ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் டேவிட் போம் உரையாடல் - 2
கடந்த பதிவில் காலம் பற்றிய கேள்வி எழுந்து வந்தது இல்லையா? உரையாடலுக்கு நடு நடுவே ஜே.கே.விற்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. அகவயமாகவும், புறவயமாகவும் மாற்றங்களில் காலம் எப்படி செயல்படுகிறது என்ற உரையாடலில் உளவியல் ரீதியாக காலம் (psychological time) என்ன செய்கிறது என்ற இடத்திற்கு வந்து சேர்கிறார்கள். அந்த வகையில் மனம் (mind) என்பது காலத்திற்கு உட்பட்டது அல்ல. அதற்கு கடந்த காலம், எதிர்காலம் என்றில்லாமல் நிகழ் தருணத்திலேயே திகழக் கூடியதாக உள்ளது.
ஆனால் மூளை காலத்திற்குட்பட்டு செயல்படுகிறது. அவ்வாறெனில் அனைத்து முரண்களின் மூலம் காலமா என கேள்வி எழுப்புகிறார் ஜே.கே. அதற்கு போம் உளவியல் நேரத்தை தானே குறிப்பிடுகிறீர் என கேட்க ஜே.கே ஆம் என கூறிவிட்டு நாம் பொருளற்ற விவாவதங்களை செய்கிறோமோ... என கேட்டுவிட்டு ... அப்படி அல்ல இது எல்லாமே பொருட்படுத்த வேண்டியவை தான் என்று கூறி சிரித்துக் கொள்கிறார்.
மூளையின் அனைத்துப் பகுதிகளும் காலத்திற்குட்பட்டு இயங்குவதில்லை. ஒரு பகுதியை மட்டும்தான் காலம் ஆள்கிறது. பின் அறிவுச் செயல்பாடு அனைத்தும் காலத்தை சார்ந்து தான் செயல்படுகிறது என்கிறார்.
//அவன் அறிந்ததை அவனது மனம் அறியவில்லை. மனமறிந்ததை அவனது சொல்லறியவில்லை. ஆனால் அறிந்ததே அவனாக, அறிதலை அறிய அவனில்லாத ஒருமையில் அங்கே கிடந்தான். // ஈராறு கால் கொண்டெழும் புரவி - ஜெயமோகன்
எனக்கு இதை கேட்ட பொழுது ஒரு எண்ணம் மேலெழும்பி வந்தது. பருப்பொருட்கள் தன்னை ஓரிடத்தில் நிலைநிறுத்திக் கொள்ள அவற்றிக்கிடையே ஈர்ப்பு விசை செயல்படுவது பற்றி அறிவியலில் படித்திருக்கிறோம். அது போல மூளையில் ஒரு பகுதி காலத்திற்கு உட்படாமல் எண்ணங்களை உருவாக்கிக் கொண்டே இருக்க இன்னொரு பகுதி அந்த எண்ணங்களை காலத்தில் நிறுத்தி வைத்து அறிவாக்குகிறது.
யோக சூத்திரத்தில் "சித்த விருத்தி நிரோதம் " என்றொரு சூத்திரம் உண்டு.
அப்படியிருக்க நம் இருப்பை நிறுவிக் கொள்ள, நம் தனித்துவத்தை மேம்படுத்த, நம்மை பிறவற்றிலிருந்து வேறுபடுத்தி காட்ட முயலும் செயல்களுக்கெல்லாம் நாம் காலத்தை உருவாக்கிக் கொள்கிறோம். இல்லையெனில் காலம் இதனை நிகழ்த்துகிறது எனலாமா? என்றொரு கேள்வி எழுந்து வந்தது.
தொடர் உரையாடலில் நம்மை பற்றிய அறிவு என்பதே காலம் என்றனர். இந்த இடத்தில் ஜே.கே. அப்படியானால் காலம் தான் நம் எதிரி என்று சொல்லி சிரிக்கிறார். மூளையைப் பற்றிய பேச்சில் அது அறிவை உருவாக்கிக் கொள்ளும் சாத்தியத் திறனை கண்டு கொண்டு ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து தான் எல்லாமும் உருவாகி வருகிறதா? என்ற கேள்வியை ஜே.கே எழுப்புகிறார். அதாவது வெற்று எண்ணங்களாக இருக்கும் போது இங்கு எதுவும் நிகழ்வதில்லை. எண்ணங்களை நிகழ்த்திப் பார்க்கும் போது அவை அறிவாகிறது, புறவயமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.
என்னுடைய இளம் பிராயத்தில் திரை அரங்கில் திரைப்படம் பார்க்கும் போது ப்ரொஜெக்டர் அறையிலிருக்கும் ஒரு சதுர வடிவ துளையிலிருந்து வரும் வெற்று ஒளிக் கற்றை எப்படி இப்படி இவ்வளவு பெரிய திரையில் காட்சியாக விரிகிறது என்பதை பார்த்து பார்த்து வியப்பேன். அப்பொழுதெல்லாம் ப்ரொஜெக்டர், ப்ரொஜெக்டர் மேன் இருப்பதெல்லாம் நான் அறிந்திருக்கவில்லை. நான் பார்ப்பது ஒளிக்கற்றையும் திரைப்படமும் தான்...
காணொளியின் இடையிடையே என் எண்ணங்கள் எழுந்து வரும் போதெல்லாம் காட்சியை உறையச் செய்து விட்டு பிறகு மீண்டும் தொடருவேன். ஜே.கே யின் கேள்வியான ஒன்றுமில்லாத ஒன்று என்னவாக இருக்கும் என யோசிக்கிறார். அது ஆற்றலாகத்தானே இருக்க முடியும். இங்கிருக்கும் அனைத்திலும் உறையும் ஆற்றலை பார்க்கிறோம் என்கிறார். உடனே போம் அதனை ஆமோதித்தார். ஜே.கே. இந்து மதத்தில் சொல்லும் ஆத்மன், பெளத்தத்தில் சொல்லும் தர்மம், இதனை அறிவீர்களா என்றார். கிறிஸ்துவத்தில் சொல்லும் பாவம் (Sin) சரிதானே! எனவும் கேட்டுக் கொண்டார். பிறகு இந்த ஆற்றலின் மூலம் என்ன என்று கேட்க சட்டென போம் ஆற்றலிற்கு மூலம் தேவையில்லை என்றார். ஜே.கே.விடம் நீண்ட அமைதி . போம் மீண்டும் அது ஒரு அணுகுமுறைதான் என்றார். இந்த இடத்தில் அவர்களின் உரையாடல் முடிந்தது.
ஆனால் என் சிந்தனை தொடங்கியது. தத்துவ வகுப்பில் நடந்த விவாதங்கள், நண்பர்களுடான உரையாடல், என நீண்ட நேரம் மண்டைக்குள் ஏதோ ஏதோ ஓடிக் கொண்டிருக்க அந்த எண்ணங்களை விரட்ட என்னுடைய ஆப்த வாக்கியங்களை மனதில் சொல்லிக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்தேன்.
முற்றும்.
பி.கு இந்த காணொளி 1 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடியது. முழுவதுமாக பார்த்து விட்டு என் நினைவில் நின்றவைகளை மட்டுமே தொகுத்து எழுதியுள்ளேன். நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக