ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் டேவிட் போம் உரையாடல் - 1
ஜே. கிருஷ்ணமூர்த்தியுடன் உரையாடும் டேவிட் போம் காணொளியை பார்ப்பதற்கு முன்பாக போம் பற்றி இணையம் வழியாக சில தகவல்களை அறிந்து கொண்டேன். போம் அடிப்படையில் ஒரு இயற்பியலாளர். இவருடைய மேற்கோள் ஒன்று என்னை மிகவும் ஈர்த்தது மேலும் அது பிரம்ம சூத்திரம் நூலில் உள்ள ஒரு சூத்திரத்தை நினைவுபடுத்தியது.
"Everything is related to everything else as an endless dynamic process of unfolding and en folding.
- David Bhom
அனுபத்த ஆதிப்ய
பிரக்ஞா அந்தர பிருஹதக்வத் திருஷ்ட ச தத் உக்தம்
- பிரம்ம சூத்திரம் 3.3.51, 3.3.52
டேவிட் போம் குவாண்டம் கேரட்பாட்டில் முக்கியமான பங்களித்திருக்கிறார். மேலும் நரம்பியல் மற்றும் உளவியல் துறைகளிலும் அவருடைய பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த சிறு அறிமுகத்தைக் கொண்டு காணொளியினை பார்க்கத் துவங்கினேன்.
இந்த உரையாடல் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஓஜாய் என்ற ஊரில் 1980 வருடம் நடைபெற்றது
ஜே. கிருஷ்ணமூர்த்திக்கு 85 வயதும்,
போமிற்கு 63 வயதும் இருக்கலாம். இந்த காணொளியில் அவர்களிருவரும் உரையாடும் புகைபடத்தை பின்புலமாக வைத்து குரல் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. புகைப்படத்தில் போம் நல்ல மெத்தென ஒரு சோபாவில் ஆசுவாசமாக அமர்ந்திருக்க அவர் எதிரில் ஜே.கே சாய்வு நாற்காலியில் சாய்வு பக்கத்தை பக்கவாட்டாக போட்டு நன்கு நிமிர்ந்து தன்னிருகால்களுக்கிடையே கைகளை புதைத்துக் கொண்டு ஒரு சிறுவனைப் போல் அமர்ந்திருக்கிறார்.
உரையாடல் ஆரம்பத்திலேயே ஜே.கே நிறைய கேள்விகளோடு தொடங்குகிறார். ஜே.கே ஒவ்வொரு கேள்வியையும் ஒரு குழந்தையின் ஆர்வத்துடனும், ஒரு இளைஞனின் தேடலுடணர்வுடனும், முதிர்ச்சியின் தீவிரத்தன்மையுடனும் கே.ட்டுக் கொண்டிருந்தார். போம் மிகப் பொறுமையாகவும் , நிதானமாகவும் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஜே.கே யின் ஒரு சில கருத்துக்களுடன் ஒத்துக் கொள்ளாத் தன்மையை மௌனமாகவே கடந்து சென்றது போல் எனக்கு தோன்றியது.
இந்த உரையாடல் பார்வையாளர்களையும் சிந்திக்க தூண்டுவதாகவே இருந்தது.
1.மனிதகுலம் தவறான பாதையில் சென்று விட்டதா ?
2.. ஏன் இங்கு இவ்வளவு முரண்கள்?
3. மனிதர்களுக்கிடையேயான முரண்பாடான ஆசைகள் (contradictory desires) தான் அனைத்திற்கும் காரணமா?
4. மனிதன் ஒவ்வொருவனும் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் ஆசையில்தான் அத்தனை முரண்களும் தொடங்குகிறதா?
5 இவற்றின் சிந்தனை தூண்டல் எங்கிருந்து வருகிறது?
6. இவற்றின் மூலத்தோற்றம் (origin ) என்ன?
7. இதில் காலம் எப்படி ஒரு காரணியாகிறது?
இப்படியாக ஆரம்பகட்ட உரையாடல் தொடங்குகிறது. உரையாடலில் ஒரு முடிவையோ, அறுதியான பதிலையோ நெருங்குகையில் அங்கிருந்து மற்றுமொரு கேள்வி எழுவதும் பார்வையாளனை ஆழ்ந்த சிந்தனைக்குள் இழுத்து செல்கிறது.
