருந்ததால் கொன்று புதைக்க தண்டனைக் காக சிறை சென்று நாகரீக வாழ்க்கை கற்றுக் கொண்டு பண்ணைக்கு திரும்புகிறாள். அந்த நகர வாழ்க்கையின் பாதிப்பு அவ்வப்போது வெளிப்படும் சூழல்களை ஆசிரியர் நுட்பமாக காட்டியிருப்பார். இங்கர் நகர வாழ்க்கை மோகத்தில் அவ்வப்போது அலைக்கழிக்கப்பட்டாலும் மீண்டு வருவாள்.
இந்த இணையர்களைப் போலவே நாவலில் முக்கியமாக கவனிக்க வேண்டியவர்கள் ஆக்சல் மற்றும் பார்பரோ . ஆக்சலும் பண்ணை உரிமையாளன். ஐசக் போல என்று சொல்ல முடியாவிட்டாலும் உழைப்பவன். பொறாமை, பணம் சம்பாதிக்கும் ஆசை கொண்டவன் . அவனுக்கு துணையாக வரும் பார்பரா நகரில் பல வருடங்கள் வேலை செய்து வந்தவள். அழகி பார்பரோ மீது ஆக்செல் காதல் கொள்கிறான். அவள் பிள்ளை பெறும் சமயத்தில் விபத்தில் குழந்தை இறக்க யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு சில நாட்களில் ஆக்சல்லை விட்டுப் பிரிந்தும் போகிறாள். குழந்தையை கொன்றதாக வழக்கு போடப்படுகிறது. அதிலிருந்து மீண்டாலும் தொடர் நகர வாழ்க்கையால் பல்வேறு அலைக் கழிதலுக்கு ஆளாகிறாள். மீண்டும் ஆக்செல்லுடன் இணைகிறாள்.
இங்கரின் குழந்தை இறப்பும், பார்பராவின் குழந்தை இறப்பும் நாவலில் முக்கிய விவாதமாக கையாளப்படுகிறது. இங்கர் தன்னைப் போல் பிறக்கும் பெண்குழந்தை இந்த சமூகத்தில் வாழ்வது மிகக் கொடுமை என்று கருதியே கொல்கிறாள். பெண்ணுக்கு சமூகம் கொடுக்கும் அழுத்தம் வன்முறையில் முடிகிறது. அதே போல் பார்பரா நகரில் வாழும் போதே திருமணம் ஆகாமலே கர்ப்பமுற்று குழந்தையை கொன்றதாகவும் , நகரில் வாழும் பெண்களுக்கு இது சகஜம் என்று கூறுவதும். இளம் பெண்களின் உணர்ச்சி தூண்டல்களுக்கு சமூகம் அளிக்கும் அழுத்தம் அதனால் பதிலளிக்க இயலாமையினால் குழந்தையை பலியிடுவது என வன்முறையிலேயே முடிகிறது. பார்பரோ, ஆக்ஸல் இணையரின் குழந்தை இறப்பில் மர்மம் அதனால் உண்டாகும் வழக்கில் நடந்த விவாதம பெண்களுக்கான சமூக அழுத்தங்களை விசாரணை செய்கிறது.
ஐசக், இங்கரின் இரு மகன்கள் வாழ்க்கையும் நாவலில் முக்கியமான பங்கு வகிக்கிறது. நகர வாழ்க்கையினால் ஈர்க்கப்பட்டு பொறுப்பில்லாத செலவாளியாக, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஐசக்கின் சேமிப்புகளை காலி செய்யும் எல்யூஸ். ஐசக் உடனே உழைத்து உழைப்பின் மேல் நம்பிக்கை கொண்டு எல்லா விதத்திலும் வலிமையாக வளர்ந்து வரும் சில்வர்ட் . சில்வர்ட்டும் அரசாங்க அதிகாரி கெய்ஸலரும் உரையாடும் நாவலின் இறுதிப் பகுதி ஆசிரியரின் சுய மதிப்பீடுகளை வைப்பதாகவே எனக்கு தோன்றியது . மேலும் நாவலில் வரும் சுவாரசியமான கதாபாத்திரமான ஒலைன் அக்காலகட்ட சமூக பண்பாட்டு பிரதிநிதியாக ர் அமைந்துள்ளதாக தோன்றியது.
இயற்கையுடன் இயைந்து வாழும் வாழ்க்கையே சிறந்தது என்ற ஒரு மதிப்பீட்டையும் நவீன வாழ்க்கை முறைகளை பாவம் என்று உணர வைக்கும் அளவுக்கான சித்தரிப்பாகவுமே நாவல் பேசப்படுவதாக எனக்கு தோன்றியது. மற்றபடி மானுட உணர்வுகளை காட்டியிருக்கின்ற விதமும்,கதையோட்டமும் எவ்விடத்திலும் சோர்வுறாமலும், அமைதியான நீரோட்டம் போல சென்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக