பேங்கோ - சுனீல் கிருஷ்ணன் வாசிப்பனுபவம்

"விண்மீன்களே உங்கள் ஒளியை ஒளித்து வையுங்கள் அவை எனது ஆழத்து இருண்ட இச்சைகளின் மீது ஒளி பாய்ச்சாமல் இருக்கட்டும் " என மெக்பெத்தின் மனக் குரல் ஒலிக்க 

தன்  மீது விழுந்த வெளிச்சத்தினாலே தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு  அடையாளத்தை துறக்க நேர்ந்த கலைஞனின் ( இவரை எழுத்தாளர் என்று மட்டும் சொல்ல மனம் வரவில்லை)மரண சாசனமாக ....  

அதிகாரம் பேங்கோவைக் கொல்லலாம் .... அவனுள் வாழ்ந்த அறத்தை கொல்ல இயலுமா?... .. கலைஞனின் அடையாளத்தை காவு வாங்கிய அரசு ஒரு போதும் அவனுள் உறையும் அந்த தேடலை நிறுத்தி வைக்க முடியாது.... வெட்டி வெட்டி வீழ்த்தினாலும் முளைத்தெழும் சாத்தியத்தை ஏந்தியிருக்கும் பிரம்மன் அவன்..... அவனுக்கு தெரியும் தன் படைப்பை எப்படி நிகழ்த்தனும் என !.....

இலக்கிய பேராசியரின் இலக்கிய திறனாய்வில் அரிபுரத்து முன்னோடி எழுத்தாளர்களின் படைப்பு தமிழ் இலக்கிய முன்னோடி எழுத்தாளர்களின் ஆகச் சுமாரான கதைகளினும் சுமாரான கதைகளாகவே அவதானித்திருந்தார். அரிபுரத்தின் இலக்கிய முன்னோடியான புதுமை விரும்பியை சந்திக்க அரிபுரத்து நண்பன் இனியனுடன் பெருமழை பிடிப்பதற்கு முன்பான மெல்லிய தூறலில் அமைந்தது புதுமை விரும்பி யை கதை சொல்லியுடன் வாசகர்களும்  அறிந்து கொள்ள முஸ்தீபாக இருந்தது. புதுமை விரும்பியை சந்தித்த முதல் தருணம் நாடக அரங்கில் அவர் மொழி பெயர்த்த ஷேக்ஸ்பியர் நாடகத்தின் தனித்துவமான மொழி கதை சொல்லியிடம் ஆர்வத்தை  தூண்டக் கூடியதாக அமைந்தது. பிந்தைய சந்திப்பில் அவர் நடிக்கவும் செய்வார் என அறிந்ததும் அவர் எந்த கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார் எனக் கேட்டதும் அவர்  " பேங்கோ " என்றதும் அணுக்கமாக கதை சொல்லி உணர்ந்ததும்... கதை போக்கில் ஒரு  மாற்றம் நிகழப் போவதை ஆசிரியர் உணர்த்தி விடுகிறார்.

கதை சொல்லியும், புதுமை விரும்பியும் சந்தித்த போது அவருக்கு தனது புத்தகங்களை கொடுத்த தருணம் அவரும் அணுக்கமாக எண்ணியதை உணர முடிகிறது.

கதை சொல்லி புதுமை விரும்பியின் நாட்குறிப்பின் மீது ஆர்வம் கொண்டு வாசித்ததில் அவருடைய அரசியல் கொள்கையால் சிறை சென்றதும், தன்னை காத்துக்கொள்ள தான் சொந்தமாக எதுவும் எழுதக் கூடாது என்று அரசுக்கு உறுதியளித்ததும்... என தகவல்கள் தெரியவருகின்றன....

ஒரு மனிதன் மிகவும் அஞ்சக் கூடிய விஷயம் சுவடின்றி காணாமல் ஆக்கப்படுவமோ என்பதுதான் என்கிறார் புதுமை விரும்பி. தன் வாழ்நாள் முழுவதும் அடையாளத்திற்காக அல்லாடும் நிலையை அவர் எழுத்தில் கதை சொல்லி காண்கிறார். அதன் பிறகு புதுமை விரும்பியை சந்தித்த போது அவர் தன் அடையாளத்தை அழித்த அரசுக்கு எதிராக ஷேக்ஸ்பியரை மொழி பெயர்த்து  நடு விரலை காட்டியதாக கூறுகிறார்.

ஒரு படைப்பாளியிடம் இருந்து அவன் படைப்பூக்கத்தை எத்தனை பெரிய வலிமையினாலும் அழித்து விட முடியாது ... அது  //" அலெக்சான்டர் சக்கரவர்த்தியாகவே இருந்தாலும் அந்த அரண்மனை வட்டாரத்துக்குள்ள புழங்குற பகடி கதை மாதிரி" // வளர்ந்து வரக் கூடியது ...

ஷேக்பியர் ஒரு கலையாக சிறிது சிறிதாக புதுமை விரும்பியின் உறுப்பாக மாறி மடங்கியிருந்த மற்ற விரல்களையும் விரியச் செய்த இடம் கலை அவனுக்கு அருளிய இடம்... அசோக மித்ரனின் உருவத்தில் "வாழ்க்கைனா அப்படித்தான் இருக்கும் இருக்கும்னு " உணர்த்தும் வாஞ்சை புதுமை விரும்பியை கனியச் செய்தது.... அதன் பின் அவர்  எழுதிய கவிதைகள் அரிபுரத்திற்கு அவர் அளித்த ஆசிர்வாதங்கள்.

அரிபுரத்தில் அவர் //முதுமையில் உதிர்த்த புத்தனின் பல் // மண்ணில் முளைவிட்டு   தன்னை நிறுவிக் கொண்டாலும் பல்லுக்கடியில் நெறிபடும்  ஓசைகளை கே.ட்டுக் கொண்டே  மறுக்கப்பட்ட ருசியை தேடிக் கொண்டே  இருக்கிறார்.அவருக்கான வாசகன் பிறந்து பிறந்து வருவான். கலைஞனுக்கு ஒரு போதும் அழிவில்லை.... "வெளிச்சத்தை விட உதாசீனம் நல்லது "

இன்னும் மேலதிகமாக சில கருத்துக்கள்

இதில் கையாளப்பட்டிருக்கும் கவித்துவமான தருணங்கள் வாசகனின் மனதை அறுத்து பார்க்க கூடியதாகவும் ... கதையை எலிவேட் செய்யக் கூடியதாகவும் அமைந்திருக்கிறது.... 

பேங்கோ மெக்பெத்தின் ஆடி பிம்பமாக இருப்பதனாலேயே கொல்வதும் அதே நேரத்தில் மெக்பெத்தின் அறவுணர்ச்சி குற்ற உணர்ச்சியாக அவன் மனம் முழுதும் தேள்களாகி கொட்டினாலும் அவன் இம்மியும் அசையாமல் அதிகாரம் செய்தல் ஒரு பழக்கமாக அவனை அடிமைப்படுத்தி அவனை ஆட்கொள்கிறது.

இப்படித்தானே இங்கு ஒவ்வொரு அமைப்பும் அதிகார செயல்பாட்டில் மக்களை காவு வாங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த அதிகார பகடை யாட்டத்தில் படைப்பாளிகள் சிக்கி சின்னா பின்னமாகி போய் விடுவதும் ... நடக்கத்தான் செய்கிறது... அதில் எவரோ சிலர் தன் கலையின் மகிமையால் இந்த இயற்கையின் பேராடலை உணர்ந்து தன் மீட்சியை அடைகிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாசித்த நூல்களின் பட்டியல் - 2025

"அப்பா"- சிறுகதை

கர்நாடகா பயணம் - 4