மழைப்பாடல் -குறிப்புகள்

மண்ணில் ஒவ்வொரு உயிரும்  தன் தாகத்தை தணித்து கொள்ள விண்ணை நோக்கி இறைஞ்சி நிற்கின்றன. உயிர்களின் இறைஞ்சுதலுக்கு விண்ணவனும் அருளுகின்றான். அவன் அருள் தாகத்தை தணிக்கும் ஆனால் அது யாருக்கு, எப்போது, எங்கு என  அவன் மட்டுமே அறியும் ஆடலில் அல்லவா இருக்கிறது .

பாரதவர்ஷமோ தன்னை ஆளப் போகும் பேரரசன் யார் என்ற தவிப்பில் இருக்க  குருதி மழை கொண்டு தன் தாகத்தை தணித்துக் கொள்ளுமோ எனும் அச்சத்தில் ஒவ்வொருவரும் வேண்டியும் , விலக்கியும் ஒரு அரசு சூழ்தலை  நிகழ்த்தி பார்க்கிறார்கள். மாந்தர்கள் தானியற்றிய சூழ்தலில்   சிக்கியும், உழன்றும், சில நேரங்களில் நிறைந்தும் , பின் கனிந்தும் விடுபடுகிறார்கள். ஆனாலும் இயற்கை அவ்வளவு எளிதில் தன் ஆடலை முடித்து கொள்வதில்லை தானே! அங்கு எப்போதும் மழை வேண்டி பாடும் தவளையின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

தேவபாலபுரத்தில் பீஷ்மர் இருக்கையில் அஸ்தினபுரியில் இருந்து தூது வர கிளம்புகிறார். தொடர்ந்து அரண்மனைக்குள்  அரசியர்கள் இருவர்களுக்குள்ளும் மோதல்களும் கசப்புகளும் இருப்பதை உணர்ந்திருந்த  சத்யவதி திருதாவின் திருமணத்திற்கான  முயற்சி எடுக்கிறார்.சத்யவதி பல்வேறு கணிப்புகள் திட்டங்கள் கொண்டு காந்தார இளவரசியை தேர்ந்தெடுக்கிறார்.

திருதா தன் அன்னையை கன்றை நக்கும் பசு போல அறிந்து வைத்திருந்தான்.அம்பிகை இழந்த அனைத்தையும் அவன் உடலாக, ஆற்றலாக, நூறு மகன்களின் அன்பாக .... அவனிடம் கூடியிருந்தது. விழியிழந்தவன் கைகளில் எழும் அன்பால் மற்றவர்கள் நிறைகிறார்கள். தன்னை இசையால் நிறைத்துக் கொள்கிறான் . அவன் காண இயலாத இந்த உலகத்தை இசையால் கண்டைகிறான். அவன் உடலும் , இசையால் அறியும் உலகமும் ததும்பிக் கொண்டே இருப்பன.


சந்திரகுலத்து அரசர் யயாதியின் தீச்சொல்லை பெற்று நாடு துறந்த துர்வசு அவனுடைய சாலை நண்பன் ரணசிம்மன் மற்றும் ஆயிரம் வீரர்களுடன் சப்த சிந்து , கூர்ஜரத்தையும் கடந்து வந்து காந்தரத்தை அடைந்தார்கள். அவர்கள் அங்கு வாழ்ந்த பழங்குடிகளிடம் பெண் கொண்டு குலத்தை நிறுவிக் கொண்டனர். இன்று காந்தரத்தை ஆள்வது சகுனி. அவனுக்குள் இருக்கும் அவமதிக்கப்பட்டு துரத்தப்பட்ட துர்வாசனின் குருதி முதிர்ந்து விட்டது போல விட்டு வந்த அனைத்தையும் வெற்றி கொள்ள விழைவு கொண்டிருந்தது. எதிரிகளே இல்லையென்றாலும் உருவாக்கிக் கொள்ளும்  அவா கொண்டவனாகிய சகுனியின் வாழ்க்கை புதிய திக்கொன்று நோக்கி எழுவதாக கணித்துச் சொல்லியிருந்தான் நிமித்திகன். பிதாமகர் போலவே பொருள் வல்லமையே படை வல்லமையாகவும் , குலப் பெருமையாகவும் மாறும் யுகம் பிறந்திருப்பதையும் உணர்ந்திருந்தான்.

திருதாவிற்கு வசுமதியை பெண் கேட்டு வந்த பீஷ்மரின் தூதை அரசரும், சகுனி மற்றும் மற்ற தமையன்களும் தங்களை சத்திரிய குலமாக நிறுவிக் கொள்ள  சந்தர்ப்பமாக சிந்தித்து கொண்டிருந்தாலும் திருதாவின் விழியின் மை ஒரு தயக்கத்தையும் உருவாக்கியிருந்தது. மகதனின் குதிரைச் சவுக்கால் ஏற்பட்ட அவமதிப்பும் தீரா வடுவாக  உருமாறியிருந்ததையும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். சகுனியோ  பிதாமகரின் தூதை மறுத்து விட்டிருந்தான். ஆனால் வசுமதியோ சகுனியிடம் "பாரதவர்ஷமே நம்மை நோக்கி கொண்டிருக்கும் வேளையில் நாம் அவையில் வைப்பது நிமிர்வும், கனிவும், நட்புமாக இருக்கட்டும்  நான் உன் கனவுகளை எப்போதும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் தம்பி" என்று கூற பீஷ்மருக்கு விருப்பம் தெரிவிக்கப்படுகிறது.

லாஷ்கரர் (காந்தார தொல் மக்கள் ) விழியிழந்தவனை மணமகனாக ஏற்க மறுக்க திருதா அவர்களை அடித்து வீழ்த்தி வசுமதியை தூக்கி வருகிறான். வசுமதியின் மனதில் திருதா புயல் நிலை கொள்வது போல் இறங்கியிருப்பதை உணர்கிறாள். புயலில் திளைக்கிறாள்.

லாஷ்கர முறையிலும் வைதீக முறையிலும் 7 நாட்களாக திருமணச் சடங்குகள் நடந்தேறின. புயலில் திளைதத்துக் கொண்டிருந்த வசுமதி மஞ்சன அறையில் திருதாவின் அக இசையை அறிகிறாள். அவன் இசையில் ததும்புவதை, தன் இசையை தானே  மாந்தி தன்னை நிரப்பிக் கொள்ளும் அவன் வாழ்விற்கு ஏங்குகிறாள். தன் விழிகளை கட்டிக் கொண்டு திருதாவின் இனிய கணங்களாக வாழ்நாள் முழுவதும் தான் திளைத்திருக்க முடிவெடுக்கிறாள். மழைசாட்டைகளால் அறைபட்டு சேற்று வெளி துடித்துக் கொண்டிருந்த ஹஸ்தியின் மண்ணில் வசுமதி தன் கால்கள் பதித்து கோட்டைக்குள் நுழைந்தாள்.

யயாதிக்கு தேவயானியில் யதுவும், துர்வசுவும் பிறந்தனர். யது தன் படையினருடன் நிலம் தேடி  பர்ணசா  என்னும் ஆற்றின் படுகையை அடைந்தான். அங்கு கண்ட பசுவையே தெய்வ ஆணையாக கொண்டு யாதவ அரசை அமைத்துக் கொண்டான். 

யாதவகுலத் தலைவன் சூரசேனர், மரிஷி தம்பதியரின் இளைய மகள் பிருதை தாய் முறை மரபுரிமையை பின்பற்றி வரும் மார்த்திகவதியை ஆண்ட குந்தி போஜனுக்கு வளர்ப்பு மகளாக இருந்தாள். யாதவ குலத்தில் பிறந்திருந்தாலும் பிருதை  சத்ரிய குணத்தோடு அரசு நூல் பயின்று, மதி சூழ்கை கற்று வளர்ந்திருந்தாள். ஏதோ ஒரு வகையில் விருஷ்ணிக குலத்தில் தனித்து விடப்பட்ட மரீஷையின் உள்ளாழமே பிருதையாக வளர்ந்திருப்பதாகவே உணர முடிகிறது. துர்வாச முனிவர் கற்றுக் கொடுத்த மந்திரத்தை சோதித்து பார்க்க கர்ணனை கருவுறுகிறாள். திருமணத்திற்கு முன்பே கருவுற்றதால் அதனை கலைக்கும் முயற்சியில் நாகத்தால் காக்கப்படும் குழந்தை என அறிகிறாள். மதுராபுரியில் கம்சனுடன் வளரும் தன் தமையன் வசுதேவன் உதவியால் தேவகியின் கன்னிமாடத்தில் சூரிய மைந்தனாகிய கர்ணனை பெற்றெடுக்கிறாள்.

பிருதையை மணமுடிக்க எண்ணி கம்சன் அவளை கடத்த முயலும் முயற்சியில் ஈடுபட பிருதை  தன்னை காத்துக் கொள்ளும் முயற்சியில் கர்ணனன யமுனை நதியில் தொலைத்து விடுகிறாள். மறுபுறம் பிருதையை பெண் கேட்டு அஸ்தினபுரியிலிருந்தும் தூது வருகிறது. பெண் கோரல் விதுரனுக்காகவா, பாண்டுவிற்காகவா என்ற குழப்பம் நீடிக்க பிருதை கம்சனைமணம் தன்னேற்பு நிகழ்விற்கு அழைப்பு விடுத்து தூது அனுப்புகிறாள். 

பாண்டு பிதாமகர் மற்றும் விதுரனுடன் மணத்தன்னேற்பு நிகழ்வில் கலந்து கொள்கிறான். விதுரனுக்கும் அகத்தில் ஒரு ஓரத்தில் பிருதையின் மீது ஈர்ப்பிருப்பதை உணர முடிகிறது. மாத்ர நாட்டு இளவரசன் சல்லியனும், கம்சனும் சுயம்வரத்தில் கலந்து கொள்ள பாண்டுவோ அவர்கள் இருவரில் ஒருவனையே பிருதை தேர்ந்தெடுப்பாள் என ஊகித்து தவித்து  கொண்டிருக்க பிருதை தன் கழுத்தில் மாலையிட திகைத்துப் போனான்.

பிருதையின் கருவிற்கு காரணம் சல்லியராக  இருக்கும் என்ற ஐயமும் எழுந்து வந்தது. பிருதை கர்ணனைப் பற்றி வசுதேவனிடம் வினவ யாதவ குலத்தில் திருமணத்திற்கு முன்பு கருவுறுதல் இயல்பாக இருந்தாலும் ஷத்ரிய குலத்தில் ஏற்கப்படமாட்டாது என்று கூற குந்தியும் அதை ஆமோதித்து தன் கணவன் பாண்டுவிடம் அனைத்தையும் கூறப்போவதாகவும் கூறுகிறாள். மேலும் அவள் கம்சனை தவிர்த்து பாண்டுவை தேர்ந்தெடுத்த அரசு சூழ்தல் முறையையையும் விவரிக்கிறாள். குந்தி ஒரு போதும் அந்தப்புரத்தில் அடங்கியிருக்கும் எளிய ஷத்ரியப் பெண் அல்ல என்பதை உறுதி கொள்ள முடிகிறது.பாண்டுவிற்கு தன் தாய்மையே தேவையாயிருப்பதை குந்தி உணர்கிறாள். பாண்டுவின் இறைவன் ஆறுமுகன் என்பதை அறிவதன் வழியாக அவன் விழைவையும் அறிந்து கொள்கிறாள்.

தம்பிக்கு இணையான மதிசூழ்கையும், படைக்கல கல்வியும் கற்ற  வசுமதியோ திருதாவின் மேல் கொண்ட காதலில் கண்களைக் கட்டிக் கொண்டு அவனுலகில் அடங்கிக் கொள்ள  பிருதையோ பாரத வர்ஷத்தின் பேரரசியாகும் எண்ணத்திலேயே மதி நுட்பத்துடன் பாண்டுவின் மனைவியாகிறாள்.பிருதை கம்சனை நிராகரிக்கும் காரணமாக சொல்லுவது அழிக்க விழைபவன் அழிவையே அடைவான் என்று கூறும் பொழுதே பாரத வர்ஷத்தின் மணிமுடி யாரை வந்தடையும் என்று குறிப்புணர்த்துவது போல் உள்ளது.

அரசேற்பு மதிசூழ்தல் பொருட்டு சகுனி அஸ்தினாபுரி நுழைதல் தொடர்ந்து அம்பிகை, அம்பாலிகை பூசல் மேலும் தீவிரமடைகிறது. இந்த இக்கட்டுகளை எல்லாம் விதுரன் ஒவ்வொரு முறையும் தீர்த்து வைக்கின்றான். திருதா அரசேற்கும் பதவி பொருட்டு பாண்டுவிற்கு அஸ்தினபுரி நிலத்தில் அவன் பங்கிற்கு ஈடாக அஸ்வகந்த வைரத்தை அளிக்கிறன். திருதாவின் அரசேற்பிற்காக அனைத்து இக்கட்டுகளையும் தீர்த்து திறம்பட திகழ்ந்த விதுரன் மேல் உவகை கொண்ட பாண்டு அஸ்வகந்த வைரத்தை பரிசளிக்கிறாான்.

திருதாவின் மணிமுடி சூட்டல் தகவலை சத்யவதி முறைப்படி மக்களுக்கு தெரிவிக்க கருதி ஆணையிட அச்செய்தி மக்களுக்கு முன்னரே தெரிந்திருந்தது . மக்களும் வாழ்த்தொலி எழுப்ப அக்கணத்தில் சார்வாக்காரிடமிருந்து எதிர்ப்பொலியும் எழுந்து வருகிறது. திருதாவின் முடி சூழும் மங்கல நாளில் இமயத்தின் அடிவாரத்தில் புவியதிர்வு நிகழ்ந்ததாக செய்தியும் வந்து சேர குல மூதாதையர்கள் அதனை தீக்குறியாக எண்ணி முடிசூட்டலை நிராகரிக்கிறார்கள். இப்படியாக திருதாவின் அரசேற்பு நிகழ்வு தடைபட குழப்பங்கள் தொடர சத்யவதி , விதுரன், பிதாமகர்,கலந்துரையாடி காந்தாரிக்கு பிறக்கும் மூத்த மகனுக்கே மணி முடி என சகுனிக்கு வாக்களித்து மருமகனை பேரரசனாக்கும் பொறுப்பையும் ஏற்று கொண்டு அஸ்தினபுரியில் நீடிக்குமாறு வேண்டுதல் வைக்கிறார்கள். விதுரனின் சாதுர்யமான உரையாடல் திருதாவை மனமிறங்கச் செய்து பாண்டுவை அரசேற்க வைக்கிறான்.

 பாண்டுவின் அரசேற்பு செய்தியினால் குந்தி பெருமிதமும் மகிழ்ச்சியும் ஒரு சேர கொண்டிருந்தாள். ஆனால் அது கர்வமாக ஒரு போதும் தன் உடல் மொழியில் வெளிப்படாதவாறு நடந்து கொள்கிறாள். கண்களிலும் உதட்டிலும் புன்முறுவலை  எப்போதும் ஏந்தியிருந்தாள். அவளின் பார்வையும், புன்முறுவலும் சகுனியையும் , காந்தார இளவரசிகளை எரிச்சல் கொள்ளச் செய்யும் எனவும் அறிந்தே செய்தாள். தேவயானியின் மணிமுடி மேல் கொண்ட கனவு படிப்படியாக அவள் மனதை விட்டு இறங்கவும் செய்தது. அதே போல் சத்யவதியும் யாதவகுலத்தை சேர்ந்தவளாகிய குந்தி மணிமுடி சூட இயலாது என்றும் கூறினாள். இதனையும் அறிந்து காந்தர இளவரசிகள் குந்தியை சீண்டிக் கொண்டே இருந்தார்கள். அவர்களுக்கும் குந்தி ஓர் அரசியாக மறுமொழி கூறி அவர்களை தவிர்த்து சென்றாள்.

பீஷ்மர் பாண்டுவிற்காக பெண் கேட்டு மாத்ர நாட்டிற்கு பயணம் செய்கிறார். சத்யவதியின் திட்டங்களை முறியடித்து அஸ்தினபுரி அரியணைக்கு சந்திரியர்களின் வலிமையை கூட்டுவதில்தான் அவர் எண்ணம் இருந்து வந்ததாக தோன்றுகிறது. சல்லியர் தன் தங்கையை பாண்டுவிற்கு மணமுடித்து கொடுத்து குந்தி மேலுள்ள கசப்பை காட்டுவதாக பாண்டு எண்ணி எரிச்சல் அடைகிறான் . ஆனாலும் கூண்டு ப் பறவையாக தன்னை செயலற்றவனாக உணர்ந்து குந்தியிடம் தன்னை ஒப்புக் கொடுத்து விடுகிறான் குந்தியும் மாத்ரியின் மீது இயல்பாகவே பொறாமை கொள்கிறாள் . ஆனால் குஹ்யமாசைத்தில் தன் முகத்தை பார்த்த போதுதான் அவளுடைய ஆத்மார்த்த எதிரி காந்தாரி என்பதை உணர்கிறாள் . மணியறையினுள் பாண்டு மாத்ரியுடன் காமம் கொள்ள பாண்டு நினைவிழக்கிறார்.

பாண்டுவிற்கோ காமம் கொண்டால் உயிர் போகும் சாபம் உண்டு. இந்தநிலையில் காந்தாரிக்கு நல்ல வாய்ப்புண்டு . அவள் கருவில் உருவாகும் மைந்தனே அஸ்தினபுரியின் அரசன் என்ற வாக்கிற்கு மேலும் வலு சேர்க்க கூடியதாக அமைகிறது. சத்யவதியின் எண்ணங்களைப் பார்க்கையில் அவள் எப்பொழுதும் குந்திக்கு ஆதரவாக இருக்கிறாள். இந்த இக்கட்டான சூழலில் பாண்டு   முற்றிலும் விலங்கிடப்பட்டதாகவும் தான் பலியாகுவதாகவுமே உணர்ந்து அதிலிருந்து விடுபட எண்ணி வாழும் சில வருடங்களில் தன் அகமகிழ்விற்காக கானேகுகிறான்.

விதுரனின் தாய் சிவையை பற்றி எண்ணும் போது தன் ஞானமைந்தனால் கிடைத்த இந்த பெருவாழ்வு மகிழ்வா இல்லை தனக்கிட்ட சங்கிலியா என்ற ஐயத்துடனே வாழ்ந்து வந்தாள். வலிந்தும் தன் இடத்தை அவளால் அமைத்து கொள்ள இயலவில்லை . அவளால் தனக்கு கிடைக்கும் ஏற்பையும் முழுதாக அனுபவிக்க இயலவில்லை . ஐயங்கள் சிறிது சிறிதாக அச்சமாக வளர்ந்து வந்து நிலைகுலைய ஆரம்பித்தாள். தன் மகனை அஸ்தினபுரியின் அரசனாக்கும் விழைவும் எழுந்து வர தொடங்கியது. இதெல்லாம் அவளை இறுக்கி ஓரிடத்தில் அமரச் செய்து அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்க்க வைத்தது.

விதுரன் உத்தரமதுராபுரியின் துணை வேண்டி அந்நாட்டு இளவரசி சுருதையை மணமுடித்தான். விதுரனின் திருமணத்தில் கூட சிவை பெரிதாக விருப்பம் காட்டவில்லை. அங்கிருந்து நகர்வதிலேயே கவனம் கொண்டிருந்தாள் . சிவை எப்போதும் தன் அங்கீகராகத்திற்க்காகவே காத்திருப்பதாக தோன்றியது.
 அதனாலேயே அவள் அனைத்து இடங்களிலும் அவமதிக்கப்படுவதாக உணர்கிறாள் . விதுரன் கூட தன் தாயை மறந்துதான் போயிருந்தான். விதுரனைப் பற்றிய பாதுகாப்பின்மையும் அவளிடம் குடியிருந்தது.

விதுரனுக்கு பராசரரின் தேவி விஷ்தவமும், பாண்டு அளித்த அந்த வைரமும் மனதில் ஒரு கனவாக வளர்ந்து கொண்டிருந்து அது என்னவாக வளர்ந்தது பின்வரும் நாவல்களில் சொல்லப்படலாம். தற்சமயம் அது அவனுக்கு நிறைவை கொடுக்கக் கூடியதாக இருந்தது. மறுபக்கம் அஸ்தினபுரியின் வடக்கிலும் தெற்கிலும் காந்தாரப் படை குடியிருப்புகள் காடுகளை அழித்து நீண்டு விரிந்திருந்தது. சகுனி சிறிது சிறிதாக அஸ்தினபுரியில் வேரூன்ற தொடங்குகிறான்.

அஸ்தினபுரியில் நடைபெற்ற கலிவழிபாடும் , நரிகள் நகருக்குள் நுழைவதும் பெருங்களிறு உபாலன் இறந்ததும் விதி தன் பகடையாட்டத்தை துவங்கியது என புரிந்தது. நாவலின் முற்பகுதியில் காந்தாரியின் பெருங்காதல் தெரிந்தது.... அந்த காதல் ஆண் மனதில் சிறு பகுதியே என்ற நடைமுறை தெரிந்ததும் அகமும் புறமும் கசந்து கொண்டிருந்தாள்... சகுனியின் கனவில் பகடையில் வெல்லும் பேருருவன் இப்படியாக அனைவரின் உள்ளத்தில் பெருகி வரும் விழைவை காந்தாரி தன் கருவில் சுமந்து கொண்டிருந்தாள். அதே வேளையில் கலியை வெல்லும் வாயு மைந்தனின் கதாயுதமும் மண்ணைப் பிளந்து வெளி வந்தது.

சதசிருங்கத்தில் குந்தி பாண்டுவிடம் கர்ணனின் பிறப்பு பற்றி கூறுகிறாள். மேலும் பாண்டு கேட்பதற்கிணங்கி தருமன், பீமன், அர்ஜுனனை பெற்றெடுக்கிறாள். பின்பு மாத்ரியும் நகுலன் சகதேவனையும் பெற்றெடுக்கிறாள்.தருமனை நிறைசூலியாக கொண்டிருந்த சமயத்தில் அஸ்தினபுரியின் தீக்குறிகளை தூதின் வழியாக அறிகிறாள் குந்தி.  "பிறப்பும் இறப்பும் ஊடியும் கூடியும் பின்னும் வலையால் ஆனது இப்புடவி என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் இங்கு நிகழும் அனைத்துடனும் இணைந்துள்ளது "என்ற சூதரின் சொல்  கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் பிறப்பினால் உணர முடிகிறது. துரியோதனனை கருவில் சுமந்து கொண்டிருந்த காந்தாரி கொடுங்கனவுகளில் ஆட்பட்டிருந்தாள். துரியோதனன் பிறந்த பிறகு அந்த பேருடலனை காக்க வேண்டி நூறு மைந்தர்கள் வேண்டுமென தன் இளையவர்களிடம் கூறுகிறாள். அஸ்தினாபுரி நூறு மைந்தர்களால் நிறைந்தது. சதசிருங்கம் பாண்டுவின் ஐந்து மைந்தர்களால் பொலிந்தது.

சாதகப் பறவை கதையில் வரும் தாய்ப்பறவை தன் தசையை குஞ்சுகளுக்கு உண்ணக் கொடுத்து இறப்பதும் மாத்ரிக்கு அதைக் காண்பித்து விட்டு செண்பகக் காட்டினுள் மாத்ரியுடன் கூடி பாண்டு இறப்பதும் மைந்தர்களுக்காக பாண்டு  தன்னையே அளித்து கொண்டவனாக தெரிகிறான். அதை மாத்ரியும் உணர்ந்து ஆமோதித்து பாண்டுவின் மறைவிற்கு பின் அவளும் எரிபுகுகிறாள் . 

நாவலின் தொடக்கத்தில் அம்பிகை அம்பாலிகை அரசிகளுக்கிடையேயான மோதல்களும் கசப்புகளும் பாண்டுவின் மரணத்தில் தணிந்து சத்யவதியுடன் காடேகுகிறார்கள். அவர்களின் தாகம்.... விதியின் ஆடலில் தணிந்ததா?.... தணிக்கவே முடியாத தாகமா?... ஆனால் அரசு சூழ்தலில் இந்த பகடையாட்டத்தினை புரிந்து விலகிச் செல்கிறார்கள் . ஆனால் மழை ஒரு போதும் இந்த மண்ணை நிறைக்காமல் போவதில்லை. ... மழைவேண்டி தவளையும் வேதம் ஓதிக் கொண்டேதான் இருக்கப் போகிறது .








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேனிற் காலம்

வாசித்த நூல்களின் பட்டியல் - 2025

கர்நாடகா பயணம் - 4