மனிதன் தன்னகங்காரத்தை (ego) தன் இருப்பை, தனித்தன்மையை வெளிக்கொணர முயற்சிப்பதிலேயே நிலைநிறுத்திக் கொள்கிறான். அங்கு தான் அத்தனை சிக்கல்களும், புதிர்களும் , குழப்பங்களும் உருவாகின்றன எனச் சொல்லும் போது ஜே.கே வுடன் சேர்ந்து நாமும் வியந்து கொள்ள முடிகிறது. ஏன் மனிதகுலம் "நான் " ஐ உருவாக்குகிறது? அதன் தொடக்கம் தான் தன்னுணர்வா (ego)? ஏன் இந்த துயரம்? உண்மையிலேயே இங்கு உள்நோக்கிய இயக்கம் நடைபெறுகிறதா? பரிணாமத்தில் புற வெளியில் ஒரு நல்ல மாற்றத்தை உணர்ந்தாலும் உள்ளுக்குள் நாம் சரியான பாதையில் செல்கிறோமோ என்ற ஐயம் ஜே கே விற்கு இருப்பதாக நான் புரிந்து கொண்டேன். அதனை தொடர்ந்தே இந்த கேள்வியை முன்வைக்கிறார். பின்பு நம் மூளை ஆற்றலை ஆதரமாக பயன்படுத்திக் கொள்கிறதா? என்ற யதார்த்தமான கேள்விகனையே தொடர்ந்து ஜே கே முன்வைக்கிறார். ஆனால் அதை சிந்தித்து பார்க்கும் போது ஏன் எதற்கு? என்ற கேள்வியும் ... இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்ற கேள்வியும் நமக்கும் எழத்தானே செய்கிறது! ஓரிடத்தில் ஜே.கே. இத்தனைக்கும் நம் மூளை பழக்கப்பட்டுவிட்டதா என வியக்கிறார். பிறகு அதனை தொடர்ந்து மூளையை என் மூளை என்று சொல்வதா? இப்பொழுதிருக்கும் மூளை எத்தனை காலமாக பரிணமித்து வந்திருக்கிறது என்ற கேள்வி என்னை சில கணங்கள் உறைய வைத்தது. உயிர் குலம் தோன்றிய காலத்திலிருந்தே அத்தனை உயிர்களின் தடயங்களையும் அல்லவா அது சுமந்து கொண்டிருக்கிறது. தடயங்கள் மட்டுமா அவை .... நம் முன்னோடி சந்ததியினர் சந்தித்த அத்தனை தடங்கல்களுடன் போரிட்டு வென்று அந்த கனியை அல்லவா நமக்கு கொடுத்திருக்கிறது. அதனை எப்படி அவ்வளவு எளிதாக என்னுடையது என சொல்லி விட முடியும்... நம் மூளை என்பது மொத்த உயிர் குலத்தின் சாரம் அல்லவா? அதிலும் ஒரு துளி தானே அதை நாம் பிரபஞ்ச உணர்வின் ஒரு துளியாகத்தானே உணரனும்... அப்படி இருக்க நாம் எப்பொழுதிருந்து இது என்னுடையது என சொல்லத் தொடங்குகிறோம்.
இவ்வாறாக என் எண்ணங்கள் மேலேழுந்து வர அடுத்த கேள்வி தொடர்கிறது. பரிணாமம் என்பதே காலத்தில் திகழ்வதுதானே! அப்படியிருக்க காலம் மூளையை ஆட்கொள்கிறதா? என்ற கேள்வியை ஜே.கே எழுப்புகிறார். அப்போ முரண்களின் மூல காரணம் காலமா? என்ற கேள்வியை தொடர்ந்து இங்கிருக்கும் எதெல்லாம் காலத்திற்கு உட்பட்டது, காலத்திற்கு அப்பாற்பட்டது எது என இருவரும் தொடர்ந்து உரையாடுகிறார்கள். எண்பத்தைந்து வயது மனிதர் எப்படி இவ்வாறாக தொடர்ந்து சிந்திக்க இயல்கிறது என்பதே எனக்கெல்லாம் வியப்பாக இருக்கிறது.
இந்தப் பதிவிலேயே ஏகப்பட்ட கேள்விகள் உள்ளன. இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தொடர்கிறேன். மொத்தமாக இந்தப் பதிலில் தொகுப்பது ஒரு அயர்ச்சியை உருவாக்கும் என நினைக்கிறேன். ஆகவே இத்துடன் நிறுத்திக் கொண்டு நாளை தொடரலாம்... இல்லை சிந்திக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக