கவிதையும் கணிதமும்

கடந்த தத்துவ வகுப்பில் நண்பர் இளையராஜா ஜெ தளத்தில் எழுதிய "பொய்பித்தல்வாதம்vsபேய்சியன்வாதம்"  என்ற அறிவியல் கட்டுரையை அறிமுகப்படுத்தினார். வீட்டிற்கு வந்ததும் ஜெ தளத்தில் அந்த கட்டுரையை தேடிப் பார்த்ததில் அகப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் ஜெ தளத்தில் வாசித்து கொண்டிருக்கும் போது அறிவிப்பு பகுதியில் பார்த்து கிளிக்கி அந்த பக்கங்களை எனது வாட்ஸப் எண்ணில் சேகரித்து வைத்து கொண்டேன் . ஜெலின் முன்னுரை மற்றும் நான்கு பகுதிகளாக இருந்த இளையராஜாவின் கட்டுரையை நேற்று வாசித்து முடித்தேன்.

சுவாரசியமான கட்டுரைதான்... ஆனால் என்னால் துல்லியமாக புரிந்து கொள்ள முடிந்ததா என்றால் கேள்விக்குறிதான். .இயலாமை  எப்பொழுதும் பெரும் சீண்டலாகத்தான் இருக்கிறது . அதற்கான வழியாக  எழுதி தொகுத்து பார்க்கலாம் எனத் தோன்றுகிறது. முதலில் இந்த கட்டுரையில் புரிந்து கொள்ள முடியாத பகுதியாக இருந்தது கணிதச் சமன்பாடுகள் தான் . ஆனால் ஆசிரியர் சமன்பாடுகளுக்கான விளக்கத்தை தான் கொடுத்திருக்கிறார். ஆனாலும் எனக்கு கணிதத்துறை சார்ந்து   அறிதல்கள் மீச்சிறு அளவு என்கிற போது புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. எனக்கு புரிந்த வகையில் தொகுத்து கொள்ளும் போது புரியாத பகுதிகளை சிறிதளவாது எட்ட முடிகிறதா என்று முயற்சிக்கிறேன்.

இன்று காலையில் பேரா . கரு. அறுமுகத் தமிழன் உரை ஒன்று கேட்க ஆரம்பித்த போது திருப்பாவை பத்தொன்பதாவது பாடலை குறிப்பிட்டு உரையை தொடங்கினார். அந்தப் பாடலே எனக்கு இந்த  கட்டுரை எழுத தூண்டுகோலாக அமைந்தது. பாசுரத்தின் இறுதி வரியான "தத்துவமன்று தகவலோர் " இளையராஜாவின் கட்டுரைக்கு அர்த்தப்படுகிற மாதிரி தோன்றியது . அடிப்படையில் ஒரு கொள்கையை நிறுவ தரவுகள் தான் மிக முக்கியம் ... அதை எப்படி அறிவியல் பொய்பித்தல்வாதம் , பேய்சியன்வாதம்  மூலம் வரையறுத்துக் கொள்கின்றது என்பதை இந்த கட்டுரை விரிவாக பேசுகிறது.

பொதுவாக அறிஞர்களின் சிந்தனை மாபெரும் தாவலில்தான் தொடங்குகிறது. ஐன்ஸ்டீனின் E=mc2 தியரி ஆற்றல் என்பது கட்டற்ற நிலையில் இருக்கும் பருப்பொருள் என சொல்வது ஆகச் சிறந்த கவிதை அல்லவா! இதை முதன்முதலில் அவர் உணர்ந்த போது அவருக்கு அகவயமாக பெரும் தரிசனமாக இருந்திருக்கும். ஆனால் அறிவியல் உலகில் நிரூபிக்க அவருக்கு தரவுகளும் , சான்றுகளும் தேவை. அதை வரையறுத்துக் கூறுவதிலும் சில கறாரான முறைகள் இருப்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொண்டேன்.

கட்டுரையின் முதல் பகுதியில் அறிதலில் உள்ள இடர்களிலிருந்து தொடங்குகிறார். இதை வாசிக்கும் போதுதான் நாம் ஏற்கனவே  அறிந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பில் (மிதப்பில்)  மண்ணை வாரிப் போட்டது போல உணர்ந்தேன். நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சிறு சிறு விஷயங்கள் கூட எல்லளவு ஐயத்திற்கு உரியது .... இயற்கையை அறிதலில் நமக்கும், இயற்கைக்கும் இடையே பெருஞ்சுவர் உள்ளது. சுவருக்கு அப்பால் நடப்பது ஒன்றும்  தெரியாமலேயே ஒரு ஊகத்தில்தான் நாம்  பார்க்கும் உலகத்தை வரையறுத்துக் கொண்டு இருக்கிறோம்.... அந்த ஊகங்கள் எப்போது வேண்டுமானாலும்  தவறாகப் போவதற்கும் வாய்ப்புண்டு. ஒரு கோட்பாட்டை உருவாக்கும் போது அதனை பொய்ப்பித்து போகும் அளவிற்கும் வாய்ப்புக்களை வைத்தே உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம். இப்படி இருக்க கோட்பாட்டினை நிறுவிக் கொள்ள அறிஞர்கள் தரவுகளுக்கும் முடிவுகளுக்கும் உள்ள தொடர்பு  திட்டவட்டமாக , ஆதாரபூர்வமாக இருக்குமளவுக்கு கூரிய வாதத்தை எடுத்துரைக்க வேண்டிய தேவையில் இருக்கிறார்கள்.

நான் இதைத்தான் கவிதைக்கும் கணிதத்திற்கும் முடிச்சப் போட்டு பார்க்கிறேன். கோட்பாடை கவிதையாக வரித்துக் கொண்டால் அதை வாசிக்கும் அனைவருக்கும் தனக்கானதாக மாற்றிக் கொள்ள நம் மனம் தத்தம் அனுபவத்தை கொண்டு தர்க்கப்படுத்திக் கொள்ள முயல்கிறது. அறிவியலில் அதை புறவயமாக நிரூபிக்க வேண்டி உள்ளது. அனுபவங்களை நிகழ் தகவுகளாக்கி அதன் முடிவுகளை கொண்டு கோட்பாட்டிற்கு வலு சேர்க்கிறது இல்லையேல் நிராகரிக்கிறது. இந்நிலையில் நிகழ்தகவுதான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்ற முடிவுக்கு வர முடியுமா என்று கேட்டால் அதுவும் இல்லை என்றுதான் பதிலளிக்கிறது. சில நேரங்களில் சோதனைகள் நாம் எதிர்பார்க்காத முடிவுகளை கொடுத்து விடுகிறது. சுவருக்கு அந்தப்பக்கம் என்ன என்பது புதிர் தானே! 

புதிர்களை அவிழ்க்கும் தோறும் தெளிவு என்று சொல்லிவிடவும் முடியாது. புதிர்களை அவிழ்க்கும் அந்த கணத்தில் புதிய புதிர்கள் நம்முன் வந்து நிற்கின்றன. ஒவ்வொரு கணமும் நம் மனம் புதிர்களை அவிழ்க்கும் சமன்பாடுகளை உருவாக்க வேண்டிய நிர்பந்தத்தில்தான் இருக்கின்றன. இதுவரை நவீன அறிவியல் இருவகையில் பிரபஞ்சத்தை விளக்க முயற்சித்தது. குவாண்டம் இயற்பியல் வழியாக கண்ணுக்கு தெரியாத அடிப்படை பொருட்களையும் , சார்பியல் கோட்பாடு வழியாக பிரபஞ்சத்தின் பிரம்மாண்ட செயல்பாடுகளையும் விளக்க முயற்சித்தார்கள். அவ்விரண்டு கோட்பாடுகளுக்கிடையே ஏகப்பட்ட முரண்கள் அப்படி இருக்க  இவ்விரண்டு கோட்பாட்டையும் ஒருங்கிணைக்கும் நீண்ட கால கனவினை நவீன அறிவியல் கொண்டுள்ளது. அதற்கான முயற்சியில்தான் இழை கோட்பாடு ஒன்று வருகிறது. ஒரே கோட்பாட்டின் மூலம் பிரபஞ்சத்தின் அனைத்து ஆடல்களையும் சமன்பாட்டின் மூலம் விளக்க முயல்கிறது.

 சமன்பாடுகள் முழுமுதல் உண்மையை நோக்கிய நகர்வை முன்னெடுக்கிறது. அதனை அடைந்து விடுவோமா என்று தெரியாது.... சமன்பாடுகளை கொண்டு  முடிந்த அளவுக்கு பாதையில் இருக்கும் கல் முள் போன்ற இடர்களை நீக்கி சீரிய பாதையை உருவாக்குகிறார்கள் அறிஞர்கள். என்றேனும் கவிதையும் , கணிதமும் இணையுமா!.... இல்லை ரயில்பாதை போல இணையாகச் செல்லுமா! .... "யாமறியோம் பராபரமே" என்று தாயுமானவரின் கவிதையை முன்வைத்து விட்டு பின்னங்கால் பிடறி தட்ட ஓட வேண்டியதுதான் .




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேனிற் காலம்

வாசித்த நூல்களின் பட்டியல் - 2025

கர்நாடகா பயணம் - 4