ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் டேவிட் போம் உரையாடல் - முன்னுரை

சமீபத்த்தில் முடிவுற்ற பிரம்ம சூத்திரம் வகுப்பு ஒரு அலாதியான அனுபவத்தை கொடுத்தது. தொடர்ந்து 6 வருடங்களாக வாசிப்பில் இருந்தாலும் சிந்தனை என்பது என்ன? என்பது பற்றிய தெளிவான விளக்கம் அறியாமல் இருந்தேன். ஜெ அடிக்கடி கூறுவதுதான் ஒரு விஷயத்தை எடுத்து கூறத் தெரியாாவிடில் நம் அறிதல் முழுமை இல்லை என்றும்  பெரும்பாலும் அதை அறிந்திருக்கவே இல்லை என்றுமே கூறுவார். அப்பொழுதெல்லாம் என் போதாமையை நினைத்து வருந்தியதுண்டு. தொடர்ந்து வாசிப்பை மட்டும் நிறுத்தியதில்லை. சுக்கிரி உரையாடலில் தொடர்ந்து பங்கு பெற்றாலும் கூட  எனக்கு தொகுத்து கூறுவதில் போதாமை இருப்பதை உணர்ந்து கொண்டேன். எனது விடா  முயற்சியின் காரணமாக  ஜனவரி மாத இறுதியில் கம்பராமாயணம் பாலகாண்டம் பகுதியில் மூன்று படலங்களை தொகுத்து சிறப்பாகவே விளக்கி கூற முடிந்ததில் சிறிது தேறியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.

நாம் பெரும்பாலும் நமது எண்ணங்களை சிந்தனைகள் என்று நினைத்துக் கொள்வதாக ஜெ கூறுவார். எங்களுக்கு தத்துவ வகுப்பில் கற்றுத் தரப்படுவது பல்வேறு சிந்தனை முறைகள் . நான் அதன் நோக்கத்தையோ பயன்பாட்டையோ அறியாமலே கற்றுக் கொண்டிருந்தேன். ஆசிரியர் சொல்வதை மட்டும் பின்பற்றிக் கொண்டிருந்தேன். பிரம்ம சூத்திர வகுப்பில்தான்  என்னையுமறியாமல் நான் சிந்திக்க தொடங்கியிருந்தேன் என்பதை உணர்ந்தேன். ஜெ வகுப்பில் கொடுத்த பயிற்சியில் நான் மிகவும் பதட்டமடைந்தேன். பதட்டத்திற்கான பல காரணங்கள் தெரிந்திருந்தது ஆனாலும் முக்கியமாக ஒரு காரணத்தை அன்று உணர்ந்தேன். நான் சிந்திக்க துவங்கியது என் மூளைக்கு பழக்கமில்லாத விஷயம். பெரும்பாலும் நாம் வாழ்வின் சிக்கலான தருணங்களில் அந்த அந்த தருணங்களுக்கு ஏற்றவாறே எதிர்வினை ஆற்றுகிறோம் ... சில நேரங்களில் அது நல் வினையாகவும் சில நேரங்களில் தீவினையாகவும் சென்றடைகிறது. . ஆனால் நான் எது எப்போது என்ன வினைபுரிகிறது என்று புரிந்து கொள்கிறேனா? தெரியவில்லை... இன்று யோசித்துப் பார்க்கும் போது என் வினைபுரிதலுக்கு ஏற்றவாறு என் உடலும், மூளையும் பழக்கப்பட்டிருக்கு அவ்வளவுதான். எந்த  விழிப்புணர்வுமின்றி நான் செயல்படுத்தியிருக்கேன் என்று உணர முடிகிறது. ஜெவின் பயிற்சியில் என் , வினைபுரிதலை , என் கற்பிதங்களை தொகுத்து கொள்ள முடிகிறது ... அதனை என் மொழியில் விவரிக்க முடிகிறது... இதை எழுதும் போதே மனம் "யுரேகா யுரேகா "என சப்தமிடுவதை உணர்கிறேன். ஆம் நான் சிந்திக்கிறேன்.

ஜே கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல் காணொளியின் கருத்துகளை தொகுக்க முற்பட்டு இந்தக் கட்டுரையை எழுத தொடங்கி முன்னுரை போல என் அனுபவத்தை கூறியிருக்கிறேன். இதற்கு முன்  ஜே.கிருஷ்ணமூர்த்தியின் காணொளிகளை பார்த்ததோ புத்தகங்களை படித்ததோ இல்லை. என் புரிதலில் ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் என்று  அசோகமித்திரன் கதைகள் வழியாக அறிந்திருந்தேன். நண்பர் ஷாகுல் அவருடைய புத்தகம் ஒன்றை பரிந்துரைத்த நினைவும் உள்ளது. இயற்பியலாளர் டேவிட் போம் பற்றிய அறிமுகமும் எனக்கு இல்லை. பிரம்ம சூத்திர வகுப்பு முடித்து வந்த பிறகு தத்துவ வகுப்பு வாட்ஸ் அப் குழுமத்தில் நண்பர் தேஜஸ் இந்த காணொளிகளை பகிர்ந்திருந்தார். வகுப்பில் சிந்தனை முறைகளின்  விவாதங்களில் பெரும்பாலும் ஸ்தம்பித்து நிற்கக் கூடிய இடம் உணர்வுகளைப் பற்றிய விவாதத்தில் தான். அறிவியலும், தத்துவமும் மனித சிந்தனை தோன்றிய காலத்திலிருந்து உணர்வுகள் எப்படி எப்பொழுது, எங்கிருந்து  தோன்றியது என்ற பெரும் கேள்வியை நோக்கியே செல்கிறது. அவரவர் துறை சார்ந்து இன்றும் அதனை விளக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். அப்படியாக இரு வேறு சிந்தனை தரப்பிலிருந்து இரு நபர்கள் சந்தித்த உரையாடல் காணொளியின் மூலம் நான் எவ்வளவு அதை புரிந்து கொள்கிறேன். அவர்களின் ஊடாக என்னால் மேலும் என்  சிந்தனையை வளர்த்தெடுத்துக் கொள்ள முடிகிறதா... குறைந்த பட்சம் தொகுத்து கொள்ள முடிகிறதா என பார்க்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேனிற் காலம்

வாசித்த நூல்களின் பட்டியல் - 2025

கர்நாடகா பயணம் - 4