ஜே.ஜே. சில குறிப்புகள் வாசிப்பனுபவம்

சு.ரா. வின் ஜே.ஜே. சில குறிப்புகள் புத்தகம் மூன்று வருடங்களுக்கு முன் வாசித்தது..போன வருடம் சு.ராவின் கட்டுரை தொகுப்புகள் சிலவும், ஒரு புளியமரத்தின் கதை நாவலும்  வாசித்த பிறகு இந்த புத்தகத்தை மறுவாசிப்பு செய்யலாம் என்று எண்ணம்  எழுந்திருந்தது.  முதல் வாசிப்பில் சு. ரா. வின் கச்சிதமான மொழி நடையும் நாவல் முழுவதும் தெறித்திருக்கும் கூர்மையான சொற்பிரயோகங்களும் கையில் பென்சில் எடுத்திருந்தால்   அடி கோடிட்டு செல்ல வேண்டிய ஏராளமான வாக்கியங்களையும் கொண்ட ஒரு புத்தகமாக  நினைவில் இருந்தது. இன்று மீண்டும் வாசிக்கையில் அந்த உணர்வை சிறிதும் இழக்காமல் அதே புத்துணர்வோடு வாசிக்க முடிந்தது.  ஆனால் வாசிப்பின் வேகம் குறைந்திருந்தது. சில பாராக்களை மீண்டும் மீண்டும் வாசித்து லயித்து கொண்டிருந்தேன். சில பாராக்களை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாமல் தவித்தும் போயிருந்தேன்

ஜே. ஜே. சில குறிப்புகள் வழக்கமான கதை சொல்லும் பாணியில் அமைந்த நாவல் அல்ல. இந்த நாவலை ஒரு வரியில் சொல்லுவது என்றால் பாலு என்கிற எழுத்தாளர் தன் ஆதர்ஷ மலையாள எழுத்தாளரான ஜே.ஜே. வை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்யும் பொருட்டு அவரை பற்றிய குறிப்புகளை சேகரிக்கிறார் அவ்வளவே. இந்த ஒரு வரியை , கலைத்து போட்ட பல மனங்களின் வடிவ நேர்த்தியிலும், கவித்துவமாகவும் , வாசகனின் மனதில் இரக்கமின்றி பாய்ச்சும் கூர் கத்தி போன்ற மொழியினைக் கொண்டும் நாவலாக்கியிருக்கிறார் ஆசிரியர். 

ஒரு ஆளுமையை பற்றிய விசாரணை என்கிற போது நாவலின் இந்த வடிவம் கச்சிதமாக பொருத்திப் போகிறது. சிறிது உடல் நலத்தில் பலவீனமும் கனவுகள் நிறைந்த மூளையும் கொண்ட இளம் எழுத்தாளன் பாலு ஜே. ஜே யின் இறப்பை எண்ணியவாறு நாவல் தொடங்குகிறது . வறுமையின் காரணமாகவே இலக்கிய உலகில் எத்தனை இழப்புகள் என்று  அங்கலாய்த்துக் கொள்வதா? அதிர்ச்சிகுள்ளாகுவதா? என்று நம்மிடேயே எழும் உணர்வு போலத்தான் நாவல் முழுவதும் கேள்விகளும் , விசாரணைகளும், விமர்சனங்களுமாக செல்கிறது.

பாலு புத்தகம் எழுதும் பொருட்டு ஜே. ஜே . பற்றி அவன் நண்பர்கள், குடும்பத்தார்கள், சக எழுத்தாளர்கள் என பலரிடம் விவரம் கேட்டுக் கொள்கிறான். பாலு ஜே.ஜே வை நேரில் சந்தித்த நினைவுகளையும், தான் அந்த காலகட்டத்தில் கொண்ட சிந்தனைகளையும் மீட்டிக் கொள்கிறான். பின்பு ஜே.ஜே. யின் நாட்குறிப்புகளையும் மொழி பெயர்த்து ஜே.ஜே . பற்றி வரையறுத்து கூற முயல்கிறான்.

