தத்துவமும் அறிவியலும்

கடந்த சில மாதங்களாக வேறு வேறு துறை சார்ந்த கட்டுரைகள் வாசிக்க நேர்ந்தது. நாராயண குருவின் ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் (விளக்கம் நித்ய சைத்தன்ய யதி )கார்லோவின் இயற்பியலின் ஏழு சுருக்க குறிப்புகள், வாசித்து முடித்த நிலையில் தற்சமயம் ராமசந்திர குஹா எழுதிய தென்னாப்பிரிக்காவில் காந்தி, பிறகு நன்மாறன் எழுதிய  டார்வின் பற்றிய இணைய தொடர் ஒன்றும் வாசித்து கொண்டிருக்கிறேன். 

முதலிரண்டு கட்டுரைத் தொகுப்பு வாசிப்பில்  அறிவியலும் தத்துவமும் தொடும் புள்ளியை உணர முடிந்தது. கார்லோவின் புதினத்தை தமிழில் மொழி பெயர்த்த சங்கரன் அவர்களுடன் உரையாடவும் வாய்ப்பு அமைந்தது. அந்த உரையாடலை இப்படி தொகுத்து கொள்கிறேன். மானுட மனத்திற்கு காலம் காலமாக  ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கிறது , அந்த பிரக்ஞையை உணர்ந்தவன் தன் அறிதலை அறிவியல், தத்துவம், இலக்கியம் , வரலாறு என்று பல துறைகளின் வாயிலாக ஆய்ந்து விளங்கி கொள்ள முயல்கிறான். அந்த சிந்தனை வழி முறைகளில் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றையொன்று தொட்டுச் சொல்வதை உணர்ந்து நாம்   மேலும்  நம் அறிதலை புரிந்து கொண்டு விரித்து  எடுத்து செல்ல முயலுகிறோம்.ஆனாலும் ஒவ்வொரு துறையின் தேடலும் அதன் அதற்கான தனித்துவமான வழியைக் கொண்டும் இருக்கும் எனவும் புரிந்து கொள்கிறேன். இந்த இடத்தில் எனக்கு ஜெ சொல்வதும் நினைவில் வருகிறது. "இங்கிருப்பது பேருண்மை அதை அறிய நாம் பல்வேறு சாத்தியங்களுடன் முயல்கிறோம் அத்தனை சாத்தியங்களும்  பேருண்மையின் ஒரு பகுதியே. "

அந்த பேருண்மையை அறிய முயன்ற அறிவியலைப் பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம் என்ற ஈர்ப்பின் காரணமாக நண்பர்கள் இணைந்து படித்ததில் குவாண்டம் இயங்கியல், பொதுச் சார்பு கோட்பாடு இவைகளைப் பற்றிய ஒரு துளி புரிதல் கிடைத்ததில் நிறைவு கொண்டேன். கோட்பாடுகளின் வழியாக மிகவும் கறாராகவே அறிவியல் பிரபஞ்சத்தை அணுகுகிறது என்பதும் புரிந்தது. இந்த இயற்பியல் விதிகளின் கீழ்  பிரபஞ்சம் இயங்குகிறதா? பிரபஞ்சம் இயங்குதலின வழியாக இந்த விதிகளை படைத்துக் கொள்கிறதா? என்ற மர்மமும் தொடர்கிறது. ... நம் மானுட மனமும் அப்படித்தான் என்பதை ஆன்மாவிற்கு நூறுபாடல்கள் வழியாக அறிந்தேன்.... "ஆன்மா எனும் மந்திரவாதி" ஒரு மாயத்தை நிகழ்த்திக் கொண்டும். அதனூடகவே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறான். 

அடுத்ததாக வாசித்து கொண்டிருக்கும்  டார்வின், காந்தி என இரு ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு முன்னவர் 18 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் வாழ்ந்து தன் பரிணாமக் கொள்கையை நிறுவியவர் பின்னவர் 18 ஆம் தூற்றாண்டு இறுதி தொடங்கி 19 ன் முதல் பகுதியில் தன் அஹிம்சை கோட்பாட்டை உலகெங்கும் பரவச் செய்தவர்.. இந்த இரு ஆளுமைகளும் வாழ்ந்த  காலகட்ட நிகழ்வுகளுக்கு ஒரு கோடு இழுத்து பார்க்க முயற்சிக்கிறேன்.

ஐம்பது வருட இடைவெளியில் முன்னவர் இனப் பகுப்பாடு தொடங்கும் காலகட்டத்திலும் பின்னவர் இனப்பகுபாட்டின் காரணமாக உரிமைகள் பறிக்கப்படுவதை உணரும் காலகட்டத்திலும் இருக்கிறார்கள். முன்னவர் நாகரீகத்தின் உச்சத்திலிருக்கும் மாநகரிலிருந்து (இலண்டன்) தன் ஆய்விற்காக நாகரீக வாசமே கொள்ளாத ஆப்பிரிக்க நாடுகளை நோக்கி பயணிக்கிறார். காந்தி ஒரு சராசரியான நகரிலிருந்து தன் கல்விக்காக இலண்டன் மாநகரத்திற்கும் , தன் பணியின் நிமித்தமாக ஆங்கிலேய காலணிகளாால் ஆளப்படும் தென்னாப்பிரிக்க நாட்டிற்கும் பயணிக்கிறார். இரு ஆளுமைகளும் ஆன்மீக நாட்டமிக்கவர்களாக இருக்கின்றனர்.. டார்வின் தனது ஆய்வுகளாலும் தன் குடும்பத்தில் நிகழ்ந்த சில கசப்பான நிகழ்வுகளாலும் ஆன்மீகத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கிறார். காந்தியோ எத்துனை சோதனைகள் வந்தாலும் ஆன்மீகத்தையே தன் போராட்டத்திற்கு பலமாக கொள்கிறார். இரு காலகட்டங்களிலும்  ஆன்மீகத்திற்கும், அறிவியலுக்கும் மிகப்பெரிய  போராட்டம் நீடித்து கொண்டு தான் இருந்தது. டார்வின் ஒரு போதும் எந்தவித அரசியல் கொள்கைகளுக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார்.

அறிவியல் வளர்ச்சி உண்டாக்கும் பொருளாதார முன்னேற்றம் மனித குலத்தில் உளவியல் ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை இவ்விரண்டு புத்தகங்களிலும் பார்க்க முடிகிறது. அது மானுட நேயத்தை குலைப்பதாகவே இவ்விரண்டு புத்தகத்திலும் காணக் கிடைக்கிறது. ஆனாலும் இன்னொரு பக்கம் அதன் தேவையும் மானுடர்களின் முரட்டுத்தனமான நம்பிக்கைகளினால் ஏற்படும் அழிவிலிருந்து மீட்கும் பொறுப்பையும் அறிவியல் வைத்திருப்பதாகவும் காட்டப்படுகிறது. இந்த இடத்திலும் தத்துவமும் அறிவியலும் ஒருங்கிணைந்து மனித இனத்திற்கு ஆற்றியிருக்கும் முன்னகர்வுகளையும் கண்கூடாக பார்க்க முடிகிறது.
வரலாறு தோறும் மனிதனின் தேடல் பல பல வழிகளில் சிந்திக்க வைக்கிறது. இங்கிருக்கும் அத்துனை சிந்தனைகளும் ஏதோ ஒரு புள்ளியில் ஒருங்கினைந்து செயல்படும்  என்பதை நினைக்கும் போது ஆசுவாசமாகவே இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாசித்த நூல்களின் பட்டியல் - 2025

"அப்பா"- சிறுகதை

கர்நாடகா பயணம் - 4