ஈராறு கால் கொண்டெழும் புரவி - குறிப்புகள்
ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆசிரியர் ஜெயமோகன் தளத்தில் இருக்கும் கதைகளையும், குறுநாவல்கள் மட்டுமே வாசித்து கொண்டிருப்பேன். அப்பொழுதெல்லாம் புத்தகம் வாங்கும் பழக்கமும் இல்லை. நூலகங்களில் புத்தகம் எடுத்து வாசிப்பதும், இணைய தளங்களில் வாசிப்பதுமாகவே பழக்கமாயிருந்தது. அப்படி வாசித்து வந்த காலத்தில் ஜெயின் இந்த குறுநாவலை வாசித்திருந்தேன். பெரிதாக புரியவில்லை என்றாலும் கூட வாசிப்பின்பம் அலாதியாகவே இருந்தது. கதையின் பல இடங்களில் உணர்வு நிலைகள் என்னை தீண்டக் கூடியதாக இருந்தது. வரும் திங்கட்கிழமை கூட்டு வாசிப்பனுபவ பகிர்வை இணைய சந்திப்பின் வழியாக ஐரோப்பிய விஷ்ணுபுரம் வட்டம் நிகழ்த்த விருப்பதாக நண்பர் ஸ்ரீராம் தகவல் அனுப்பியிருந்தார். மணி அண்ணா நாவலை பற்றி ஒரு உரை ஆற்ற விருப்பதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் மறுவாசிப்பு செய்யலாம் என நினைத்து நேற்றிரவு வாசிக்க தொடங்கி இன்று மதியம் முடித்திருந்தேன்.
சைவ சித்தாந்தத்தை மையமாக கொண்டு எம். சாத்தன் குட்டி பிள்ளை என்ற கதாபாத்திரத்தின் வாழ்க்கை கதையாக நன்றாகவே நினை விருந்தது. இந்த மறுவாசிப்பில் என்னை மிகவும் ஈர்த்தது கதையில் வரும் திருமந்திரம் பாடல்கள்.
"நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார்
பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோல் ஒன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மால் ஒன்று பற்றி மயங்குகின்றார்களே "
இந்தப் பாடல் ஒன்றை வைத்து மட்டுமே பிள்ளையின் வாழ்வை புரிந்து கொள்ள முடியும். பிள்ளை ஆயுட்காலம் முழுதும் கையில் கோலாக தன் சித்தாந்த அறிவை பற்றிக் கொண்டிருந்து விட்டார். அறிவாக, மந்திரச் சொல்லாக எந்நேரமும் உறுபோட்டுக் கொண்டிருந்தாலேயே அவருக்கு ஒரு போதும் தெளிவு கூடி வரவில்லை. எந்நேரமும் தத்தளித்துக் கொண்டே இருக்கிறார்.. ஒரு வேளை பிரசவத்தில் நாகம்மை பிழைத்திருந்தால் பிறந்த குழந்தைக்கு தந்தையாகி இருந்தால் அவருக்கு விடுதலை கிட்டியிருக்குமா?
பிள்ளை நாடார் காலில் விழுந்து "ஆதாரப் பிழை என்ன "என்று கேட்டப்பவே ... "சொல்லை விடனும் வே " என்று உரைத்தும் பிள்ளை க்கு சத்தில் விளைந்த சித்தும், சித்தத்திலே விளைஞ்ச சித்தும் கூடியதே ஒழிய சித்த நாதனை உணர முடியாமத்தான் போனார். கால் பாவும் இடங்களில் எல்லாம் நீரோட்டம் அறிந்தார்.... உலோகம் அறிந்தார்.... அனலும் அறிந்தார்.... ககனத்தையும் அறிந்தார்.... அத்தனை அறிதல்களையும் ஊனை உருக்கி ஏற்றி வைத்திருந்தார் . ஒரு போதும் அந்த கோலை விடவில்லை.
"உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங் கொள் வார்க்கு நமன் இல்லை
விச்சு விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்க வல்லானே."
பிள்ளையிடம் பயின்ற ஞானமுத்தன் இயல்பாக அடைந்த ஞானத்தை ஊனுருகி மலை விட்டு கீழிறங்கி ஞானமுத்தனை சந்தித்த போதே உணர்ந்து கொண்டார் . ஞானமுத்தன் வீட்டில் உயிர் போகும் நேரத்தில் ஞானமுத்தன் மருமகள் நெஞ்சோடணைத்து நீரூட்டையில் பிள்ளையின் நினைவில் நாகம்மை தாயாகி எழுந்து வந்தாள். அவளின் கருணையிலேயே பிள்ளைக்கு கோலை விட முடிந்தது ... கூடாப் பறவைகள் கூடின... சித்தம் தெளிந்தது .... ஆனந்தத்தில் ஐக்கியமானாார் பிள்ளை .
கருத்துகள்
கருத்துரையிடுக