ஜே.ஜே வை ஒரு பெர்ஃபெக்சனிஸ்ட் என கூற இயலுமா? பொலிட்டிக்கலி அது சரியான பிரயோகமா? நாம் வாழும் சூழலில் யார் அந்த பரிபூரணவாதி இப்படி யோசிக்கலாம் . ஆனால் எழுத்தாளன் என்பவன் இப்படித்தானே இருக்கனும்... என்ற எண்ணமும் கூடவே எழுகிறது. ஒரு எழுத்தாளன் அந்த பரிபூரணத்தை நோக்கிய தேடலும், பயணமும் கொணடவனாகவும்  அதை எழுத்தில் வடிவாக்க முயல்பவனுமாக இருக்க வேண்டும் என  ஜே.ஜே சொல்கிறான்.  தான் நம்பும் தத்துவத்தை தன் வாழ்வில் கடைப்பிடிக்காத எழுத்தாளனை கண்டிக்கக் கூடியவனாக இருக்கிறான். ஜனரஞ்சக எழுத்தின் மீது தன் ஒவ்வாமையை வெளிப்படுத்தக் கூடியவனாகவும் இருக்கிறான். பாலு தன்னை ஜே ஜே விடம் அறிமுகமாக்கிக் கொள்ளும் இடத்தில் "என்ன சிவகாமியின் சபதம் நிறைவேறியதா?" என எள்ளிய போது தமிழின் முக்கிய படைப்பாளிகளை அவனிடம் அறிமுகப்படுத்தனும் என்கிற பாலுவின் இளைய மனதின் துடிப்பும் ... கா.நா.சு. வின் விமர்சனக் கட்டுரைகள் படித்த போது இந்த மாதிரியான எண்ணங்கள் கா.நா.சு விடம் இருந்ததை அறிய முடிந்தது.

ஜே. ஜே. சக எழுத்தாளர்களை மட்டுமல்ல தான் வாழ்ந்த காலத்தின் மாபெரும் ஆளுமையாக இருந்த காந்தியை தொடர்ந்து விமர்சிக்கிறார். அவரது சிந்தனைகளை கேள்விகளுக்குள்ளாக்கி பார்க்கிறார். ஓரிடத்தில் ஜே ஜே. தன்னிடத்தில் இரந்து நிற்கும் தொழுநோயாளிக்கு உதவலாமா என யோசித்து முடிவெடுக்கும் போது அவன் போய் விடுகிறான் ... அவனைத் தேடி அலைந்து ,பிறகு வேறு ஒரு நோயாளிக்கு காசைக் கொடுக்க அவன் அதை தூக்கி எறிகிறான். ஜே. ஜே வி னால் அந்த புறக்கணிப்பை தாள இயலவில்லை.

இந்த மாதிரியாக ஜே. ஜே தன்னையும் தன் சமூகத்தையும் தன்னை சுற்றியுள்ள இயற்கையையும் கூர்ந்து கவனிப்பதில் தன் கண்களை மேலும் மேலும் சுருக்கிக் கொண்டே போகிறான். இயற்கையை , ரயில் நிலையத்தை பார்த்து வியப்பதும் அதன் மூலம் தன் உள்ளொளி கொண்டு வாழ்க்கையை, மனித உறவுகளை பார்ப்பதுமாக குற்ற உணர்வும், பெருமிதமுமாக ஒரு கொந்தளிப்பு நிலையிலேயே வாழ்கிறான். ஆல்பெர்ட் காம்யூ மாண்டதற்கு மறு நாள் இறக்கிறான். ஜே. ஜே. ஒரு பரிபூர்ணவாதியாக இங்கிருக்கும்  ஒவ்வொன்றின் பாவனைகளை, பொய் முகங்களை தோலுரித்து தோலுரித்து உண்மைகளை தேடிச் செல்லும் கலைஞனாக ... இல்லை இல்லை... கால்பந்தாட்டக்காரனாக... இல்லை  இரண்டுமாக தர்க்கத்தில் ஒரு காலும் கவித்துவத்தில் ஒரு காலுமாக வைத்து வாழ்ந்து மரிக்கிறான்.

இந்த நாவலில் தெறித்திருக்கும் பல வரிகள் என்றும் மறக்க முடியாதவை

"நாகரீகத்தை உருவாக்க முயன்ற சட்டாம்பிள்ளை மனிதனின் நெடுந்தூரப் பயனத்திற்கு பின் வந்து சேர்ந்தவன். பரிபூரணத்திற்கும் , மனிதனுக்கும் உள்ள இடைவெளியை காட்டும் துரோகத்தை நிகழ்த்தியவன் இவன் தான்".

இந்த வரியை வாசித்த  போது சமுதாயத்திற்கு அந்த துரோகிகள் தானே  வேணும் என மனம் எண்னியது.

முடிவாக இந்த நாவலைப் பற்றி பாலுவின் வார்த்தையை கொண்டே சொல்லலாம் எனில்

புரியாத எழுத்தில் இரண்டு விதம்... ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக் கூடியது... மற்றொன்று ஆர்வம் ஏற்படுத்தக் கூடியது....

இந்த நாவல் இரண்டாவது வகையை சேர்ந்தது..




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேனிற் காலம்

வாசித்த நூல்களின் பட்டியல் - 2025

கர்நாடகா பயணம் - 4